Tuesday, October 28, 2014

என் ஒளியிழந்த வானை உமிழ்ந்துகொண்டிருக்கிறாய் ஷாகிரா..!


என் ஒளியிழந்த வானை 
உமிழ்ந்துகொண்டிருக்கிறாய்
ஷாகிரா

சிவப்பு பச்சை மஞ்சளென
நீ துப்பிய வண்ணங்கள்
அங்கங்கே
சிதறி பறக்கின்றன.

வானவில்லின்
வண்ணம் விட்டு
புது வண்ணம் 
குழைத்து இழைக்கிறாய்.

’சர்பத்’நிறத்தையும் மிஞ்சிடும்
இளவண்ண இதழ்கொண்டு
இதழ்குவிக்கின்றாய்.

ஜொலித்து நிற்பது
என் வண்ணம் கரைந்த
வானம் மட்டுமல்ல
எண்ணமிழந்த
வாழ்க்கையும் தான்.

உன் புன்னகையின் 
விழிம்பில்
பரிசளிக்கின்றாய் 
’குதா’வின் 
பரிசுத்த ஆசிகளை.

ஷாகிரா...

ஓ..நீ 
எங்காவது 
பறந்துகொண்டேயிருப்பாய்
ஏதாவது ஒரு
ஒளியற்ற வானை
வண்ணமாய் உமிழ்வதற்கு!



-பிறைநிலா-

Wednesday, September 24, 2014

இச்சைப்பொருளல்ல பெண்கள்-இன்னோர் உயிர் என்று..


இன்றைய நாளில் ”மாலினி22 பாளையங்கோட்டை” திரைப்படம் பார்க்கக்கிடைத்தது. ஸ்ரீபிரியா அவர்களுடைய இயக்கத்தில் நித்யாமேனன் மற்றும் கிறிஸ் ஆகியோரின் நடிப்பில் அரவிந்த் ஷங்கரின் இசையில் வெளியான திரைப்படம் இது.

சமூகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மையப்படுத்தியவாறு திரைக்கதையின் மையம் நகர்கின்றது எனலாம். பெண்ணை ஏமாற்றி பணத்திற்காய் அவளை பலியாக்கி அவள் உடலை அத்துமீறி ருசிபார்க்கும் ஒருசில ’பதர்களால்’  பலியாக்கப்பட்ட பெண்ணின் நகர்வுகளே திரைப்படத்தின் பிரதான நரம்புகளாக பின்னப்பட்டுள்ளது. 



அழகான காட்சியமைப்போடு மென்மையாய் நகரும் முற்பாதிக்கும் எதிர்பார்க்கமுடியாத திருப்பத்துடன் நகரத்தொடங்கும் பிற்பாதிக்கும் இடையான இணைப்பு ஒரு சீரோடு நகர்த்தப்பட்டுள்ளது எனலாம். குழந்தைத்தனமும் துடுக்குத்தனமுமுடைய நாயகிக்கும் அழகான கதாநாயகனுக்கும் இடையே ஏற்படுகின்ற காதல் அழகான ஒரு மெல்லிசையாக பதியப்பட்டுள்ளமை சிறப்பு. காதலை மேலோட்டமாயில்லாமலும் அதேநேரம் ஆழமான காட்சிகளின்றியும் வெளிப்படுத்தியுள்ளமை அழகு. 

மேலும் closeup shotsக்கள் இங்கு அதிகமானதாக காணப்பட்டாலும் அவற்றை மிகவும் அழகானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் காட்சிப்படுத்தியுள்ளனர். காட்சியை காட்சிப்படுத்தியுள்ள விதங்களும் வடிவங்களும் அழகு எனலாம். ஏனைய திரைப்படங்களின் மசாலா அம்சங்களைப்போலல்லாது இத்திரைப்படமானது மாறுபட்ட ஒரு கோணத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்து நிகழ இருப்பவற்றை பார்வையாளர்கள் ஊகிக்கமுடியாமல் அமைத்திருக்கும் திரைக்கதையின் ஓட்டம் சிறப்பானது.

தவிர கதாநாயகனுக்கே வில்லன் எனும் பாத்திர வார்ப்பு வழங்கப்பட்டவிதம்தான் மிகமுக்கியமான ஒரு திருப்பமாய் காணப்படுகின்றது. யாரும் எதிர்பாராத ஒரு விடயம் இது. கதாநாயகன் அறிமுகக்கதாநாயகனாயிருந்தாலும் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளமை மற்றுமொரு சிறப்பு எனலாம்.



எனினும் குறித்த பெண்மீதான அத்துமீறல்களை வெளிப்படுத்தும் காட்சிகளின் வக்கிரத்தை சிறிது குறைத்திருக்கலம் என எண்ணத்தோன்றினாலும் அந்த சந்தர்ப்பத்தில் அப்பெண் அனுபவிக்கும் வலிகளை பார்வையாளர்களுக்கு அக்காட்சிகள் உணர்த்தியது என்றவகையில் ஓரளவு ஏற்றுக்கொள்ளமுடிகிறது. பெண்கள் சிறைச்சாலையில் படமாக்கப்பட்டவிதம் நன்று. மேலும் ஒவ்வொரு பாத்திரங்களுக்கும் முக்கிய இடம் கொடுக்கப்பட்டிருந்தாலும் சிலவற்றிற்கான கால அளவு குறைவானதாகவே காணப்படுகின்றமை சிறு குறை எனலாம்.

’ஆண் என்பவன் பெண்ணுக்கு காவலாயிருக்கவேண்டுமே தவிர அவளை இம்சிப்பவனாகவோ பலியாக்குபவனாகவோ இருக்கக்கூடது’ என்பதை வெளிப்படுத்தும் சமச்சீர்நிலை அருமை. அநீதிக்குள்ளாக்கப்பட்ட பெண் அதை எதிர்க்கும் மனநிலையோடு மீழுவாளானால் அதனால் இப்படியும் விளைவுகள் ஏற்படலாம் என்பதை பிற்பாதி கூறுகிறது. துரோகிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை என்னைப்பொறுத்தவரை ஏற்புடையதே எனினும் சட்டத்தை இவ்வாறு கையிலெடுத்தல் என்பது சாதாரணவாழ்வில் ஏற்புடையதன்று எனலாம்.



கிட்டத்தட்ட ஒரு ஆவணத்திரைப்படத்தினைப்போன்ற கதை நகர்வுகளுடன் படமாக்கப்பட்ட இத்திரைப்படமானது குறைகள் இருந்தாலும் சிறந்த படைப்புக்களில் ஒன்று என்பது என் கருத்து. ‘கிளுகிளுப்பு’இல்லாத திரைப்படங்கள் ரசிகர்களை இன்றைய நாட்களில் கவர்வது என்பது கடினமான ஒரு விடயம்தானே.. அதற்கு இத்திரைப்படமும் என்ன விலக்காகுமா?



பாதிக்கருத்துக்களை கூறிவிட்டேன் மீதியை நீங்களே பார்த்து புரிந்துகொள்ளுங்களேன் நண்பர்ஸ்.. 

Sunday, June 1, 2014

யுகம் பல தாண்டியதாய்..!


இன்றைய முதன்நாளில் 
சிறகடித்து பறந்திருந்தோம்...
சில கர்வங்களையும் 
பல சிரிப்புக்களையும் 
உனக்காகவே உதிர்த்திருந்தேன் நான்...

உன் நெருக்கம் 
உனதான என் கிறக்கம் 
நம் அணைப்பு அணைப்பினூடே 
ஜனித்துப்போன 
நேசத்தின் துளிர்ப்பு 
இதையும் தாண்டியதாய் 
உன் ஆண்மையில் உறைந்துபோன 
தாய்மையின் தனி ஸ்பரிசம்... 

நமக்கான தேசமதில் 
என்னை மட்டும் ரட்சிப்பதற்காய் 
நீ ஒரு ஆண் தேவதைபோல் தெரிந்திருந்தாய் 
இந்த விழிகளுக்கு...

ஸ்வாசத்தில் நிறைந்தாய் 
என் நேசத்தில் மலர்ந்தாய்.. 
எனக்குள் மலர்ந்து 
என்னையே இழுத்துக்கொண்டாய்...

வற்றிவிடாத ஜீவநதி நீ...
உன் அலையடிப்பில் 
ஜனித்து சிதறும் நீர்க்குமிழி நான்...
நீ மீட்டுகின்ற இசைவீணையாய் 
நாதமெழுப்பும் என் ஜீவன்...

உன் பேச்சுக்களின் அணைப்பிலும் 
கண்பார்வைகளின் இமைப்பிலும் 
இணைந்துபோனேன் உன்னிடத்தில் 
ஸ்பரிசமற்ற அணைப்புக்களாலே...

அஹிம்சையாய் இம்சிக்கும் 
உன் காதல் போதும் 
உன்னவளாய் நான் உருக்கொண்டு 
யுகம்பல தாண்டிட.. 

காமத்தில் 
காதலை சிதறவிடாது கோர்க்கவும் 
காதலில்
தாய்மையை அழகாக்கிச் சூடவும் 
உன்னால் மட்டுமே முடிகின்றது...

கணவனாய் காதலனாய் 
அண்ணனாய் அன்னையாய் 
சமயத்தில் தோழனாயென்று 
பன்முகம் கொண்ட பாசாங்கற்ற திறமை நடிகன் நீ...
உன் நடிப்பின் உறைதலில் 
சிறகடித்துபறக்கும் சிட்டாய் 
உன் பின்னே நான்...

வா செல்வோம் 
யுகம் பல தாண்டியதாய்
நீயும் நானும் சிறகடித்து பறப்போம்...
அந்த ஆதித்தாயின் பிள்ளைகளாய் 
நாம் மட்டும் மீண்டும் மீண்டும் ஜனிப்போம்...


(காதலர்களுக்காய் ஓர் கற்பனையுலகு)

-பிறைநிலா- 

Tuesday, February 11, 2014

அத்தான் உனை ..



உந்தன் விழிசொல்லும் 
ஒற்றை வார்த்தையில் 
பற்றிப்பிடிக்கின்றது 
நாணம்... 

உந்தன் 
மீசைநுனி சொல்லும் 
ரகசியவார்த்தையில் 
வற்றியே போகின்றது 
வெட்கம்... 

கைகள் கோர்க்கத்தான் 
தொட்டு விலகத்தான் 
அத்தான் உனை 
அன்பால் அணைக்கத்தான்... 

மௌனித்த பல 
நொடிகளில் 
இதழ்களால் 
கோடிமுறை பேசிவிடுகிறாய்... 

புன்னகையை 
மட்டும் விதைக்கிறது 
பெண்மை...
அதையேனும் விட்டுச்செல் 
களவாடிப்போகாமல்.. 

(யாவும் கற்பனையே.) 

-பிறைநிலா-

Friday, January 31, 2014

வந்துவிடு..!



வா..
வந்து பூட்டிக்கொள்..
வாட்டமில்லாத
உன் இமைகளோடு
வருடிக்கொள்..

தேய்கின்ற காலங்களை
தேயாமல்
பார்த்துக்கொள்வோம்..

ஓயாத கடல்
பெருக்கி
ஆடையாக
உடுத்துக்கொள்வோம்..

வானவில்லை வட்டமிட்டு
தெம்மாங்கு
நாம் படிப்போம்..

தென்றலைத் தேராக்கி
தேவலோகம்
போய்வருவோம்..

என்மேல்
உனை உடுத்து..
உன்மேல்
எனை அணைத்து..

உந்தன் நெஞ்சில்
ஒட்டிக்கொள்
எந்தன் உயிரை..

இரு விரலிடையில்
தைத்துக்கொள்
எந்தன் இதழ்களை..

உனைநோக்கி 
எனையிழுத்து
உயிரோடு
கவியெழுது..

வா..
வசந்தங்கள் 
பல சொல்லி
வருத்தங்களை
களைந்துவிடு..
வந்துவிடு..!

கவியன்புடன்
-பிறைநிலா-

Thursday, January 30, 2014

புரியவில்லை..



உனக்குத்தான் புரியவில்லை 
எந்தன் நேசத்தின் 
ஆழம் என்னவென்று...

உனக்குத்தான் புரியவில்லை 
நான் வாடும் தனிமையில் 
நீ வேண்டும் என்பது...

உனக்குத்தான் புரியவில்லை 
உலகமெல்லாம் நீயாகி 
என்னை 
உருக்குலைக்கிறாய் என்பது... 

தூங்கும்போதும் 
உன் ஞாபகம்...
விழிகளுள்ளும் 
உன் பார்வைகள்...

இதயத்தில் என்றும் 
உன் வார்த்தைகள்...
தனியாய்த்தான் தவிக்கிறேன் 
என்றாலும் 
நீ வாழ்கிறாய் என்னுள்ளே...

தோற்றுத்தான் போய்விட்டேன் 
உன்னிடத்தில் மட்டுமல்ல.. 
இந்த உலகத்தின் 
பார்வையிலும்தான்...

-பிறைநிலா