Wednesday, May 18, 2016

என் தேசமே.



கடற்கரையின் ஓரத்திலே
கருகிப்போனது ஒரு வரலாறு. 
கனவுகண்ட விழிகள் எங்கே?
நிகழ்வு சொல்ல யார்தான் இங்கே?

தோல் கருகி
ஊண் உருகி
சிதைவுகளில் 
சிதைகளாய். 

சேய் சிதறி
தாய் கதற
உணர்வுகளில்
நெருடலாய். 

ஊனங்களும் உருக்குலைய
தேசமெங்கும் கருக்கலைய
தொலைந்துபோனோம்
இன்று தொலைவாயே போனோம்

புழுதி தெறித்த மண்ணில்
குருதிக்கணைகள் சிதற
பூக்கள் விதைத்த நிலத்தில்
பிணத்தின் சிதில சிதறல்

அய்யகோ
அழிந்துபோனோம்
ஒழிக்கபட்டோம்
இன்று மறைக்கப்பட்டு
மறந்தும் போனோம்.

தேசமே
என்றாவது உன் 
தாய்மடியை தாரைகொடு
மறு ஜென்மத்தில் 
சேயாவதற்காய்.

Sunday, May 15, 2016

நீ எனும் பெருங்கடல்.



மழை ஒழுக்குகளில்
இசையாய் கசிகிறாய் நீ.
மௌனங்களை உடைக்க விடு.
இந்த நேசங்களை பேசவிடு.

நீ எனும் ஒரு துளி போதும்
தீராப் பெருங் காதலாய்
யுகம் கடப்போம் வா.

என் மன்மத மழையே
உயிர்வேர்களில் புரையோடிப்போன
பிரிவுகளை அடித்துச்செல்.
நேசம் பற்றிய உனது தூறல்களை
விசிறிச்செல்.

நீ ஜனித்திருக்கிறாய்
நான் ஜீவிப்பதற்காய்.
மீண்டும் நம் நேசங்களை
பேசவிடு
நனையட்டும் ஜீவநாடி.



-பிறைநிலா-

Sunday, February 28, 2016

அவர்களும் ஆட்டோவும்.



பின்மாலைப்பொழுதின் இருள் மெல்லமெல்ல ஒளியை விழுங்கத்தொடங்கியிருந்தது. அந்தரத்தில் நடக்கத்தொடங்கியிருந்தாள் ஹிருதயா. அன்றைய மாலைநேரத்து நிகழ்வுகள் வேகமாக நினைவில்வந்து மறைந்துகொண்டிருந்தது. டவுணில் ஒரு முக்கிய நிகழ்வுக்காக செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்தாள். ஹிருதயாவின் மோட்டார்வண்டி திருத்தவேலைக்காக மூன்றுநாட்களின்முன்பே கராஜ்ஜில் விடப்பட்டது. இதனால் நண்பியுடன் முச்சக்கரவாகனத்திலேயே நிகழ்வுக்குச் செல்லவேண்டியதாய் நிலமை அமைந்திருந்தது.

ஹிருதயாவின் வீட்டிற்கு முச்சக்கரவண்டியில் வந்த அவள் நண்பி அவளை அழைத்துக்கொண்டு நிகழ்வுக்குச்சென்றாள். அப்பொழுது ஹிருதயா நினைத்திருக்கவில்லை இப்படியான பதற்றமான சூழல் ஏற்படுமென்று. வழமைக்குமாறாக நிகழ்வு விரைவிலேயே முடிவடைய நண்பியுடன் ஹிருதயா முதலில் வந்த முச்சக்கரவண்டிக்காக காத்திருந்தாள்.

வீதியோரத்தில் நின்றிருந்த இருவரும் தம்மை கடந்துசெல்லும் முச்சக்கரவண்டிகளையே நோட்டமிட்டபடி காத்திருந்தனர். நண்பியை பார்த்து ஹிருதயா,

“என்னடி அந்த ஆட்டோக்கார அண்ணய இன்னும் காணேல்ல. வேளைக்கு வாறன் எண்டவரெல்லோ. திருப்பி ஒருக்கா கோல் பண்ணிபாக்குறியே?’’

அவள்கேட்டபடி அவளது நண்பியும் தொலைபேசியில் அவருடைய எண்களை திணித்திருந்தாள்.

’‘நீங்கள் அழைத்த இலக்கத்தை தற்பொழுது அடையமுடியாதுள்ளது. தயவுசெய்து சிறிது நேரத்தின்பின் அழைக்கவும்.’’

தொலைபேசியில் கணினிக்குரல் விடாமல் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தது. பத்து தடவைகளுக்குமேல் அழைத்தும் பதில் எதுவும் கிடைக்கவில்லை. நேரமோ ஒருமணித்தியாலத்தை தாண்டியதாய் விரைந்துகொண்டிருக்க நண்பியின் செல்பேசி அலறத்தொடங்கியது. அழைப்பில் அவள் தாயார். இவள் ஸ்பீக்கரில் விட்டு பதில்சொல்லத்தொடங்கியிருந்தாள்.

‘பிள்ள எங்க நிக்கிறாய்?’

‘ஆட்டோக்காக பாத்துக்கொண்டு நிக்கிறனணை. அந்த அண்ணை இன்னும் வரேல்ல’

‘அப்ப தனியவே உங்க நிக்கிறாய்?’

’இல்லையணை என்னோட ஒரு பிள்ளையும் நிக்கிறா. நான் வந்திடுவன்’

என்றபடி அவள் அழைப்பை துண்டித்தாள். 

‘இண்டைக்குத்தான் நான் பைக்கிண்ட தேவையை உணர்ந்தனடி’ என்ற நண்பியின் கருத்தையே மனதில் நினைத்திருந்த ஹிருதயாவிற்கு நேரம் செல்லச்செல்ல  இதய துடிப்பின் வேகம் படிப்படியாய் அதிகரித்தது.

’‘என்னடி இன்னும் அந்தாளை காணேல்ல. இப்பிடியே நடுரோட்டில விட்டுட்டுபோறது. எனக்குவேற வீட்டில எக்கச்செக்க பிரச்சினை. இதில பிந்திவேறபோனா சொல்லவே தேவயில்ல. பிரளயம்தான்.’’

என்றபடியாக ஹிருதயாவின் புலம்பல்களோடு நடக்கத்தொடங்கியிருந்தனர் இருவரும். தம்மை கடந்துசெல்லும் முச்சக்கரவண்டிகளையெல்லாம் வெறித்தபடி நடை தொடங்கியிருந்தது. இருள் பிடிக்கத்தொடங்கியிருந்தது. வீதியில் போகும் ஒருசில ஆண்களின் கண்கள் வெறித்தபடியும், சிலரின் கண்கள் பல கேள்விகளோடும் இவர்களை கடந்துசென்றது. 

நண்பியோ தொலைபேசி இலக்கத்துடன் போராடி தோற்றுக்கொண்டிருக்க 

‘’அடி, இந்த ஏரியாவும் கொஞ்சம் பயங்கரமான இடம் எண்டு சொல்லுறவையள். நாங்கள் இப்பிடி நிக்கிறது இதுக்குமேல சரிவராது. பேசாம இதிலவாற ஆட்டோவை மறிப்பம்’’

என்றாள் ஹிருதயா.

‘நீ சொல்லுறதும் சரிதான். ஆனா தெரியாத ஆட்டோக்கள மறிச்சு ஏறிப்போறதும் அவ்வளவு பாதுகாப்பு இல்லை’’

என நண்பி சொன்னாலும் எதிரே வந்த ஒரு ஆட்டோவை மறித்து இருவரும் ஏறிக்கொண்டனர். இருவரின் இதயதுடிப்பும் படபடப்பில் அதிகருத்துக்கொண்டது. 

’எங்க போகோணும்?’

’அண்ணை நாச்சிமார் கோயிலடிக்கு போகோணும்’’

என்றபடியாக மௌனமாயினர் இருவரும். ஆட்டோ அசையத்தொடங்கியதும் குப்பென்று அடித்த காற்றில் கசிப்பின் நாற்றத்தோடு சிகரெட் நாற்றமும் கலந்த ஒருவகையான மணம் ஹிருதயாவின் முகத்தி அடித்தது. எண்ணங்கள் எங்கோ சுழல நண்பியின் கைகளை இறுக பற்றிக்கொண்டாள். நண்பியின் செல்பேசியோ அலறியபடியிருக்க அவள் இவளது கைகளை பற்றியபடி பதில்சொல்லி சலித்துக்கொண்டாள்.

பிரதான வீதியை தவிர்த்து குறுக்குத்தெரு வழியாக ஆட்டோ செல்லத்தொடங்கியது. ஹிருதயாவின் மனதில் ஆயிரம் கேள்விகள் எழத்தொடங்கியிருந்தன.

‘ஏன் மெயின்ரோட்டால போகாம இதால போகுது?’
‘இப்படி சிக்கலான சந்தர்ப்பத்தில பயத்த முகத்தில வெளிக்காட்டாம இருக்கோணும்.’
’ஏதும் பிரச்சினை வந்தா பாத்துக்கொள்ளுவம். சமாளிக்கலாம்’

என்றபடியாக அவள் சிந்தனை போய்க்கொண்டிருக்க நண்பி கேட்ட கேள்விகள்கூட இவள் காதுகளில் விழவில்லை.

‘பொம்பிளையா பிறந்தா எவ்வளவுத்துக்கு பயப்பிடவேண்டிக்கிடக்கு’
‘பொது இடங்களில் பொல்லாப்பாய் பாக்கிற ஆம்பிலையள்’
‘பொல்லாப்பு சொல்லுற பொம்பிளையள்’
‘முதுகில குத்திற சமூகம்’
‘முகத்துக்குநேர பாத்து கதைக்காம கழுத்துக்கு கீழயே பாத்துக்கதக்கிற ஆம்பிளையள்’
‘உடம்போட உரசி உரசி கதக்கிற ஒரு கூட்டம்’
’கடத்திக்கொண்டுபோறதுக்கெண்டே திரியிற ஒரு கூட்டம்’

இப்படியாக அவள் எண்ணங்கள் சுழல நண்பியின் கைகளை இன்னும் அழுத்தமாக பற்றிக்கொண்டாள். ஹிருதயாவின் நினைப்பு அவளுக்கும் புரிந்திருக்கவேண்டும்.

‘நான் உன்ர வீடுவரை வந்து உன்ன விட்டுட்டு வீட்ட சொல்லிப்போட்டுப்போறனடி’’ 
என்றாள் நண்பி. ஆனால் அவளுக்கும் வீட்டுநிலை அவ்வாறே இருக்கும் என உணர்ந்த ஹிருதயா அதை பிடிவாதமாக மறுத்துவிட்டாள். ஒருவாறாக குறுந்தெருவினூடாக பிரதான சாலைக்கு எட்டிப்பார்த்தபோதுதான் ஓரளவு நின்மதி இருவருள்ளும் தொற்றியது.

நன்றாய் இருட்டியிருந்தது. நாச்சிமார்கோயில் சந்தியில் வந்துநின்ற ஆட்டோவிடம் அதிகம் பேரம்பேசாமல் கையிலிருந்த பணத்தை திணித்துவிட்டு ஒழுங்கைக்குள் நடக்கத்தொடங்கியிருந்தார்கள். நண்பியின் வீடு கடந்து செல்கையில் விரைவாக அவளிடம் விடைபெற்றபடி செல்பேசி டார்ச்லைட்டை ஒன் செய்து கொண்டாள். 

கால் தரையில் படாமல் மிதப்பதுபோல விரைவாக மூன்று வளைவுகளை கடந்திருந்தாள். வீட்டில் என்ன நடக்குமோ என்ற கவலையே அவள் மனதை அதிகம் குடைந்துகொண்டிருந்தது. என்னதாம் பெண்ணியம் பெண்சமத்துவமென்றாலும் இந்த மூடிய பிற்போக்குத்தனங்களுள் கட்டுண்ட சமூக கதவு என்றுதான் உடைபடுமோ என் எண்ணியவளாய் வீட்டிப்படலையை தள்ளியவள், என்றுமே இந்த நேரத்தில் திறக்கப்படாத வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு புரிந்தவள்போல உள்ளே சென்றாள். வசலில் நின்ற தாயாரின் முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.

-பிறைநிலா-

Monday, February 8, 2016

மரணமே முத்தமிடு



என் ஜீவ மரணமே
ஒருமுறையாவது முத்தமிடு
என் இதழ்களை.
உறக்கமில்லாமல் கழியும்
ஒவ்வொரு நிசிகளின் நெருடலிலும்
ஓராயிரம் வலி தெறிக்க
விடியலில் புன்னகைக்கும் 
போலியாய் சுயம் இங்கு.
கல்லடிபட்டு காய்த்துப்போன ஊனங்கள் 
கலர்கலர் கனவுகளை
கறுப்புவெள்ளையாக்கிய (அ)நியாயங்கள்
பெண்தானே என்று அடக்கிப்போன அகம்பாவ ஆத்மாக்கள்
முதுகுவழி கிழித்து முகம்நோக்கி
சிரிக்கும் முள்ளந்தண்டிலிகள்

அகோரங்கள்கூட அழகு
ஆனால் 
அசிங்கங்கள் எப்படி அழகாகும்?
சாக்கடை சமூகம்
பேடிமை சாத்திரம்
அக்கினியில் குளித்தாலும்
அசிங்கமென்றேசொல்லும்
மையத்து அதிகாரம்

மரணமே ஒருமுறை
தீண்டிவிடு என் இதழ்களை
இனியாவது
என் வாழ்க்கையை நான் 
வாழ்ந்துகொள்ள. 

-பிறைநிலா- 
11:03
8/2/2016

Tuesday, February 2, 2016

நாங்கள் தனித்தவர்களின் புதல்வர்கள்.



ஏதேன் தோட்டத்து 
இள மங்கைகளே,
எங்கள் பெண்களை 
நீங்கள் பார்த்ததுண்டா?
வரண்ட பூமியில்
விதைத்தலுக்கும்
சமையலறையில் 
வேகலுக்கும்
படுக்கையறையில்
பிழிதலுக்கும்
வாழ்க்கை தொலைத்த
எங்கள் தேவதைகளை
நீங்கள் பார்த்ததுண்டா?

நிலம் மட்டுமல்ல
மார்புகளும் வறண்டுதான்போனது
வறுமை தின்றுபோனதால்.
உச்சி வெயிலில் வேகலும்
பேய்ச்சி இவளென்று விம்மலும்
பழையதானது.

உங்கள் தேசத்தில்
பனிகளின் வண்ணமாம். 
எங்கள் வானத்தில் 
மழைகூட இல்லை
போர்மேகம் மூடியதால்.

குண்டு மழை
குருதி பெருக்கு
சிதைந்த பிண்டம்
சிதறிய மனிதம்

இன்று 
பூக்களை நடுகிறார்கள் இங்கு.
ஆனால் 
எங்கள் பெண்கள் பூச்சூட
கூந்தலை இழந்தவர்கள்.

புடைத்த நரம்புகளிலும்
வெறித்துப்போன கண்களிலும்
வெளிறிய உதடுகளிலும்
நாங்கள் தேவதைகளை பார்க்கின்றோம். 
என்ன சில பிண்டங்கள்
அவர்களை தேவ'தாசி'யென
நினைக்கும் சாபம் 
இங்குமட்டும்தான்.

உங்கள் ராட்சசர்கள்கூட
அன்பானவர்களாம். 
பிணவாடை என்பதே தெரியாதவர்களாம்.
உங்கள் பூமி சொர்க்கபுரியாம்
மண்ணுக்குள்ளே 
மலர்களின் வாசமாம்.

இங்கு வாருங்கள்
குருதிக்காட்டின் பிசுபிசுப்பு
மண்ணில் புதைந்த மனிதவாடை
மண்டையோட்டு சில்லின் சிதறல்
இதற்குமத்தியில் எங்கள் 
வாழ்க்கை.

இப்பொழுது சொல்லுங்கள்
யார் தேவதைகள்
யார் மீட்பரின் தூதர்கள்
நாங்கள் 
தனித்தவர்களின் புதல்வர்கள்
இறுதிவரை
அகதிகளின் அந்தரங்கம்!

-பிறைநிலா-
2/2/2016
8:56

Monday, February 1, 2016

ப்ரிய நட்சத்ரா..


என் ப்ரிய நட்சத்ரா,
உன் கண்களை மூடிக்கொள்.
நீ சூழ்ந்துள்ள என் நினைவுகள்
அழகானவை.
என் நேசக்கடல்மீது உனக்கான
அலைகளை பரப்பிவிடுகின்றேன்.
பார்த்து மகிழ்ந்துகொள்
கண்களைத்திறந்துவிடாதே.

பழிகளின் கற்கள் உன்னை 
தாக்கக்கூடும்.
பெண் நீ என்பதால்
நடத்தையில்கூட உன்னை
பழிக்கக்கூடும்.
வஞ்சகக்காரியாய் நீ தெரியக்கூடும்.
உன்னை வஞ்சிக்க ஒரு கூட்டம்
அலையக்கூடும்.
உன் படுக்கையில் மட்டும் 
பங்குகேட்டு
பரிகசிக்கவும் ஸ்பரிசிக்கவும்
அலையக்கூடும்.
நீ தனித்திருக்கையில் உன்னை
தீண்டிக்கொல்ல அரவமாய் 
அணைக்கக்கூடும்.

ஆதலால் என் பிரிய
நட்சத்ரா,
உன் கண்களைத் திறந்துவிடாதே.
என் நேச அலைகளோடே
அமைதிகொள்
நாம் புதிதாய் பிறந்து 
உலகை விதைப்போம் 
அதுவரை உன் கண்களை
நீ திறந்துவிடாதே.

-பிறைநிலா-
01/02/2016
4:49pm

Thursday, January 28, 2016

ஹிருதயா!



மௌனச்சாயத்தை
என் உதடுகளில் அப்பிவிடுகின்றாய். 
என் கேள்விகளுக்கு பதில் இல்லை.
என் நேசங்களின் முகவரி இல்லை.
உன்னிடம் 
எனக்கான பொழுதுகளும் இல்லை. 
இறுதியில் சாயம் மட்டும் என் உதடுகளுக்கு.

அது ஒரு வெளி
ஆத்மாவும் நானும் பேசும்பொருள்.

இருக்கிறாயா?
இருக்கிறேன் இருக்கிறேன்!
புரிகிறதா உனக்கு?
புரியவில்லை தெரிகிறது!
முடிவு?
விளங்கவில்லை.
ஓ.. என் ஆத்மாவே...
ஓலமிடாதே அலுத்துவிட்டது.
என் கண்ணீருமா?
பழகிப்போனது.
அப்பொழுது நான்?
பழையவள்தானே நீ!
என் நேசம்?
புதிதாய் ஏதுமில்லை.

ஆக,
பரிசுத்தத்திற்கு பதில் புதுமைதான் உன் தேவை.
ஹ..ஹ.. உலகத்தேவை!
ஆத்மார்த்தீ ஒழிந்துபோ
இயலாது.
ஏன்?
நான்போனால் நீ பிணம்.
அந்த திமிர்தானே உனக்கு.
இல்லை யதார்த்தம்.

மீண்டும் மௌனச்சாயம்
உதடுகளில்.
ஆத்மா புகுந்துகொண்டது 
ஹிருதயஒலிக்குள்.
வெளி குறுகி வழியாக
நீ தேடப்படும் 
இறுதி பயணவிளிம்புகளில்
நடக்கத்தொடங்கியிருந்தது 'நான்'. 

-பிறைநிலா-
28-01-2016
6:35pm


Friday, January 22, 2016

ப்ரியத்தீ!


நீண்ட பொழுதொன்று 
பிரியங்களோடு 
பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டது காலம். 
வார்த்தைகளின்றிய சலசலப்பை 
பார்வைகளால் பகிர்ந்துகொண்டது. 
மயான அமைதி. 
மட்டுப்படுத்தப்பட்டிருந்தது 
உனக்கும் எனக்குமான 
இடைவெளி. 

நான் 
நரகத்தின் வாசலில் தேவதையாயும் 
நீ 
சொர்க்கத்தின் உச்சத்தில் ராட்சசனாயும்.

நடுவில் பெருகியதென்னவோ 
நேசத்தின் ஜீவநதி. 
என் கண்களுக்கும் 
உன் பாதங்களுக்குமான ஸ்பரிசம் 
நதியில் கலந்துபோனது. 

இறுதி அணைப்பு அது. 
பார்வைகளால் பரிமாறப்பட்டது. 
ஸ்பரிசிக்கத்துடித்தது என்னவோ 
பிரியங்களை மட்டும்தான். 
முடிவிலியாய் மூடப்பட்டது 
உனக்கும் எனக்குமான 
பிரியங்களின் நுழைவாயில். 

-பிறைநிலா-
22/01/2016
3:25

Wednesday, January 20, 2016

காணாமல்போன கால்த்தடம்.

"பிள்ள எங்களபாத்து பயப்பிடுகுது போல. கூட்டிக்கொன்டுபோய் விட்டுட்டு வா" என்றபடி அந்த அக்காவின் புன்னகையை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். "கவிக்குட்டி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 

"பயந்திட்டியளோ? அப்பாட்ட போவமே?" என்றபடியாக அவளது கையைப்பிடித்து சைக்கிளின் முன்னால் அமரவைத்தான் யோகன்.

 "மாட்டன் மாட்டன் நான் முன்னுக்கு இருக்க மாட்டன். பின்னுக்குத்தான் இருப்பன்''. 

"இல்ல பின்னுக்கு அந்த அண்ணா இருக்கோணும்"

 "ஆர் அவர்? நான் பின்னுக்குத்தான் இருப்பன்"

 "சரி வாங்கோ. டேய் நீ முன்னுக்கு ஏறு" 

"ஆர் அந்த அண்ணா?" 

"நானோ. என்ர பேர் இளையவன்" என்றபடியாக இருட்டை கிழித்தபடி அவர்களது துவிச்சக்கர வண்டி கவிக்குட்டியின் வீட்டை நோக்கி விரைந்தது. அந்தக்காலப்பகுதி அரசாங்கத்திற்கும் 'அண்ணைமாருக்குமான' சமாதான உடன்படிக்கைக்காலப்பகுதி என்பதனால் மக்களோடு மக்களாக சாதாரணமாக யாழ்ப்பாணத்திலும் 'அவர்களை' காணமுடிந்தது.

2004. அது யுத்தநிறுத்த உடன்படிக்கையின் படி பல செயற்பாடுகள் இடம்பெற்ற காலப்பகுதி. இதன்கரணமாக 'அவர்களின்' செயற்பாடுகளும் கொள்கைகளும் வாழ்வியலம்சங்களும் ஏனைய மக்களின் வாழ்க்கையோடு ஒன்றுபட ஆரம்பித்திருந்தன. கவிக்குட்டி அப்போதுதான் தரம் ஆறில் படித்துக்கொண்டிருந்தாள். யோகன் அப்போதுதான் அவளுக்கு அறிமுகமாகியிருந்தான். கவியின் அப்பாவின் தூரத்து உறவினனாம். அண்ணா என்றால் உயிராய் நிற்கும் அவளுக்கு ஒரு அன்னையாயே யோகம் மாறிப்போனான். 

'அண்ணா'
'ம்ம் என்னம்மா?'
'எங்கயாச்சும் கூட்டிட்டுப்போ'
'சரீம்மா. நீ டியூசன் முடிச்சிட்டு வா போவம்'

இப்படியாக இருவரின் அன்பும் ஒருவாரத்துல் இடைவெளியின்றி ஒன்றிப்போனது. யோகன் வரும் நேரத்தை பார்த்து கவிக்குட்டி காத்திருப்பதும் கவிக்காயே அடிக்கடி அவள் வீட்டிற்கு அவன் வருவதும் வழக்கமானது. ஒருவரிலும் இல்லாத பிடிப்பு அவள்மேல் அவனுக்கு. அவள் ஒரு குட்டி தேவதையாகவே மாறிப்போனாள் அவன் வாழ்க்கையின் இடைப்பக்கங்களில். கவிக்கு சொல்லவே வார்த்தையில்லை. அண்ணனின் அன்பு எப்பிடியிருக்குமென்று ஏங்கியவள் இன்று இவன் கைகளில் குழந்தையாகவே மறுபடி பிறந்துவிட்டாள்.

'அண்ணா இது என்ன உங்கட கையில கழுத்தில கிடக்கு?'

'அதுவாம்மா அது அண்ணாண்ட நம்பர். அண்ணா துலஞ்சுபோனா கண்டுபிடிக்கவேணுமெல்லோ'

':'( அண்ணா....'

'அச்சோ ஏண்டா அழக்குடாது எண்ட செல்லமெல்லோ'

'நீ துலஞ்செல்லாம் போகமாட்டாய்தானே'

'இல்லம்மா அண்ணா உன்னவிட்டுட்டு எங்கயும் போகமாட்டன்.'

ஒருமாதம் கடந்திருக்கும். யோகனின் வருகை கொஞ்சம் கொஞ்சமாய் குறையத்தொடங்கியது. கவிக்குட்டிக்கு அண்ணனை பார்க்கமுடியவில்லை என்ற கவலை அதிகமாகியது. ஒரு நாள் அவனும் வந்தான். 

'கவீம்மா உங்களிட்ட இருக்கிற அண்ணாட போட்டோஸ் எல்லாத்தையும் எரிச்சுவிடுங்கோ'

என்றபடி கவியின் அப்பாவிடமும் விடைபெற்றான். அதன்பிறகு கவிக்குட்டி அவனை பார்க்கவே இல்லை. அவன் கால்த்தடத்தின் மண்துணிக்கைகளை கொஞ்சமாய் பொறுக்கிவைத்திருந்தாள். கடைசியில் அது காணாமலேபோகுமென்று அப்போது அவள் அறிந்திருக்கவில்லை. அவன் போகும்போதே அவளின் அப்பா தனக்குள் சொல்லிக்கொண்டார்
'ஹ்ம்.. சண்டைக்கு போறாங்கள் போல'.