Saturday, December 28, 2013

இரவுகளின் நீட்சி..இரவுக்கு மட்டுமே
நீட்சிகளின் வரங்கள்
கொடுக்கப்பட்டிருக்கிறதுபோலும்..
சொடுக்கப்பட்ட
கடிகார கம்பிகள்
நகர மறுக்கும்..
அவலங்களின்
உச்ச ஸ்தாயி
உயிரை உலுக்கும்..
எங்கோ தொலையத்துடிக்கும்
ஜீவனும் புதைந்துபோகும்
அந்தகாரத்தில்..
விடியல்களை ஒத்திப்போடும்
இந்த இரவுக்கு மட்டுமே
நீட்சிகளின் வரங்கள்
கொடுக்கப்பட்டிருக்கிறதுபோலும்..


-கவியன்புடன்
பிறைநிலா-

Tuesday, November 26, 2013

மீண்டும் விதைத்தல்..


மண் பிளந்து
மரம் நாட்டி
வேர் பிளந்து
பணமாக்கி
பிணமாய் போகும்
உலகமிது..

இங்கு
மரணம் மட்டுமல்ல
மனிதம் கூட
மரணித்துவிட்டது
இன்று..

ஆழக்கடலோடி
நீல வான் பல தாண்டி
புனிதத்தை வைத்தான்
இறைவன்..

அதை
புதைப்பதில்
இனிமைகண்டான்
மனிதன்..

தென்பொதிகை
இசைபாடி
தேன் சிந்தும்
கனிதேடி
தொலைந்துதான் போனோம்
பலவற்றை
தொலைத்தும்தான் போனோம்..

ஏக்கத்திலும்
எதிர்ப்பினிலும்
எரித்துவிட்டோம் 
எம் வாழ்வை..

என்றாவது
புதிதாய் விதைப்போம்
நம் கனவை..

மீண்டும்
புதிதாய் ஜனிப்பிப்போம்
வெண்நிலவை..


-கவியன்புடன்
பிறைநிலா-

Saturday, October 26, 2013

பூனைகள் உலகம்..


எங்கோ 
நீண்டுபோகின்ற
இரவு..
அதற்குள் 
தொலைந்துபோகின்ற 
நிலவு..

மௌனங்கள்
உடைபட்டு
மோகங்கள்
தடைப்பட்டு
சலங்கள்
விதைக்கப்படுகின்றன..

சுவர்களை சுற்றியும்
‘மியாவ் மியாவ்’ 
சத்தம்..

பச்சை நிற விளக்கு
அதில்
பளிச்சிட்டு எரியும்
நெருப்பு..

இரைகளைத்தேடியதாய்
இரைச்சலைக்கிளப்புகிறது
இயற்கை..

கறுப்பு பூனைகளின்
மரத்துப்போன நாவிற்கு
மலர்ந்து மணம்பூத்த
மலர்களே இரையாக..

வெள்ளை நிற
பூனைகளின்
வண்ணநிறம்கூட
விஷமாகும் காலமிது..

எந்த நிறமென்றாலும்
இவை யாவும் ஒரே
தரம் அன்றோ..
எங்கும் 
மலர்களை சிதைத்துப்போக
மானிடராய் பிறந்ததன்றோ..

எங்கெங்கிலும்
பச்சை நெருப்பு..
அதில் கருகிச்சரியும்
மங்கை விருப்பு..

மீண்டும்
எங்கோ 
நீண்டுபோகின்ற
இரவு..
அதற்குள் 
தொலைந்துபோகின்ற 
நிலவு..


-கவியன்புடன்
பிறைநிலா-

Tuesday, October 22, 2013

அண்ணனுக்காக..


அண்ணன் தங்கை உறவில் எப்போதும் ஒரு காமம் இல்லா காதல் இருக்கத்தான் செய்கிறது... 

காதலனாலோ அல்லது காதலியாலோ அந்தக்காதலை தந்துவிட முடியாது... 
தாய்மையுடன் கலந்த கண்டிப்புக்களும் 
நட்புடன்கூடிய அன்பான காதலும் என்றும் அண்ணன்களுக்குமட்டுமே சொந்தமானவை... 

அண்ணன்களுக்காய் தங்கைகள் கொடுக்கும் முத்தத்திலும் - 
தங்கைகளுக்காய் அண்ணன் கொடுக்கும் முத்தத்திலும் அணைப்பினிலும் 
காமம் கலப்பதில்லை...

அது தாய்மை கடந்த தூய்மையாய் வெளிப்படுகின்றது.. 


ஆனந்தத்தின் நடுவினிலே அழுகை வரவைக்கவும் 
அழும் பொழுதுகளில் புன்னகைக்க வைக்கவும் இவர்களால் முடிகிறது... 

செல்லமான குட்டுக்களும் 
இன்பமான திருகல்களும் இவர்களுக்கேயுரிய அன்பின் வெளிப்பாடு... 

தங்கை அழுதால் தானும் அழுவதும் தங்கைக்காயே தான் வாழ்வதும் அண்ணன்களுக்கேயுரிய சிறப்பு... 

தங்கைக்கு ஒன்று என்றால் தன் உயிரை வருத்துவதிலே தெரிகிறது இவர்களது பிஞ்சு நெஞ்சம்... 


ஒரு நண்பனாய் ஒரு குழந்தையாய் ஒரு தாயாய் சில பொழுதுகளில் தந்தையாய் மாறிவிட இவர்களால்மட்டுமே முடிகிறது. 

தன் தங்கையை ஒரு தோழியாய் ஒரு குழந்தையாய் ஒரு தாயாய் மாற்றிவிடவும் முடிகிறது 
இவர்களது தூய்மையான அன்பின் வலிமையினால்... 

அண்ணன் ஒருவன் இருந்தாலே போதும் 
தங்கைகளின் உலகம் மலர்ந்துவிட... 

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
அண்ணனுக்காக
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
~கவியன்புடன் 
பிறைநிலா~ 
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


Thursday, September 5, 2013

ஓர் ஊமை தா(வே)சியின் உளறல்..


உங்கள் கால் இடுக்குகளுக்கும்
காற் சாராய்களுக்கும்
அழிந்துதான் போகின்றன
எங்கள் பெண்மை..

சுயத்தையும்-சுதந்திரத்தையும்
இருள்களில் மட்டுமல்ல
வெளிச்சங்களிலும் 
இழந்துகொண்டுதானிருக்கிறோம்..

கண்ணகி தான்
நாங்களும்- எம்
மனத்தினால்..

உங்கள்
எச்சிலோடுசேர்த்து
நகக்கீறல்களையும்
சுமக்கும்
இந்த ”உடலங்களும்” 
புனிதமானவைதான்
அழுக்கற்ற எம் மனங்களை
இவை சுமப்பதால்..

நள்ளிரவுகளில் மட்டும்
எம் முனகல்களை கேட்கும்
நீங்கள்
எம் விம்மல்களையும்
சிறிது
கேட்கலாம் இன்று..

மொழிகடந்த அவற்றை
புரிந்துகொள்ள
முடியாதுதான்..
 உங்களால்
எங்களை 
புணர்ந்துகொள்ளமட்டுமே
முடியும்..


கறைபடிந்த எங்கள்
சேலைகளும்:
தலையணை போர்வைகளும்
சொல்லும் இன்னும்
நாங்கள் கறையற்றவர்களென..

எங்கள் காலிடுக்குகளில்
இல்லை கற்பு..
என்றும் உங்களால்
தொடமுடியாத மனதினுள்
வைத்து பூட்டியிருக்கிறோம்..
உடைத்துப்பாருங்கள்-
உறைந்துபோவீர்கள்..

சதைத்தின்னிகளே,
உங்களால் சதைகளை மட்டும்தான்
சிதைக்கமுடியும்..
எம் சரித்திரத்தையல்ல..

Friday, July 12, 2013

என் வருங்கால கணவனுக்காக..


கனவுகளை நான் சுமந்து 
கண்மூடி காத்திருக்கிறேன். 
காலத்தால் நிச்சயிக்கப்பட்ட 
அந்த வரமாகும் திருமண நாள் எண்ணி.. 
என் கை பிடிக்க நீ துடிக்கும் 
அந்த நேரம் 
என் வானமெங்கும் 
வசந்தங்களை தூவும் அந்தி நேரம்.. 
ஸ்வாசங்கள் கூட 
சுகிக்கமறக்கும் 
உன்னை கண்டால்.. 
உன் ஓரவிழி பார்வையில் 
உயிர் உறையவைக்கும் 
மாயம் செய்து...

கோடி ஜென்மம் 
வாழ்ப்போகும் நீ 
எனக்காக என் கனவுகளில் 
இப்படி வாழ்கின்றாய்..

உன் பேரும் தெரியாது. 
உன் ஊரும் தெரியாது. 
ஆனால் எனக்கான ராஜகுமாரனாக 
உன் ஒற்றைக்குதிரை பிடித்து 
எனை என்றோ தேடி வருவாய்.. 
அந்த தேடலின் முடிவில் தான் 
நமக்கான வாழ்க்கை ஆரம்பமாகும்..


என் கனவுகளில் நீ கவிஞனாய் வாழ்கின்றாய் 
என்னை பாடுவதற்காக.
என் கனவுகளில் நீ காதலனாய் வாழ்கின்றாய் 
என்னை காதலின் அன்பினால் கொல்லுவதற்காக.
என் கனவுகளில் நீ ஓவியனாய் வாழ்கின்றாய் 
உன் விழிக்குள் என்னை சிறையெடுப்பதற்காக.
என் கனவுகளி நீ தந்தையாகின்றாய் 
உன் பிள்ளையாய் என்னை தாலாட்டிட. 
என் கனவுகளில் மட்டுமல்ல கண்ணே 
எந்தன் ஜீவனிலும் நிறைந்துபோகின்றாய் 
நீயாக நான் ஆகிட.


ஸ்வாசமே நீயாகிட 
ரசிக்கவேண்டும் உன் நினைவுகளை.. 
கனவுகளில் மாலை கோர்த்து 
சுகிக்கவேண்டும் உன் பொழுதுகளை.. 
உன்னை இமைகளில் சிறையெடுத்து 
இதயத்தில் பூட்டிக்கொள்ளவேண்டும்.. 
நான் மட்டும் உருகி என்றும் 
உன்னழகை பருகிட வேண்டும்.. 
எனக்கானவனாய் மட்டும்
என்றும் நீ மலர்ந்திட வேண்டும்.. 
என்றென்றும் நாம் இணைந்து 
ஏழு ஜென்மம் வாழவேண்டும்.. 

நீ நீயாக வாழ்கிறாய் என்னுள்ளே 
என் பல ஏக்கங்களை சுமந்து.. 
உன்னைப்பற்றிய என் எதிர்பார்ப்பு 
இப்படியாக விரிகிறது மொழிவழியே.. 


பரந்து விரிந்த பூமியிலே 
பலகலையும் கற்றவனாய், 
என் விழிகள் மட்டும் 
பார்ப்பதற்கு மன்மதனாய், 
நட்சத்திர கூட்டத்துக்கே இளவரசாய், 
என் விழி பார்த்து மொழி பேசுபவனாய், 
என் இதயத்தை 
ஒரு பார்வையில் உணர்பவனாய், 
என் மனதின் காயத்திற்கு 
ஒரு காதல் வைத்தியனாய், 
காலமெல்லாம் குறையாமல் 
தினம் என்னை காதலிப்பவனாய், 
உன் தோளோடு சாய்த்து 
என்னை அன்பால் உறங்கவைப்பவனாய், 
உன் தாய்போல என்னை 
தினமும் நோகாமல் நேசிப்பவனாய், 
எந்தன் பிள்ளையாகி என்னை 
இம்சிக்கவைத்து ரசிப்பவனாய்.. 
இன்னும் இன்னும் 
எத்தனை எத்தனையோ 
கனவுகள் என் மனதில்.. 
அதில் நீ மட்டும் தானே வாழ்கிறாய்.. 

சின்னச்சின்ன சண்டைகள், 
மென்மையான கோபங்கள், 
அடுத்த நொடியே புன்னைகைகளுடன் 
இணைந்த அன்பு சொட்டும் பேச்சுக்கள் வேண்டும்.. 
உன் நினைவில் நானும் 
என் நினைவில் நீயும் 
உயிர் உருகும் அந்த நிமிடங்கள் வேண்டும்... 
கோபங்களின் முடிவில் 
பேசாமல் மட்டும் விட்டுவிடாதே.. 
இறந்தே போவேன் நான் 
என் உணர்வில்.. 
என் பிளைகளுக்கு அன்பாய் 
மன்னிப்பாய் நீ ஆயிரம் தடவை.. 
அந்த அன்பே போதும் 
உன் காலடியில் நான் வாழ..

ஆனால் 
நிஜமாக சொல்கிறேன் 
நீ யாரென்றே தெரியாது.. 
உன் ஊரென்ன? பேரென்ன? 
எப்படியிருப்பாய் எதுவும் அறியாது 
நான் மட்டும் காத்திருக்கிறேன் 
என் வருங்காலமாக வரப்போகும் 
உனக்காக 
என் அன்புக் கணவனுக்காக...


Sunday, June 16, 2013

தந்தைக்கு ஒரு மாலை...
தன்னந்தனியே 
தாய்வயிறு கிழித்து 
மண்தொட்ட அந்தநேரம் 
என்னைத்தொட்ட 
முதல் உறவு 
நீயே அப்பா...

என் 
ஒற்றை விரல் கோர்த்து 
வாழ்க்கைபயணத்தை 
தொடக்கிவைத்தாய்...

பெண்ணாய் 
நான் பிறந்தேனென 
பெருமையோடு 
நீ மகிழ்ந்தாய்... 

காற்று வெளியினில் 
கைகோர்த்து 
கதைகள் 
பல சொன்னாய்... 

என் 
பாதம் பிடித்து 
நடை பழக்கி 
நீ மகிழ்ந்தாய்... 

மனதிற்கு மட்டுமல்ல 
அறிவிற்கும் 
கற்றுத்தந்தாய் 
பல கலை... 

நான் 
சிந்திடும் கண்ணீரில் 
உன் இதயத்தில் 
வலி கண்டாய்... 

என் 
புன்சிரிப்பில் 
துள்ளிக்குதித்தாய்
உலகை வென்றதாய்... 

இன்று 
என் பாதையின் 
ஒவ்வொரு அடியும் 
வருகின்றதே
உன் சுவட்டை தொடர்ந்து... 

ஆண்களில் 
தாய் நீ... 
அன்னையின் 
மறு உரு நீ... 

திறமைக்கு திறமையும் - 
துணிவுக்கு தனித்தன்மையும் 
நீ கற்றுத்தந்தவைதானே 
அப்பா... 

மீண்டும் 
ஒருமுறை 
மழலையாவேனா? 
உந்தன் மடியினில் நான் தூங்க...?

 கவியன்புடன்
பிறைநிலா- - 

Thursday, June 6, 2013

காய்ந்த கனவு..


நீண்டுபோன இரவுகளில்
நிழலைத்தேடி
தொடர்கிறது 
என் பயணம்..

நிசப்தமான
இடுகாடுகளிடையே
விடையின்றி
தேடுகின்றேன் என்
வினாக்களை..

மாண்டுபோனது
என் கனவு..
மரித்தலில் சுருண்டு
தீய்ந்து போனது..

கோடுபோட்ட 
வேலிதாண்டி
காலியான
வானைநோக்கி
கருகிப்பறந்தது
காய்ந்த கனவு..

காற்றோடு
அலைமோதி
காகிதத்தில் கரியாகி
தொடமுடியாமல்
தடுமாறிவிழுந்த கனவு
தலைதெரியாமலே போயிற்று
தணலோடு இன்று
வேகிற்று..!

Thursday, April 11, 2013

16 நாட்களின் வனவாசக்குறிப்பு.. (Future Leaders Friendship-2)


16 நாட்கள் வனவாசம் முடித்து
வீடுதிரும்பக் காத்திருப்போம்..
கனவுகள் பலகொண்டு
நினைவுகளை சுமந்திருப்போம்..

புதுவித அனுபவம்..
அதில்
தினம் தினம்
ஒரு யுகம்..

சில பொழுதுகளில்
இன்பங்கள்..
சில பொழுதுகளில்
துன்பங்கள்..

ஏச்சுக்களும் 
பேச்சுக்களும்
சகஜமாயின
எமக்கு..

தண்ணீருக்கு சண்டை..
குளியலுக்கோ
மிகப்பெரும் சண்டை..

முன்பு
தபாற்காரன் 
தெய்வமாய் தெரிந்தான்..
இன்று
தண்ணி பவுசர்காரன்
தெய்வமானான்..

வீட்டு நினைப்பு
மனதை அழுந்த
விழிகள் கலங்கியபடி
காத்திருந்தோம்..

எதுவாயிருந்தாலும்
நட்பினில் மட்டுமே
இன்பம் கண்டோம்..
மனம் மலர்ந்தோம்..

பலவற்றில் பிரிவினைகள்..
பரிதவிப்பில் சிலநொடிகள்..
நினைக்கமறக்கும் நினைவுகளை
மீட்டுவதில் இன்பம் கண்டோம்..

சில பொழுதில்
புரிந்துணர்வு விட்டுப்போனது..
ஆனால்
நட்பு கைகொடுத்தது..

பற்பல அதிகாரங்கள்..
அதனால்
அடக்குமுறையில்
கழிந்தன நாட்கள்..

எனினும்,
கண்ணீர் துடைத்தது
நம் நட்பு..

காலமெல்லாம்
கைகோர்ப்போம்..
நட்பின் மடியில்
தினம் மகிழ்வோம்..

நாளைய விடியலெண்ணி
இன்றே 
தூக்கம் தொலைத்தோம்..
விடைகொடு நட்பே,
பிரிந்துபோகின்றோம்
நாளைய பொழுதில்..

இது நம்
16 நாட்களின் 
வனவாசக்குறிப்பு...!

Wednesday, April 3, 2013

Future Leaders Friendship..


எங்கிருந்தோம்
இத்தனை நாளாய்..
இங்கு வந்து 
ஒன்றாயிணைந்தோம்..

முதலிரண்டு நாட்களும்
தனிமையிலே கழிந்துவிட
பின்வந்த நாட்களெல்லாம்
பூரிப்பை பரப்பியது...

கனவுகள் பலகொண்டு
கைகோர்த்தோம் நாமிங்கு..
கலையாத நம் நட்பு
கவிபாடும் காலமெல்லாம்..

சின்னச்சின்னதாய் சண்டைகள்
சிலநேர்க் கோபங்கள்..
கொஞ்சலான பேச்சுக்கள்
கெஞ்சலாய் சில காலங்கள்..

நன்நான்கு பதினாறாய்
நாட்கள் நீண்டுவிட
வீடுசெல்லும் நாளெண்ணி
விடையின்றித் தவித்திருந்தோம்..

ஆணென்ன? பெண்ணென்ன?
இனமென்ன? மதமென்ன?
எதிர்பார்க்கவில்லை நாம்
நட்பினில் சிறகுவிரித்தோம்..

அதிகாலை 
சோம்பல் முறித்து
அவதி அவதியாய் 
உடைகளணிந்து
அந்தரத்தில் பறந்திடுவோம்..

தூங்கிவழிய Lecture hall
தூக்கம் கலைய Playground
கடக்கும் நாட்களை எண்ணியபடி
கழிகிறது காலம்..

சொல்லப்பட்ட காதல்கள்
சொல்லத்துடிக்கும் காதல்கள்
விழிநனைக்கும் பாசங்கள்
விடைபெறுகிறது எம்மைவிட்டு..

விடைபெறும் நாளெண்ணி
மனம் துடிக்கும்..
விடைபெறும் பொழுதுகளில்
விழி கலங்கும்..

எங்கு சென்றாலும்
எப்படியென்றாலும்
பல்கலையில் கைகோர்ப்போம்
நட்புவானில் சிறகடிப்போம்..

இது நம்
" Future Leaders Friendship..! "

Wednesday, February 20, 2013

கனவுகளின் மடியில்..சாலையோரத்தில் 
தனித்துவிடப்பட்ட 
காலி இருக்கைகள்.. 

மேசைமீது 
ஒதுக்கிவைக்கப்பட்ட 
வெற்று தேநீர்க் குவளைகள்.. 

உனக்கான கவிதைகளால் 
நிரப்பப்பட்ட 
வெள்ளைத்தாள்கள்.. 

நேரம்போவதே தெரியாமல் 
சுற்றும் 
சுவர்க்கடிகார முட்கள்.. 

நாம் தொலைவாகிப்போனது 
தெரிந்து 
சோகித்து பாடும் 
இராப்பறவை.. 

கரைவதா? காய்வதா? 
என்று தெரியாமல் 
வழியும் 
நம் கண்களின் விழிநீர்.. 

காலத்தை சபித்தபடி 
ஒளிரும் 
தேய்ந்துபோன சந்திரன்.. 

இவையெல்லம் 
கண்முன் நிதர்சனமாகியும்
நம்பமறுக்கும் 
நம் இதயம்.. 

அனைத்தையும் கடந்து 
நாம் மட்டும் கைகோர்க்கிறோம் 
கனவுகளின் மடியில் - 
உணர்வுகளின் ஜனிப்பில்..!