Wednesday, December 23, 2015

தனிமைத்தூளி.



நேற்றோடு ஏழுநாட்கள் கழிந்திருந்தன. இன்று எட்டாவது நாள். அந்த பெரிய ஆலமர வேர்களில் தனித்து சாய்ந்திருப்பதுமட்டுமே இப்பொழுதெல்லாம் அவளுக்கு ஆறுதலாயிருக்கின்றது. நட்பு, காதல், நேசம் என்று உறவுகளை வளர்த்துக்கொள்ள அவள் இனியும் தயாரில்லை. இன்றளவும் தொலைத்தவையும் தொலைந்தவையுமே போதுமென்று எண்ணியிருந்தாள். 

"ட்ட்ட்ர்..... ட்ட்ட்ர்...." 

அவள் அலைபேசி அலறியது. ஆறேழு அலறலின்பின்,

 'ஹலோ' 

'ஹலோ பூர்ணா' 

'ம்ம்' 

'என்னம்மா ஏன் கதைக்கல? என்ன ஆச்சு' 

'ஆஹ் நான் கதக்கேல்லயோ. ஓம் ஓம் நான் கதைக்கல. எனக்கு இந்த தனிமைதான் பிடிச்சிருக்கு ஷரத்' 

'ஏய் லூசு என்ன ஆச்சு உனக்கு. நான் தான்டி உன்கூட கதக்கல. மன்னிச்சிடும்மா' 

'இதோபார் ஷரத். நான் உன்னோட சண்டையெல்லாம்போடல. நிஜமாவே கோபமும் இல்லை' 

'பிறகு ஏன்மா மௌனமா இருக்காய்?' 

'ஹஹா மௌனம் ம்ம் மௌனம்தான் அழகானது ஷரத். இந்த மௌனம் மட்டுமே போதும் நான் வாழ. நினைவுகளோடு பேசிக்கொள்வேன் கனவுகளோடே நடந்துசெல்வேன். 
ஹஹ என்ன ஷரத் நான் இப்பிடியெல்லாம் கதக்கிறனெண்டு ஆச்சரியமா இருக்கா? ஏதோ தோணிச்சு அதுதான் சொன்னன்' 

'பூர்ணா இப்பிடியெல்லாம் சொல்லாதம்மா. உன் பிரண்ட்ஸ்கிட்டயும் உன்ன கேட்டன். அவயள் உன்னை பார்க்கலயாம் கனநாளா' 

'ஓம் ஷரத் அவயளுக்கு கனநாளா நான் தேவைப்படல. அதுதான் மறந்துபோச்சினம்போல' 

'ஏன்டி இப்பிடி சொல்றாய்?' 

'ம்ம் விடுங்க ஷரத் சேர் அவங்க அவங்களுக்கு ஆயிரம் வேலை. நீங்க பிசியா இருப்பீங்க. சோ பாய். டேக்கெயார்' 

பொங்கிவந்த கண்ணீரை அணைபோட்டு தடுக்க மனமுன்றி பொட்டல்வெளியை வெறித்தபடி ஆலமர வேரில் சாய்ந்துகொண்டாள். அணைத்துக்கொண்டது தனிமைத்தூளியின் ஆலம்வேர் கூடல். 


-பிறைநிலா-

Monday, October 12, 2015

‘வாட்ஸப்’ வெயிட்டிங்.



மழைபிடித்த வானத்தை பார்த்தபடி அவனது நேரங்கள் நகர்ந்துகொண்டிருந்தன. இன்றையநாளின் நிகழ்ச்சிகளை கடக்க அவனால் முடியவில்லை. ஒரு ஆணின் மனதும் உணர்ச்சிகளின் அலைவீச்சுக்கு தாக்குப்பிடிக்கமுடியாது என்பதை அவனது கண்களே காட்டிக்கொடுத்துவிடும்போல் இருந்தது.

அதிகலையின் விடியலில் அவளது குரலை கேட்டிருந்தான். அதன்பின் அவளைப்பற்றிய எந்த தகவலும் அவனுக்கு கிடைத்திருக்கவில்லை. வாட்ஸப்பில் புன்னகைகளை பரிமாறியவளின் மௌனத்தை ஏற்றுக்கொள்ளமுடியாதவனாய் நிமிடங்களை எண்ணிக்கொண்டிருந்தான். நீண்டநாட்களாய் நீளும் அவள் மௌனத்தை உடைப்பதற்கென்றே புதிது புதிதாய் முயற்சிகள்செய்து தினம் தினம் தோற்றுப்போனது என்னவோ அவன்தான். 

எல்லாமே வெறுமையாய் தெரிந்திருக்கவேண்டும் அவன் கண்களுக்கு. நீண்ட வயல்வெளி தாண்டி போய்க்கொண்டிருந்தான். மழைத்துளி நனைத்த வயல்வெளியெல்லாம் அவள்முகமாய் சிரித்தது. அவளை நினைத்தபடி ஐந்தாறு விபத்துக்களையும் தொட்டிருப்பான். மூன்றுநாட்கள் கடந்திருந்தது. மூச்சற்றுப்போன அவன் தொலைபேசியில் வாட்ஸப் சிணுங்கல். அவள்தான்.

‘ஹேய்..’

‘ஓம் சொல்லு’

‘எப்பிடிடா இருக்காய்?’

’ம்..ம் எனக்கென்ன. நல்லா இருக்கன். நீ?’

‘ஓஹ் சரி நல்லா இருக்கியா அப்போ சரி தூங்கு குட்ணைட்’

‘....’

‘போய்ட்டியா?’
‘ஹ்ம்ம்ம்ம்’

ஓய்ந்துபோனது கைபேசி மீண்டும் ஒரு வாரத்திற்கு. 

ஹேய்..
செல்லம்..
அம்மு...
பேசுடி...

என்றபடி அவனது வார்த்தைகள் மட்டும் வெளியேறின. இப்போதும்கூட கைபேசியை பார்த்துக்கொண்டான். கைபேசி இறந்திருந்தது பல மணித்தியாலங்களின் முன்பே.

Thursday, October 8, 2015

தனியள்.


பண்ணைக் கடற்கரை வீதி. நானும் என் தங்கையும் நேரத்தை கடத்துவதற்காய் யாழ்நகரை வட்டமிட்டு பண்ணைக் கடற்கரையை வந்தடைந்தோம். என் தங்கை கொழும்பில் வாழ்பவள். அவளுக்கு இந்த சூழல் அருவருப்பையே தந்திருந்தது போலும். 
’இதுதான் நீங்கள் சொன்ன பீச்சா?’
’இதெல்லாம் ஏன் இப்பிடி குப்பையாகிடக்கு?’

என்றபடி ஆரம்பித்தாள் தன்னுடைய கேள்விக்கொத்துக்களை. எனக்கோ என் நகரை விட்டுக்கொடுக்கமனமில்லை. அவளும் சிறுபிள்ளை ஆகவே,

’உங்கட அரசாங்கம்தான் இதெல்லாத்தையும் கவனிக்கவேணும்’ என்றபடி அவளின் அடுத்தடுத்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளிவைத்தேன். அவள் சுற்றிலும் நோட்டமிட்டாள். காகம், மாடு, அதோடு மனிதர்களும் பண்ணையின் சாலைகளில் விரைந்துகொண்டிருந்தார்கள். 

‘எவ்வளவு காகம் நிக்குது இங்க?’ என்றபடி என்னோடு நடக்க ஆரம்பித்திருந்தாள். நானோ கமராவில் புகைப்படமெடுத்துப்பழகுவதில் ஆர்வமாயிருந்தேன்.

’பிறையக்கா...
அக்கா...
அடி பிறை..’

இதற்குமேல் அவளால் என்னோடு சண்டையிடமுடியவில்லை. நான் அங்கிருந்த கல்லாசனம் ஒன்றில் அமர்ந்தேன். என்னருகில் கோபத்தோடு வந்து அமர்ந்தவள், 

‘தம்பி இஞ்ச வந்திருந்தா கத்திக்கொண்டுதான் வீட்டபோயிருப்பான்’
‘கோல்பேஸ் எல்லாம் எவ்வளவு வடிவா இருக்கும் தெரியுமே?’
‘இறங்கி விளையாட நல்ல ஆசையா இருக்கும்’

என்றாபடியாக பண்ணை தொடர்பான தன்னுடைய ஆதங்கங்களை வெளிப்படுத்திக்கொண்டிருந்தாள். நானோ

‘ம்..
ம்ம்..
ம்ம்ம்’ என்றபடி அங்கு நடப்பவற்றை வேடிக்கைபார்ப்பதில் கண்ணாயிருந்தேன். மனிதர்கள் வாழ்க்கையின் கோபத்தை நடையில் கொட்டியபடி நகர்ந்துகொண்டிருந்தார்கள். எங்கள் நகர இளசுகள் மோட்டார் வண்டிகளில் மிடுக்காக பெண்களை கவர்வதற்கான ‘சீன்களை’ ஆரம்பித்திருந்தார்கள். காதல்ஜோடிகள், கணவன் மனைவி குடும்பமென ஆசுவாசப்படுத்திக்கொள்ள பலர் பண்ணைச்சூழலை நாடிக்கொண்டிருந்தார்கள். 

எங்களுக்கு பக்கத்து முன் இருக்கை ஒன்றில் ஒருத்தி தனியாக அமர்ந்திருந்தாள். கறுப்பு நிற ஜீன்ஸும் மெல்லிய நீலநிற டீசேட்டும் அணிந்திருந்தாள். தலையை போணிடெயில் போட்டிருந்தாள்.  அவள் முகத்தில் சிறிது கலவரமிருந்தது. கண்களில் யாரையோ எதிர்பார்த்திருப்பது தெரிந்தது. நிமிடத்திற்கு ஒருமுறை அலறாத தன் கைபேசியை எடுத்து பார்த்துக்கொண்டாள். தன்னை கடந்துபோவோர்-வருவோரை விடாமல் பார்த்தபடியிருந்தாள். 

‘பிறையக்கா ஐஸ்கிறீம் வாங்குவம். எலிபண்ட் ஹவுஸ் போகுது’

என்றபடி என்பார்வையை திருப்பிய என் தங்கை எனிடமிருந்து பேஸை பறித்து ஐஸ்கிறீமை நோக்கி ஓடினாள். வரும்போது எனக்கும் சேர்த்து ஐஸ்கிறீம் வாங்கியபடி புன்னகையோடு வந்தமர்ந்தாள்.  ஐஸ்கிரீமை குடித்து முடித்து காலி கப்புகளை போடுவதற்கு டஸ்பின் தேடினாள். கிடைக்கவில்லை. யாழ் நகரை திட்டியபடி குப்பைக்கான குழி ஒன்றில் வீசிவிட்டு வந்தமர்ந்தாள். 

லேசாக இருட்டத்தொடங்கியது. வீட்டிற்கு கிளம்பலாமென அந்த இடத்தை விட்டு எழுந்தோம். அப்போதுதான் அந்த பெண்ணின் கைபேசி அலறிய சத்தம் காதில் விழுந்த்து. 

‘அவளை மறந்துவிட்டேனே’ என்றபடி அவளை திரும்பிபார்த்தேன். அலறிய கைபேசியில் ஓரிரண்டுவார்த்தைகள் கதைத்திருப்பாள். மீண்டும் கைபேசி ஊமையானது. அவள் கடலை வெறித்தபடி அமர்ந்திருந்தாள். கண்கள் கலங்கியிருந்தன. அவள் எதிர்பார்த்ததுபோல் அவளது தோழியோ தோழனோ காதலனோ உறவினர் யாருமோ வரமுடியாமலிருந்திருக்கவேண்டும் என்று எண்ணியபடிமோட்டார்வண்டியை திருப்பி அதில் ஏறி அமர்ந்தோம். 
என் தங்கையும் அவளை கவனித்திருக்கவேண்டும். 

’பிறையக்கா அதில ஒரு அக்கா இருந்தவாவெல்லோ?’
‘ஏன் அவா தனிய இருந்தா?’
‘அவா வீட்ட போகேல்லையோ?’
என்றபடி அவளது வழக்கமான பாணியை ஆரம்பிக்க, நானும் வழமைபோல

‘ஹும்
ம்ம்
ம்ஹும்’ களுடன் வீட்டைநோக்கி விரைந்தோம்.

-பிறைநிலா-

Saturday, September 12, 2015

கண்ணீர்ப்பாத’ரசம்’



விரிந்த கண்களுக்குள் எதையோ தொலைத்த சோகத்தோடு தனியாக சிரித்துக்கொண்டிருந்தாள் அவள். மெல்லமெல்ல இருட்டத்தொடங்கிய அடிவானை பார்த்தபடி அன்றைய சம்பவங்களை அசைபோட்டுக்கொண்டிருந்தாள். இல்லை இல்லை மனதினுள் பதிந்தவற்றை அழிப்பதற்காய் முயன்றுகொண்டிருந்தாள்.

இது நல்லூரான் கொடியேற்ற காலம்.
யாழ்ப்பாணமே களைகட்டி விழாக்கோலமாய் பூரித்து நிற்கும். யாழ்ப்பாணத்தின் திமிரே நல்லைக் கந்தனின் கோபுரம்தான் என்று சொல்லுமளவுக்கு இது ஒரு பெருவிழாக்காலம்.

’’எல்லாரும் நல்லூருக்கு போயினம். நானும் போகவேணும். ஆரோட போறது. ஆருமே இல்லாத நான் ஆரோட போறது. அவரத்தான் கேக்கவேணும். ஆனா அவருக்கும் நேரமிருக்கோ தெரியா’’

தனக்குள்ளாக நேற்று இரவு புலம்பிக்கொண்டாள் அவள்.

‘’இஞ்ச நாங்கள் நாளைக்கொருக்கா நல்லூருக்கு போவமே?’’ என்று அவன் கேட்க பட்டாம்பூச்சியாகி பறந்ததென்னவோ அவள்தான். 

’’நான் அங்க போய் முருகனை கும்பிடுவன். அங்க இருக்கிற மணிக்கடையில இவர்ர கைய பிடிச்சபடியே நிறைய சாமான் வாங்குவன்.’’

‘’எங்க எங்கயோ இருந்தெல்லாம் நிறைய சனம் வருமாம் குடும்பத்தோட. நானும் நாளைக்கு  போவன்’’
என்றபடி தூங்கத்தொடங்கியது அவள் கனவு.

மறுநாள் நல்லூர் வீதியில் அவனது கைகளை பிடித்தபடியே அழகனின் தரிசனத்தோடு ஆரம்பித்தது மணிக்கடை உலாத்தல்.

என்றும் அவள் குழந்தை மனதிற்கும் கேலிபேச்சிற்கும் கபடமற்ற புன்னகைக்கும் அடிமையான அவன் அவள் கண்களுள் தொலைவதையே வழக்கமாககொண்டிருந்தான். அவள் பேசும் கேலிகளை ரசிக்கத்தெரிந்த அவனுக்கு என்னவோ இன்றையநாள் ரசனையில்லாமல்போனது.

‘இஞ்ச உந்த பழய கதை கதைக்கவே இஞ்ச வந்தனி. முடிஞ்சுபோனதையெல்லாம் திருப்ப கேக்கவேணுமெண்டுதானெ இப்ப சொன்னனி?’’ 
என சம்பந்தமற்ற வார்த்தைகளைக்கொண்டு கோபத்தை கொட்டித்தீர்த்தது அவன் வார்த்தைகள்.

‘’நாந்தான் விசரிபோல. எனக்கு உந்த வாய் சும்மா கிடவாது. நாந்தான் பிழையா என்னத்தையோ கதச்சுப்போட்டன்’’ என்று மனதிற்குள்கூட அவனை விட்டுக்குடுக்கமுடியாதபடி கண்ணீரை மனதிற்குள் மறைத்தவளாய் அவன்பின்னே வீடுவந்துசேர்ந்தாள்.

இருவரும் பேசிக்கொள்ளாத இந்த தனித்திருக்கும் பொழுதுகளில் இதையெல்லாம் மறக்க நினைத்தபடி நல்லூருக்கு போவதற்குமுன்னான ஒரு கணத்தை எண்ணிப்பார்த்தாள்.

’’அடியேய் உனக்கொண்டு தெரியுமே. நான் இண்டைக்கு அவரோட நல்லூருக்கு போகப்போறன்டி. அங்க போறது பெரிசில்லையடி. அவர்தாற அந்த அன்புதான் பெரிய புதையல் எனக்கு’’ 
என்றபடி குழந்தையாகி தோழியோடு பேசிக்கொண்ட ஒரு சில வார்த்தைகள்.

எவ்வளவு பெரிய முட்டாள் அவள்.

அவள் கண்களிலிருந்து மையோடு கரைந்தபடி உருண்டு விழுந்த கண்ணீர்த்துளியொன்று சற்றுமுன்னர்தான் நல்லூரின் மண்மேடுகளில் ஒன்றில் காய்ந்து புதைந்துபோயிருந்தது.


-பிறைநிலா-

Saturday, July 18, 2015

பலிகளின் பிரமாண்டம் ’பாகுபலி’



பிரமாண்டங்களின் உச்சத்தில் ரசிகர்களை பலியாக்கியது ‘பாகுபலி’
ஆரம்பமே அட்டகாசமான அசத்தல். அனைத்து பாத்திரவார்ப்புக்களும் அச்சுஅசலாக பொருந்தியிருக்கிறது அத்தனை நடிகர்களுக்கும். படப்பிடிப்பின் ஒவ்வொரு தளங்களும் கிராபிக்சோடு சேர்ந்து அட்டகாசமான காட்சிப்பின்னணி.



சரி மகிழ்மதி கோட்டைக்கு வருவோம். கிராபிக்ஸ் அசத்தல். கோட்டை பிரமாண்டம் எனினும் மனதை அவ்வளவாக தொட்டுவிடவில்லை என்பது என் கருத்து. சாண்டில்யன், கல்கியின் எழுத்துக்களில் கோட்டையின் வசீகரம் இருப்பதுபோல் இங்கு காட்சிகளில் அவ்வளவாக தென்படவில்லை.

படத்தை பார்க்கும்போது சாண்டில்யன், கல்கி ஆகியோரின் வரலாற்று எழுத்துக்களும் அதன் காட்சிகளும் மனதினுள் வந்துபோயின. நீண்டநாட்கள் இப்படியொரு திரைப்படத்தை வரலாற்றியலினூடாக பார்த்துவிடவேண்டுமென்ற அவா நிறைவேறியதில் திருப்தியே.

இசை அருமை எனினும் ஒருசில சந்தர்பங்களில் காட்சியோடு அவ்வளவாக பொருந்திவிடவில்லை. காட்சியமைப்புக்களில் காமெரா பிரமாதம். காமெரா போகுமிடமெங்கும் பிரமாண்டங்களின் எல்லையற்ற சாதனை.



அடுத்து படத்தில் சொல்லப்படவேண்டிய பாத்திரங்கள் மூவர். தமன்னா மற்றும் சத்தியராஜ்.
தமன்னாவின் நடிப்பு முதல்தடவையாக அபாரம். அதனோடு சேர்த்து போராளிப்பெண்ணின் (அவந்திகா) பாத்திரத்தில் கச்சிதமாய் வாழ்ந்திருக்கிறார். முக்கியமான விடயம் என்னவென்றால் தமன்னாவின் நிறக்குறைப்பு (மேக்கப்) மிகவும் கச்சிதமாய் பொருந்தியிருக்கின்றமையே. 


அடுத்து சத்தியராஜ். பலநாள் இடைவெளியின் பின்னர் இவரது அபாரமானநடிப்பை காணும் வாய்ப்பு. அட்டகாசம். என்னைப் பொறுத்தவரை திரைப்படத்தின் நாயகனே இவர்தான்.


காலகேய அரசனாக  பிரபாகரின் நடிப்பு அசத்தல். 

அடுத்து காதல்காட்சி. அடடா வரலாற்றுநாவல்களில் படித்து சுவைத்த சங்கத்து காதல் இதுவோ என்று எண்ணத்தோன்றுகிறது. இக்காட்சியில் என் கண்முன்னே சாண்டில்யன் எழுத்துக்களே வந்துபோயின. போராட்ட லட்சியம் நிறைந்தவளுக்குள் பெண்மையை தட்டியெழுப்பும் நாயகனின் நளினம் அருமை. காதலை உணரச்செய்யும் அந்தக்கணத்தில் கமெராவின் கைவரிசை அசத்தல்.

’’கண்டம்பரி’’ நடனத்தின்மூலம் itemsong காட்சிகள் - வியப்பு!



ஒருசில இடங்களில் கிராபிக்ஸ் சுதப்பல் என்றாலும் காட்சிப்பிரமாண்டத்தில் அது மறைந்துபோனது. என்னதான் இருந்தாலும் காலகேயர்களின் யுத்த காட்சி அத்தனை பிரமிப்பு. திரைக்கதையுடன் சேர்த்து நாமும் வாழ்ந்துபாத்தோம். வாட்களின் வீச்சும் ஈட்டிகளின் கூர்மையும் பிரமிப்பு. இதனைவிட நாவல்களில் மட்டுமே படித்து சுவைத்த போர்க்கருவிகளின் பாவனையை காட்சியில் காணும் அந்தக்கணம் எம்முள்ளும் இரத்தம் கொதிக்கும். 

மொத்தத்தில் பாகுபலி பிரமாண்டங்களின் உச்சம். 

ராஜமௌலியிடம் ஒரேயொரு கேள்விதான் :-
‘நீங்க ஏன் பொன்னியின் செல்வனை படமாக்கக்கூடாது ? (சரித்திரத்துவம் குறையாமல்) ’

பாகுபலியின் அடுத்த பகுதிக்காய் கத்திருக்கிறோம்.

-பிறைநிலா-


Saturday, July 11, 2015

கௌதமி vs கமல் vs ஆஷா சரத்.



’பாபநாசம்’ பெயரைப்போலவே படமும் அருமை.

படத்தின் வெற்றிக்கு வாய்ப்பளித்த விடயங்கள் ஏராளம்.
1) கௌதமியின் இயல்பான நடிப்பு
2) கமலின் யதார்த்த பாத்திரபுனைவு
3) படத்தின் காட்சியமைப்பு
4) மொழிநடை
5) காமெரா, இசை, ஒளிப்பதிவு, திரைக்கதை....

விறுவிறுப்பான அதேநேரம் அழகான திரைக்கதையுடன் அமைந்த அற்புதமானதொரு கலைப்படைப்பு. ஒவ்வொரு பாத்திரங்களின் கண்கள் பேசும் மொழியையும் ஒன்றுவிடாமல் பதிவுசெய்துள்ளது காமெரா. எப்படி ஒரு நடுத்தர குடும்பம் அன்பாலும் அழகாலும் பின்னப்பட்டிருக்கும் என்பதை வாழ்ந்துகாட்டியிருக்கிரார்கள். படம்பார்க்கும்போதே நாமும் அவற்றோடு வாழ்ந்துவிடுகிறோம்.

எனக்கென்னவோ பலநாட்களின் பின் கமலின் இயல்பான நடிப்பை உணரமுடிந்தது. ( இப்பகூட கமல் அழகாத்தான் தெரியுறாரு கௌதமிய விட) அன்பான தந்தை தாய், அழகான பிள்ளைகள் என அழகியதொரு குடும்பம். வாழ்கையின் ஆரம்பத்தில் இருந்த காதல் மாறாமல் கைகோர்க்கும் அழகான கணவன் மனைவி என யதார்த்தவாழ்வியலின் பிரதிபலிப்புக்கள் அருமை.

அளவான விறுவிறுப்புடன் ரசிகர்களுக்கான ஊகம் எதுவுமின்றி காட்சி நகர்கிறது. காட்சியமைப்புப்பற்றி பார்த்தால் செயற்கையின்றி இயற்கையோடு இணைந்த அழகான பிரதேசங்களில் படமாக்கப்பட்டுள்ளது அருமை. காமெரா கதைபேசியுள்ளவிதம் அட்டகாசம்.
குறித்த இடங்களில் வரும் extreme close up shot மற்றும் extreme wide shot இன் காட்சிக்கோர்ப்பு அருமை.

ஜிப்ரானின் இசை அருமை. கதையோடு கதைபேசும் இசை அட்டகாசம். பின்னணியிசை தேவைக்கேற்றவகையில் அருமை.
கதைசொல்லும் பாங்கு சலிப்பற்றவகையில் ஆர்வத்தைதூண்டும் விதமாய் நகர்கிறது படைப்பு.



இதனைவிட முக்கியவிடயம் ஆஷா சரத். வைத்தகண் எடுக்காமல் பார்க்கவைக்குமளவு அற்புதமான நடிப்பு. இவரது கதைபேசும் கண்கள் அருமை. பாத்திரத்திற்கேற்ற உடலசைவு + பேச்சு + கொஞ்சம் திமிர் + கெஞ்சும் தாய்மை + பேச்சு + போலீசுக்கேற்ற கம்பீரம் எல்லாம் அட்டகாசம்.

ஆக மொத்தத்தில் அழகான அற்புதமான படைப்புக்களில் இதுவும் ஒன்று.
பாபநாசத்தில் குளித்து பாழ்பட்டுப்போன தமிழ்சினிமாவின் பாவங்களை கழுவிக்கொள்வோம்.

-பிறைநிலா-