Sunday, October 28, 2012

காற்றைக் கிழித்தபடி..!


பூமியில் புதைந்து
புதுமையாய் எழுகிறது
ஓர் நாற்று..

சகதியில் புரண்டு
சகலமும் அடங்கி
சலனமற்றதாய்
ஓர் காற்று..

காற்று..
அது நாற்றை தேடி
ஓலமிட
நாற்று..
அது
காற்றை கிழித்து
கூச்சலிடும்..

ஆயிரம் பிணந்தின்னிகளும்
நூறாயிரம் காட்டேரிகளும்
பலகோடி சாத்தன்களும்
படபடக்கும் நிசப்தவேளை..

காற்றைக் கிழித்த
நாற்றுமட்டும்
காலதேவனை
நாடிச்செல்லும்..

காலதேவனின்
காலடித்துகள்
காலத்தையே
மறைத்து நிற்கும்..

அணுவுக்குள்
கருவாகி
ஆகாயமே
அகண்டமாகும்..

நாற்று மட்டும்
நிர்க்கதியாகி
நாயகனின்
காலடி சேரும்..!

Thursday, October 25, 2012

கலக்கம் வேண்டாம் காரிகையே..


இதயத்தில் தினம்
உனை சேர்க்கின்றேன்..
இமைகளில் பல
கவி லோர்க்கின்றேன்..

கனவுகள் மெய்ப்படும்
காலம் வரும்..
காதலால் உனைச் சேரும்
கனவுகள் வெல்லும்..

காத்திரு அன்பே,
வருவேன் உனக்காக..
என் தேவதையே
எந்த தடையெனினும்
தாண்டிவரும் என் காதல்..

என் காதல் கண்ட
தேவதையே..
கலைக்காதே உன் கனவுகளை
கலையாதே-நம் உறவுகளும்..

ஆயிரம் சிறைதாண்டி
ஆண்டவன் உனை வைத்தாலும்
கலங்காதே கண்மணி
உனை காக்க வந்திடுவேன்..

என் உடல் விட்டு
உயிர் போனாலும்
உனக்காக மீண்டும்
உயிர் கொள்வேன்..
என் உயிரோடு
உனைக்காப்பேன்..

உன் மனதில்
நானிருந்தால்
எனக்காய் காத்திரு நீ..

கலக்கம் வேண்டாம்
காரிகையே..
காலமெல்லாம் நான்
உன்னுடன்..!

Wednesday, October 17, 2012

கனவுகளுக்கு தாயாகியவளாய்..!


கட்டியணைத்து
நீ
கவிபாடும் நிமிடங்கள்
இசை பாடும்
என்னுள்..!

*****

உன் புன்னகையில்
மலர்ந்திடும்
நான் எனும்
மலர்..!

*****

நீ விரித்த
ஸ்வாசத்தில்
நினைவிழந்துபோகும்
என் பெண்மை..!

*****

உன் தூண்டலுக்கு
துலங்காமல்
வெட்கும்
இவள்
மென்மை..!

*****

வல்லினமாகிய 
நீ
மெல்லினமாகி
வீசும்போது
வலுவிழந்துபோகும்
பூந்தேகம்..!

*****

காதலிலும்
கவி இசைத்து
கவிகளே
நீயாக
கனவுகளுக்கு
தாயாகியவளாய்
இவள்..!

Tuesday, October 16, 2012

என்னை வாழவிடு..!



அன்பானவளே,
கண்ணீரால் எழுதுகின்றேன்
இக் கவியை..

காதலியே..
கண்ணுக்குள்
பொன்னாய் உனை வைத்தேன்..
உயிருக்குள் உறவாய்
சிலை செய்தேன்..

என்னவளே,
சிதைத்துவிட்டாயடி
நீ என்னை..
சித்தம் கலங்குதடி..
சீக்கிரம் வந்துவிடு!

மரணம் கூட
இனிமைதானடி
மலரே உன்
பொன்மடி
நான் சாய்ந்தால்..

கண்மணி
நீ எனை பிரிந்தால்
வாழ்வே நரகமடி..
வந்துவிடு என்னிடம்..
வாழவிடு என்னை
உன் மனதிடம்..!

Monday, October 8, 2012

நான்..!



கனவுகள்
காணும் பொழுதினிலே
காதலிப்பேன் உன்னை
நான் - உன்
காதலியாகி..!

****
கைகோர்த்து
காலமெல்லாம்
தோள் கொடுத்து
உடன் வருவேன்
நான் - உன்
தோழியாகி..!

****
இதயம் துடித்து
விழிநீர் வழியும் வேளை
இருகரம் சேர்த்து
அணைத்திடுவேன்
நான்
உனக்கான தாயாகி..!

காத்திருத்தல்...!

காத்திருத்தலில் தான்
புரிகிறது..
அன்பே,
நான் 
உன்மீது கொண்ட பாசமும்
நீ
என்மேல் கொண்ட 
காதலின் ஆழமும்..!

Friday, October 5, 2012

உன் முகம் பார்த்ததால்..!



உடைந்து போன
என் கனவுகளை
உனக்காய் 
கோர்த்துவைத்திருக்கும்
என் மனது..!

******
சில நாட்களாய்
பாலைவனமாகிவிட்ட
என் மனதில்
மழை- உன் முகம்
பார்த்ததால்..!

******
மீண்டும் 
கனக்கிறது விழிகள்
எம் 
தொலைந்துபோன
நாட்களை எண்ணி..!

*****
ஏக்கங்களை தந்து
தூக்கங்களை
பறிக்கிறாய்- அன்பான
திருடன் நீ..!

*****
மீண்டும்
உடைந்த கனவுகளை
கோர்க்கின்றேன் - உன்
தரிசனத்திற்காய்..!

காத்திருப்பு!


உனக்கான
காத்திருப்புக்களோடு
நகர்கிறது 
நிமிடம்- ஏமாற்றங்களை
சுமந்தபடி..!

நீ!


நீ
தொலைவாகிப்போனாயோ..
இல்லை
உன்னில்லிருந்து
நான்
பிரிக்கப்பட்டேனோ...?

Wednesday, September 19, 2012

தொலைந்துபோன இசை..



மௌனத்துடன் 
பேசவைத்தாய்..
தனிமையுடன் 
புலம்ப வைத்தாய்..!

தொட்டுவிட்டு
எட்டிச்சென்று
வேடிக்கை
பார்த்தாய்..!

விழிகள் பேசும்
மொழிகள் - அதை
நீ
அறியாயோ..!

தொலைந்துபோன
இசை - அதை
நீ
இசைப்பாயோ..!

அருகில் நின்றாய்
தெரியவில்லை
உன் காதலின்
ஆழம்..!

தொலைவாய்
சென்றாய்
வலிக்குதடா
என்
கண்களின் ஈரம்..!

அருகில் வாராயோ..
விரல்கள் தாராயோ..
நான்
மீண்டும் துளிர்ப்பேனோ..
இல்லை
தவிப்பில் இறப்பேனோ...!

Thursday, September 13, 2012

நிசப்தம் சப்திக்கும் வேளை..



சர்ப்பத்தின் ஓசையுடன்
சலனமற்றதாய்
காற்று...

சகலமும் அடங்கி
உலகமானதாய்
இரவு...

சூழ்ந்துகொண்ட
கருமேகத்துள்
சுடர்விடத்துடிக்கும்
நிலவு...

நிசப்தம்
சப்திக்கும் வேளை
அது..

ஊரோரத்துப் பட்டமரம்
அதில்
ஊசலாடும்
உருவற்ற நிழல்கள்..

காலக் கிருஹத்தின்
கபட நாடகத்தால்
காலமாகிப்போன
நிறமற்ற
சடலங்கள்..

மீண்டும்
நிசப்தம்
சப்திக்கும் வேளை
அது..

Tuesday, August 28, 2012

ஜீவன்கள் பலவிதம்...



தனித்தலின் 
அந்தத்தில்
தலைகீழாய் 
தொங்கும் 
ஜீவன்..

மௌனித்தலின் 
ஸ்வர ஜதியில்
மனதை 
தொலைத்துவிட்ட 
ஓர் ஜீவன்..

சந்தித்தல் என்பது
சலனமாகிப்போக
சங்கதி தொலைந்து 
சரணமானது ஓர் ஜீவன்..

சர்வமும் அடங்கி
சரித்திரம் படித்திட
சாந்தமானது ஓர் ஜீவன்...

கொந்தளிக்கும் 
ஜுவாலைகளில்
வெந்து தணலானது
ஓர் ஜீவன்..

வெட்கம் கெட்ட புன்னகையில்
ஆடையவிழ்த்தது 
ஓர் ஜீவன்..

ஆழ்கடலின் மையத்தில்
அன்பை தேடியது
ஓர் ஜீவன்...

ஜீவன்கள் பலவிதம்
அதிலே
ஒவ்வொன்றும் 
ஒரு ரகம்...

அதிசய ராகமாய்
இசைவான ஜீவன்கள்
அன்னிச்சையின் அந்தத்தில்
அசையத்தொடங்கும்
மீண்டும் ஓர் தேடலுக்காய்...!

Wednesday, August 8, 2012

முத்தம்..



இதழ்களால்
நீ வருடும்
ஒரு 
சுகந்தம் போதும்-
நூறு ஜென்மம்
நான் வாழ்ந்திட..

Tuesday, August 7, 2012

மாறிப்போன பெ/ஆண்மை.. (தறிகெட்டுப்போனவர்களுக்காய்)


ஊரென்பர்.. பேரென்பர்..
நாடென்பர்.. வீடென்பர்..

கன்னியை பார்த்து
கவிதை வடிப்பர்..
அண்ணியுடன் சேர்ந்து
கட்டில் கலை படிப்பர்..

தொட்டிலில் ஆடும்
குட்டிக் குழந்தையைக்கூட
தொட்டுப்பார்க்கும்
வஞ்சக நெஞ்சம்..

பார்வைக்கு அஞ்சி
பயந்தொளியும் பெண்மை
இன்று
பூவுக்கு ஏங்கி
புது சுரம்
பாடுகிறது..

கட்டிவிட்டு
தொட்டுச்சென்ற கணவன்
தொலைவாகிவிட
எரியும் நெருப்பை
கொழுந்தன் அணைக்கின்றான்..

சீதைகளான பெண்கள்
சிதைகளில் மாண்டுபோக
போதைகளாய் கண்கள்
சீர்கெட்டு அலைகிறது..

பத்தாம் வகுப்பில்
பாலியல் சீர்கேடு..
பற்றவைத்தது
பள்ளியின் ஓர் கிளடு..

விதவைகள் கூட இங்கே
விற்பனை பொருட்கள் தான்..
கலவைகளில் அவை கலக்க
விதியெங்கே..? கதியெங்கே..?

சொந்த மகளின்
சுகம் கண்டு
சிதைத்த கதை
கேளீரோ..?

சுட்டுவிடும் சூரியனும்
இதைக்கண்டு
சுடமறந்து கண்ணீர் விடும்..

சித்திர பாவையவள்
சீவிமுடிக்க மறந்திட்டாள்..
உத்தரத்தில் தொங்கிவிட்டால்
உறுத்தலில்லை காணீரோ..?

பெண்ணும் இன்று 
பெண்ணாயில்லை..
ஆணுமின்று
ஆணாயில்லை..
அபலைகளின் வாழ்வுமட்டும்
அந்தரத்தில்..
இது
மாறவில்லை...! 

கனாக்களில்..




கனாக்களில் 
வாழ்கின்றோம்..
தொலைவாகிப்போன 
இனிமைகளுடனும்..
தொலைத்துவிட துடிக்கும்
தனிமைகளுடனும்..

உணர்வுகளால்...




பார்த்து மகிழ்ந்த காலங்கள்..
பழகி ரசித்த நேரங்கள்..
பேசி சிரித்த ராகங்கள்..

தொடர்ந்தனகனவுகள்..
தொலைந்த நாட்களை
மீண்டும் எண்ணியவாறு
நீ அங்கே- நான் இங்கே..
உணர்வுகளால்
நெருங்குகின்றோம்..
உளறல்களை 
கவியாக்கி விதைத்தபடி..!

Sunday, August 5, 2012

என்றென்றும் உரிமையுடன்...!!!



நம்மை இணைத்தது
நலம்கொண்ட நம் நட்பு...
நம்மில் இணைந்தது
கவியமாய் நம் அன்பு...

மௌனமான மனதினிலே
நட்பினாலே நுழைந்தவனே
நலம்கொண்ட உன் அன்பு
நாடாளும் நம் நட்பு...

அன்பான உன் நேசம்
பண்பான உன் பாசம்
கனிவான நம் நேசம்
காவியமாய் நம் நட்பு...

கணம்தோறும்
தினம்தோறும்
மனதோடும் 
கவிபாடி..தொடரட்டும் நம்
நட்பு..என்றென்றும் 
உரிமையுடன்...!!!

உனக்காய்
உன் உயிர்த்தோழி..!

Sunday, July 22, 2012

கவி..



கரம் சேர்த்து
கைகோர்த்து
கவிதைகள் பாடிய
கனவு நாட்களே
இன்று கவியானதே..!

உனக்காய்...



கண்கள் கதைபேசி
கைகள் ஸ்பரிசித்த
கனவு நாட்களை
பரிசளித்திருக்கிறாய் நீ-
எனக்காய்..
அவற்றை 
ஸ்வாசித்தபடி நான் -
உனக்காய்...!

நினைவுகளினால்...




உடைந்து விழும்
கண்ணீர்த்துளியிலும்
உருக்குலைந்தோடும்
உள்ளத்து நினைவுகளிலும்
தெள்ளத்தெளிவாய் தெருகிறாய்..
மீண்டும் மீண்டும்
நெருங்குகிறாய்-என்
நினைவுகளினால்..!

யாசகம் ..




விழிகள் மூடி
உன்னை யாசிக்கின்றேன்..
யாசகனே எனக்கோர்
யாசகம் தருவாயா..?
என்றும் 
உன்னருகிலிருப்பதற்காய்...!

உயிரான என் அண்ணனுக்கு..! (உன் தங்கையின் பாச அலைகள்..! )