Saturday, July 18, 2015

பலிகளின் பிரமாண்டம் ’பாகுபலி’



பிரமாண்டங்களின் உச்சத்தில் ரசிகர்களை பலியாக்கியது ‘பாகுபலி’
ஆரம்பமே அட்டகாசமான அசத்தல். அனைத்து பாத்திரவார்ப்புக்களும் அச்சுஅசலாக பொருந்தியிருக்கிறது அத்தனை நடிகர்களுக்கும். படப்பிடிப்பின் ஒவ்வொரு தளங்களும் கிராபிக்சோடு சேர்ந்து அட்டகாசமான காட்சிப்பின்னணி.



சரி மகிழ்மதி கோட்டைக்கு வருவோம். கிராபிக்ஸ் அசத்தல். கோட்டை பிரமாண்டம் எனினும் மனதை அவ்வளவாக தொட்டுவிடவில்லை என்பது என் கருத்து. சாண்டில்யன், கல்கியின் எழுத்துக்களில் கோட்டையின் வசீகரம் இருப்பதுபோல் இங்கு காட்சிகளில் அவ்வளவாக தென்படவில்லை.

படத்தை பார்க்கும்போது சாண்டில்யன், கல்கி ஆகியோரின் வரலாற்று எழுத்துக்களும் அதன் காட்சிகளும் மனதினுள் வந்துபோயின. நீண்டநாட்கள் இப்படியொரு திரைப்படத்தை வரலாற்றியலினூடாக பார்த்துவிடவேண்டுமென்ற அவா நிறைவேறியதில் திருப்தியே.

இசை அருமை எனினும் ஒருசில சந்தர்பங்களில் காட்சியோடு அவ்வளவாக பொருந்திவிடவில்லை. காட்சியமைப்புக்களில் காமெரா பிரமாதம். காமெரா போகுமிடமெங்கும் பிரமாண்டங்களின் எல்லையற்ற சாதனை.



அடுத்து படத்தில் சொல்லப்படவேண்டிய பாத்திரங்கள் மூவர். தமன்னா மற்றும் சத்தியராஜ்.
தமன்னாவின் நடிப்பு முதல்தடவையாக அபாரம். அதனோடு சேர்த்து போராளிப்பெண்ணின் (அவந்திகா) பாத்திரத்தில் கச்சிதமாய் வாழ்ந்திருக்கிறார். முக்கியமான விடயம் என்னவென்றால் தமன்னாவின் நிறக்குறைப்பு (மேக்கப்) மிகவும் கச்சிதமாய் பொருந்தியிருக்கின்றமையே. 


அடுத்து சத்தியராஜ். பலநாள் இடைவெளியின் பின்னர் இவரது அபாரமானநடிப்பை காணும் வாய்ப்பு. அட்டகாசம். என்னைப் பொறுத்தவரை திரைப்படத்தின் நாயகனே இவர்தான்.


காலகேய அரசனாக  பிரபாகரின் நடிப்பு அசத்தல். 

அடுத்து காதல்காட்சி. அடடா வரலாற்றுநாவல்களில் படித்து சுவைத்த சங்கத்து காதல் இதுவோ என்று எண்ணத்தோன்றுகிறது. இக்காட்சியில் என் கண்முன்னே சாண்டில்யன் எழுத்துக்களே வந்துபோயின. போராட்ட லட்சியம் நிறைந்தவளுக்குள் பெண்மையை தட்டியெழுப்பும் நாயகனின் நளினம் அருமை. காதலை உணரச்செய்யும் அந்தக்கணத்தில் கமெராவின் கைவரிசை அசத்தல்.

’’கண்டம்பரி’’ நடனத்தின்மூலம் itemsong காட்சிகள் - வியப்பு!



ஒருசில இடங்களில் கிராபிக்ஸ் சுதப்பல் என்றாலும் காட்சிப்பிரமாண்டத்தில் அது மறைந்துபோனது. என்னதான் இருந்தாலும் காலகேயர்களின் யுத்த காட்சி அத்தனை பிரமிப்பு. திரைக்கதையுடன் சேர்த்து நாமும் வாழ்ந்துபாத்தோம். வாட்களின் வீச்சும் ஈட்டிகளின் கூர்மையும் பிரமிப்பு. இதனைவிட நாவல்களில் மட்டுமே படித்து சுவைத்த போர்க்கருவிகளின் பாவனையை காட்சியில் காணும் அந்தக்கணம் எம்முள்ளும் இரத்தம் கொதிக்கும். 

மொத்தத்தில் பாகுபலி பிரமாண்டங்களின் உச்சம். 

ராஜமௌலியிடம் ஒரேயொரு கேள்விதான் :-
‘நீங்க ஏன் பொன்னியின் செல்வனை படமாக்கக்கூடாது ? (சரித்திரத்துவம் குறையாமல்) ’

பாகுபலியின் அடுத்த பகுதிக்காய் கத்திருக்கிறோம்.

-பிறைநிலா-


Saturday, July 11, 2015

கௌதமி vs கமல் vs ஆஷா சரத்.



’பாபநாசம்’ பெயரைப்போலவே படமும் அருமை.

படத்தின் வெற்றிக்கு வாய்ப்பளித்த விடயங்கள் ஏராளம்.
1) கௌதமியின் இயல்பான நடிப்பு
2) கமலின் யதார்த்த பாத்திரபுனைவு
3) படத்தின் காட்சியமைப்பு
4) மொழிநடை
5) காமெரா, இசை, ஒளிப்பதிவு, திரைக்கதை....

விறுவிறுப்பான அதேநேரம் அழகான திரைக்கதையுடன் அமைந்த அற்புதமானதொரு கலைப்படைப்பு. ஒவ்வொரு பாத்திரங்களின் கண்கள் பேசும் மொழியையும் ஒன்றுவிடாமல் பதிவுசெய்துள்ளது காமெரா. எப்படி ஒரு நடுத்தர குடும்பம் அன்பாலும் அழகாலும் பின்னப்பட்டிருக்கும் என்பதை வாழ்ந்துகாட்டியிருக்கிரார்கள். படம்பார்க்கும்போதே நாமும் அவற்றோடு வாழ்ந்துவிடுகிறோம்.

எனக்கென்னவோ பலநாட்களின் பின் கமலின் இயல்பான நடிப்பை உணரமுடிந்தது. ( இப்பகூட கமல் அழகாத்தான் தெரியுறாரு கௌதமிய விட) அன்பான தந்தை தாய், அழகான பிள்ளைகள் என அழகியதொரு குடும்பம். வாழ்கையின் ஆரம்பத்தில் இருந்த காதல் மாறாமல் கைகோர்க்கும் அழகான கணவன் மனைவி என யதார்த்தவாழ்வியலின் பிரதிபலிப்புக்கள் அருமை.

அளவான விறுவிறுப்புடன் ரசிகர்களுக்கான ஊகம் எதுவுமின்றி காட்சி நகர்கிறது. காட்சியமைப்புப்பற்றி பார்த்தால் செயற்கையின்றி இயற்கையோடு இணைந்த அழகான பிரதேசங்களில் படமாக்கப்பட்டுள்ளது அருமை. காமெரா கதைபேசியுள்ளவிதம் அட்டகாசம்.
குறித்த இடங்களில் வரும் extreme close up shot மற்றும் extreme wide shot இன் காட்சிக்கோர்ப்பு அருமை.

ஜிப்ரானின் இசை அருமை. கதையோடு கதைபேசும் இசை அட்டகாசம். பின்னணியிசை தேவைக்கேற்றவகையில் அருமை.
கதைசொல்லும் பாங்கு சலிப்பற்றவகையில் ஆர்வத்தைதூண்டும் விதமாய் நகர்கிறது படைப்பு.



இதனைவிட முக்கியவிடயம் ஆஷா சரத். வைத்தகண் எடுக்காமல் பார்க்கவைக்குமளவு அற்புதமான நடிப்பு. இவரது கதைபேசும் கண்கள் அருமை. பாத்திரத்திற்கேற்ற உடலசைவு + பேச்சு + கொஞ்சம் திமிர் + கெஞ்சும் தாய்மை + பேச்சு + போலீசுக்கேற்ற கம்பீரம் எல்லாம் அட்டகாசம்.

ஆக மொத்தத்தில் அழகான அற்புதமான படைப்புக்களில் இதுவும் ஒன்று.
பாபநாசத்தில் குளித்து பாழ்பட்டுப்போன தமிழ்சினிமாவின் பாவங்களை கழுவிக்கொள்வோம்.

-பிறைநிலா-