Saturday, August 24, 2019

தனிமையென்று ஒரு வெளி.



இப்போதுதான் நான் வாழ்தலை பழகிக்கொள்கின்றேன். இந்த தனித்தபடி நகரும் நிகழ்காலங்கள் பல உண்மைகளை கற்றுத்தருகின்றன. நான் இன்னும் வலுவாகிருக்கக் கற்றுக்கொள்கின்றேன். என் பாதுகாத்தலையும் என் புத்தி தெளிதலையும் இந்த நேரங்கள்தான் எனக்கு கற்றுத்தருகின்றன. இப்போதுதான் ஒவ்வொன்றைப்பற்றிய புரிதலும் எப்படியிருக்குமென தெளிவாக கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றேன்

இந்த மனிதர்கள் எத்தனை கொடூரமானவர்கள். ஆயிரம் முகமூடிகளுக்குள்ளே தம் உண்மை முகத்தை புதைத்து சிரிக்கின்றனர். உண்மையை கண்டறிய நான் பல்லாயிரம்தடவை உடைந்து அழ வேண்டியுள்ளது. ஆனால் தளர்ந்துவிடவில்லை. வஞ்சகப் புன்னகைகளை இப்போதெல்லாம் இலகுவில் மோப்பம்பிடித்து விலக்கி விடுகின்றேன். தேவைக்கேற்றாற்போல் முகம் மாற்றுவோரை எளிதாகக் கடந்துபோய் சிரிக்கிறேன். உதட்டில் புன்னகையும் குணத்தில் நஞ்சின் விசிறல்களையும் கொண்ட மனிதர்களை அசட்டையாகவே தட்டிவிட்டு நகரத்தொடங்குகின்றேன்.

இந்த தனிமையும் அதுதரும் நிகழ்காலமும் இன்னும் இன்னும் பலவற்றை கற்பிக்க ஆரம்பித்திருக்கின்றது



நான் நீங்கள் இல்லாமலே வாழ்வதற்கு பழகிக்கொள்கிறேன். அன்பு எனும் பெயரிலும் நேசம் எனும் புதிரிலும் சிக்கிக்கிடந்த என்னை, நானே இந்த வெறுவெளிக்குள் விடுவித்துக்கொண்டு பறக்கிறேன். இப்போது உங்களை திரும்பிப்பார்க்கிறேன். நீங்களும் ஏதோவொரு வகையில் சுயநலவாதிகள்தான்

உங்கள் உடைதலின்போதும் உறவுகளின் தொலைதலின்போதும் இவளொருத்தி உடனிருந்தாள். உங்கள் புன்னகைகளை வாரியெடுத்து அணைத்துக்கொண்டாள். உங்கள் கண்ணீர் கண்களுக்கு கைலேஞ்சி கொடுத்து துவட்டிவிட்டாள். உங்கள் நொறுங்கிய இதயங்களை சேர்த்தெடுத்து புதியதோர் இதயத்தை பரிசளித்திருந்தாள். நீங்கள் அழும்போது அழுதவள், உங்கள் புன்னகையில் தன்வலி மறந்தவள், உங்கள் தோள்களுக்கு துணையாக தனித்திருந்தவள்  - அவளை இலகுவாக கடந்துவிட்டீர்கள். அவள் புன்னகை பற்றியோ அவள் கண்ணீர் பற்றியோ அவளின் சின்ன இதயம் உடைந்து சிதறுவதைப்பற்றியோ உங்களுக்கு எதுவித பிரக்ஞையும் இல்லவே இல்லை. எனில் நீங்களும் ஏதோவொருவகையில் சுயநலவாதிகளே!

ஆக அன்பு என்பதொரு மாயச்சிறை. அதை நான் இப்போது கடந்துவிட்டேன். இப்போது என்னால் பறக்க முடிகிறது



தனிமை மிகவும் கொடூரமானது. உயிரை பிய்த்தெறியும் வலியொன்றை உணரவேண்டிவரும். அதேநேரம் தனிமை சுதந்திரமானது பச்சோந்தி மனிதர்களை எதிரெதிரே பார்த்துச் சிரிக்கும் தைரியமொன்றை கற்றுத்தருகின்றது. உலகத்தை பார்க்க, அழகை ரசிக்க, ஆழ் மனதின் வலிமையை உணர்ந்துகொள்ள, நிகழ்வதை படிக்கவென்று ஏராளம் விடயங்களை கற்றுக்கொள்கிறேன்

குழந்தைகளின் கூச்சல் இப்போது தெளிவாய் கேட்கின்றது. வீசும் காற்றின் மென்மையை இப்போதெல்லாம் உணர முடிகின்றது. கோயில் வீதியின் சலசலப்பை, இரவின் மென் அமைதியை, ஒளிரத்தொடங்கும் மின்குமிழ் வெப்பத்தை, தனித்த புத்தக வாசனையை, பசித்த மனிதர்களின் வார்த்தையற்ற ஏக்கத்தை, காலடிகள் தரும் ஒலிச்சமநிலையை என்று ஏராளமாய் கற்றிறுக்கின்றேன்





இங்கு நிகழ்காலங்களில் உண்மைகளை தெரிந்துகொள்கின்றேன். இப்போதுதான் உங்களை படிக்கத்தொடங்கியிருக்கின்றேன் நானென்பதை அந்நியமாக்கி

பல உடைதல்களைத்தாண்டியும் என் வாழ்தலை மீண்டும் நானேஆரம்பிக்கின்றேன். என்னை நானே இசைத்துக்கொள்கின்றேன். 

தனிமைக்கு நன்றி!

-பிறைநிலா-