Wednesday, September 24, 2014

இச்சைப்பொருளல்ல பெண்கள்-இன்னோர் உயிர் என்று..


இன்றைய நாளில் ”மாலினி22 பாளையங்கோட்டை” திரைப்படம் பார்க்கக்கிடைத்தது. ஸ்ரீபிரியா அவர்களுடைய இயக்கத்தில் நித்யாமேனன் மற்றும் கிறிஸ் ஆகியோரின் நடிப்பில் அரவிந்த் ஷங்கரின் இசையில் வெளியான திரைப்படம் இது.

சமூகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மையப்படுத்தியவாறு திரைக்கதையின் மையம் நகர்கின்றது எனலாம். பெண்ணை ஏமாற்றி பணத்திற்காய் அவளை பலியாக்கி அவள் உடலை அத்துமீறி ருசிபார்க்கும் ஒருசில ’பதர்களால்’  பலியாக்கப்பட்ட பெண்ணின் நகர்வுகளே திரைப்படத்தின் பிரதான நரம்புகளாக பின்னப்பட்டுள்ளது. அழகான காட்சியமைப்போடு மென்மையாய் நகரும் முற்பாதிக்கும் எதிர்பார்க்கமுடியாத திருப்பத்துடன் நகரத்தொடங்கும் பிற்பாதிக்கும் இடையான இணைப்பு ஒரு சீரோடு நகர்த்தப்பட்டுள்ளது எனலாம். குழந்தைத்தனமும் துடுக்குத்தனமுமுடைய நாயகிக்கும் அழகான கதாநாயகனுக்கும் இடையே ஏற்படுகின்ற காதல் அழகான ஒரு மெல்லிசையாக பதியப்பட்டுள்ளமை சிறப்பு. காதலை மேலோட்டமாயில்லாமலும் அதேநேரம் ஆழமான காட்சிகளின்றியும் வெளிப்படுத்தியுள்ளமை அழகு. 

மேலும் closeup shotsக்கள் இங்கு அதிகமானதாக காணப்பட்டாலும் அவற்றை மிகவும் அழகானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் காட்சிப்படுத்தியுள்ளனர். காட்சியை காட்சிப்படுத்தியுள்ள விதங்களும் வடிவங்களும் அழகு எனலாம். ஏனைய திரைப்படங்களின் மசாலா அம்சங்களைப்போலல்லாது இத்திரைப்படமானது மாறுபட்ட ஒரு கோணத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்து நிகழ இருப்பவற்றை பார்வையாளர்கள் ஊகிக்கமுடியாமல் அமைத்திருக்கும் திரைக்கதையின் ஓட்டம் சிறப்பானது.

தவிர கதாநாயகனுக்கே வில்லன் எனும் பாத்திர வார்ப்பு வழங்கப்பட்டவிதம்தான் மிகமுக்கியமான ஒரு திருப்பமாய் காணப்படுகின்றது. யாரும் எதிர்பாராத ஒரு விடயம் இது. கதாநாயகன் அறிமுகக்கதாநாயகனாயிருந்தாலும் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளமை மற்றுமொரு சிறப்பு எனலாம்.எனினும் குறித்த பெண்மீதான அத்துமீறல்களை வெளிப்படுத்தும் காட்சிகளின் வக்கிரத்தை சிறிது குறைத்திருக்கலம் என எண்ணத்தோன்றினாலும் அந்த சந்தர்ப்பத்தில் அப்பெண் அனுபவிக்கும் வலிகளை பார்வையாளர்களுக்கு அக்காட்சிகள் உணர்த்தியது என்றவகையில் ஓரளவு ஏற்றுக்கொள்ளமுடிகிறது. பெண்கள் சிறைச்சாலையில் படமாக்கப்பட்டவிதம் நன்று. மேலும் ஒவ்வொரு பாத்திரங்களுக்கும் முக்கிய இடம் கொடுக்கப்பட்டிருந்தாலும் சிலவற்றிற்கான கால அளவு குறைவானதாகவே காணப்படுகின்றமை சிறு குறை எனலாம்.

’ஆண் என்பவன் பெண்ணுக்கு காவலாயிருக்கவேண்டுமே தவிர அவளை இம்சிப்பவனாகவோ பலியாக்குபவனாகவோ இருக்கக்கூடது’ என்பதை வெளிப்படுத்தும் சமச்சீர்நிலை அருமை. அநீதிக்குள்ளாக்கப்பட்ட பெண் அதை எதிர்க்கும் மனநிலையோடு மீழுவாளானால் அதனால் இப்படியும் விளைவுகள் ஏற்படலாம் என்பதை பிற்பாதி கூறுகிறது. துரோகிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை என்னைப்பொறுத்தவரை ஏற்புடையதே எனினும் சட்டத்தை இவ்வாறு கையிலெடுத்தல் என்பது சாதாரணவாழ்வில் ஏற்புடையதன்று எனலாம்.கிட்டத்தட்ட ஒரு ஆவணத்திரைப்படத்தினைப்போன்ற கதை நகர்வுகளுடன் படமாக்கப்பட்ட இத்திரைப்படமானது குறைகள் இருந்தாலும் சிறந்த படைப்புக்களில் ஒன்று என்பது என் கருத்து. ‘கிளுகிளுப்பு’இல்லாத திரைப்படங்கள் ரசிகர்களை இன்றைய நாட்களில் கவர்வது என்பது கடினமான ஒரு விடயம்தானே.. அதற்கு இத்திரைப்படமும் என்ன விலக்காகுமா?பாதிக்கருத்துக்களை கூறிவிட்டேன் மீதியை நீங்களே பார்த்து புரிந்துகொள்ளுங்களேன் நண்பர்ஸ்..