Saturday, July 18, 2015

பலிகளின் பிரமாண்டம் ’பாகுபலி’



பிரமாண்டங்களின் உச்சத்தில் ரசிகர்களை பலியாக்கியது ‘பாகுபலி’
ஆரம்பமே அட்டகாசமான அசத்தல். அனைத்து பாத்திரவார்ப்புக்களும் அச்சுஅசலாக பொருந்தியிருக்கிறது அத்தனை நடிகர்களுக்கும். படப்பிடிப்பின் ஒவ்வொரு தளங்களும் கிராபிக்சோடு சேர்ந்து அட்டகாசமான காட்சிப்பின்னணி.



சரி மகிழ்மதி கோட்டைக்கு வருவோம். கிராபிக்ஸ் அசத்தல். கோட்டை பிரமாண்டம் எனினும் மனதை அவ்வளவாக தொட்டுவிடவில்லை என்பது என் கருத்து. சாண்டில்யன், கல்கியின் எழுத்துக்களில் கோட்டையின் வசீகரம் இருப்பதுபோல் இங்கு காட்சிகளில் அவ்வளவாக தென்படவில்லை.

படத்தை பார்க்கும்போது சாண்டில்யன், கல்கி ஆகியோரின் வரலாற்று எழுத்துக்களும் அதன் காட்சிகளும் மனதினுள் வந்துபோயின. நீண்டநாட்கள் இப்படியொரு திரைப்படத்தை வரலாற்றியலினூடாக பார்த்துவிடவேண்டுமென்ற அவா நிறைவேறியதில் திருப்தியே.

இசை அருமை எனினும் ஒருசில சந்தர்பங்களில் காட்சியோடு அவ்வளவாக பொருந்திவிடவில்லை. காட்சியமைப்புக்களில் காமெரா பிரமாதம். காமெரா போகுமிடமெங்கும் பிரமாண்டங்களின் எல்லையற்ற சாதனை.



அடுத்து படத்தில் சொல்லப்படவேண்டிய பாத்திரங்கள் மூவர். தமன்னா மற்றும் சத்தியராஜ்.
தமன்னாவின் நடிப்பு முதல்தடவையாக அபாரம். அதனோடு சேர்த்து போராளிப்பெண்ணின் (அவந்திகா) பாத்திரத்தில் கச்சிதமாய் வாழ்ந்திருக்கிறார். முக்கியமான விடயம் என்னவென்றால் தமன்னாவின் நிறக்குறைப்பு (மேக்கப்) மிகவும் கச்சிதமாய் பொருந்தியிருக்கின்றமையே. 


அடுத்து சத்தியராஜ். பலநாள் இடைவெளியின் பின்னர் இவரது அபாரமானநடிப்பை காணும் வாய்ப்பு. அட்டகாசம். என்னைப் பொறுத்தவரை திரைப்படத்தின் நாயகனே இவர்தான்.


காலகேய அரசனாக  பிரபாகரின் நடிப்பு அசத்தல். 

அடுத்து காதல்காட்சி. அடடா வரலாற்றுநாவல்களில் படித்து சுவைத்த சங்கத்து காதல் இதுவோ என்று எண்ணத்தோன்றுகிறது. இக்காட்சியில் என் கண்முன்னே சாண்டில்யன் எழுத்துக்களே வந்துபோயின. போராட்ட லட்சியம் நிறைந்தவளுக்குள் பெண்மையை தட்டியெழுப்பும் நாயகனின் நளினம் அருமை. காதலை உணரச்செய்யும் அந்தக்கணத்தில் கமெராவின் கைவரிசை அசத்தல்.

’’கண்டம்பரி’’ நடனத்தின்மூலம் itemsong காட்சிகள் - வியப்பு!



ஒருசில இடங்களில் கிராபிக்ஸ் சுதப்பல் என்றாலும் காட்சிப்பிரமாண்டத்தில் அது மறைந்துபோனது. என்னதான் இருந்தாலும் காலகேயர்களின் யுத்த காட்சி அத்தனை பிரமிப்பு. திரைக்கதையுடன் சேர்த்து நாமும் வாழ்ந்துபாத்தோம். வாட்களின் வீச்சும் ஈட்டிகளின் கூர்மையும் பிரமிப்பு. இதனைவிட நாவல்களில் மட்டுமே படித்து சுவைத்த போர்க்கருவிகளின் பாவனையை காட்சியில் காணும் அந்தக்கணம் எம்முள்ளும் இரத்தம் கொதிக்கும். 

மொத்தத்தில் பாகுபலி பிரமாண்டங்களின் உச்சம். 

ராஜமௌலியிடம் ஒரேயொரு கேள்விதான் :-
‘நீங்க ஏன் பொன்னியின் செல்வனை படமாக்கக்கூடாது ? (சரித்திரத்துவம் குறையாமல்) ’

பாகுபலியின் அடுத்த பகுதிக்காய் கத்திருக்கிறோம்.

-பிறைநிலா-


No comments:

Post a Comment