Thursday, June 28, 2012

பூபாளமிசைக்கும் என் கவி..



விடியலைத்தேடிடும்
ஒவ்வொரு
அதிகாலைவேளையிலும்
என் கவி
பூபாளமிசைக்கும்...

நம்பிக்கையின் 
நட்சத்திர ரேகைகள்
அதன் ஸ்வாசத்தில்
பொதிந்திருக்கும்..

நட்புடன் 
கைகோர்த்து
நளினமாய்
நடை பழகி
நாட்களை
வசந்தமாக்கும்..

மௌனமாய்
அந்திசிந்தும் நேரம்
மார்போடு 
கதை பேசும்..

சோகங்கள்
மறந்து
இருள் போர்த்து
துயில்கையில்
தாலாட்டின்
இசைபாடும்..

மீண்டும்
விடியலைத்தேடிடும்
ஒவ்வொரு
அதிகாலைவேளையிலும்
என் கவி
பூபாளமிசைக்கும்...!

மௌனமான நேரம் ...




மௌனமான நேரம்
மனதின் காயங்கள்
மீண்டும் ஜனித்திடும்..
தனிமையின்
தோழியாய்
நான் 
மாறிடும் நேரம்...

சொல்லப்படாத
சோகங்களையும்
வற்றிவிடாத 
காயங்களையும்
கழைவதற்காய்
பயணப்படுகிறேன்..

பசுமை 
போர்த்திய
பூமி..
அதில்
செழுமை
சூடிய
வனாந்தரம்..

தனித்து
நடக்கிறேன்..
தவிப்புகளை
புதைத்தபடி..

தத்திவரும்
சின்னச் சிட்டும்
தழுவ வரும்
வண்ணக் காற்றும்
வஞ்சமில்லாமல்
என்
நண்பராகினர்...

சோகத்தின்
ஆடை
சிறிது சிறிதாக
கழையப்பட்டது போன்ற
ஓர் எண்ணம்..

நழுவி விழும்
சோகத்தின் ஆடையை
பார்க்காமலே 
என் வழி செல்கிறேன்-
என் நண்பர்களுடன்...

Sunday, June 17, 2012

விண்முட்டும் தந்தை புகழ்..



கனவின் மடிதனிலே
தவழ்ந்த எனக்கு
கலைகள் பல 
கற்றுத்தந்தாய்...

காவியத்திலும்
தமிழ் தாயின்
ஓவியத்திலும்
காதல் எழவைத்தாய்...

மண்ணின்
பெருமைதனை
மார்தட்டி 
தினம் மலர்ந்தாய்...

பிஞ்சு மழலை
என் மொழி கேட்டாய்
தாயவள் தனிமைக்கு
மீண்டும் தாயானாய்..


உன் கைப்பிடி
ஊட்டிய சோறும்
உன் விரல் பிடித்து
ஊர் பார்த்த நாட்களும்
இன்று கனவானதே
என்னுள்...

விண் பார்த்து 
கதை பல சொல்வாய்
என் கண் பார்த்து
கவிதைகள் சொல்வாய்...

நான் உளறும்
சின்ன மொழிகளை
கவிதைகள்
என்பாய்..

பெண்ணாய்
நான் பிறந்தாலும்
ஒரு ஆணின் வீரத்தை
என்னுள் ஊட்டி வளர்த்தாய்...

தமிழன் எனும் 
உரத்தினை
என் உள்ளமெல்லாம்
தூவி வளர்த்தாய்...

தமிழ்த்தாயின் மடி
கொஞ்ச
தரணியிலே
பரணி பாட
தந்தையே உன்
அன்புதானே
துளிர்க்கவைத்தது என்னை...

ஆனால்..
இன்று ஏதோ
தொலைந்தது போல்
கனவுகளை
தொலைத்ததுபோல்
கண்ணீரே
விடையாகியது
எனக்கு..

காலத்தின் 
சோதனையோ..?
விதி செய்த 
சாதனையோ..?

விழிநீர் மட்டுமே
விடையாக என்னுள்..
இன்றுவரை
அந்த சிறுமியாக
இருந்திருக்கலாமா..?

வினா மட்டுமே
விடையாகிறது 
எனக்கு...

பெண்ணென்று
பிறந்திட்டால்
பொம்மையாகவே
வாழ வேண்டுமா..?

வரலாற்றின்
ஸ்வாசத்தை
வஞ்சிக்காமல்
சுகிக்கவைத்தாய்..
வரலாற்றின் வாசத்தோடு
உன் வாசனையும்
வாழும் என் 
கல்லறை கடந்தும்...!