Monday, October 12, 2015

‘வாட்ஸப்’ வெயிட்டிங்.



மழைபிடித்த வானத்தை பார்த்தபடி அவனது நேரங்கள் நகர்ந்துகொண்டிருந்தன. இன்றையநாளின் நிகழ்ச்சிகளை கடக்க அவனால் முடியவில்லை. ஒரு ஆணின் மனதும் உணர்ச்சிகளின் அலைவீச்சுக்கு தாக்குப்பிடிக்கமுடியாது என்பதை அவனது கண்களே காட்டிக்கொடுத்துவிடும்போல் இருந்தது.

அதிகலையின் விடியலில் அவளது குரலை கேட்டிருந்தான். அதன்பின் அவளைப்பற்றிய எந்த தகவலும் அவனுக்கு கிடைத்திருக்கவில்லை. வாட்ஸப்பில் புன்னகைகளை பரிமாறியவளின் மௌனத்தை ஏற்றுக்கொள்ளமுடியாதவனாய் நிமிடங்களை எண்ணிக்கொண்டிருந்தான். நீண்டநாட்களாய் நீளும் அவள் மௌனத்தை உடைப்பதற்கென்றே புதிது புதிதாய் முயற்சிகள்செய்து தினம் தினம் தோற்றுப்போனது என்னவோ அவன்தான். 

எல்லாமே வெறுமையாய் தெரிந்திருக்கவேண்டும் அவன் கண்களுக்கு. நீண்ட வயல்வெளி தாண்டி போய்க்கொண்டிருந்தான். மழைத்துளி நனைத்த வயல்வெளியெல்லாம் அவள்முகமாய் சிரித்தது. அவளை நினைத்தபடி ஐந்தாறு விபத்துக்களையும் தொட்டிருப்பான். மூன்றுநாட்கள் கடந்திருந்தது. மூச்சற்றுப்போன அவன் தொலைபேசியில் வாட்ஸப் சிணுங்கல். அவள்தான்.

‘ஹேய்..’

‘ஓம் சொல்லு’

‘எப்பிடிடா இருக்காய்?’

’ம்..ம் எனக்கென்ன. நல்லா இருக்கன். நீ?’

‘ஓஹ் சரி நல்லா இருக்கியா அப்போ சரி தூங்கு குட்ணைட்’

‘....’

‘போய்ட்டியா?’
‘ஹ்ம்ம்ம்ம்’

ஓய்ந்துபோனது கைபேசி மீண்டும் ஒரு வாரத்திற்கு. 

ஹேய்..
செல்லம்..
அம்மு...
பேசுடி...

என்றபடி அவனது வார்த்தைகள் மட்டும் வெளியேறின. இப்போதும்கூட கைபேசியை பார்த்துக்கொண்டான். கைபேசி இறந்திருந்தது பல மணித்தியாலங்களின் முன்பே.

Thursday, October 8, 2015

தனியள்.


பண்ணைக் கடற்கரை வீதி. நானும் என் தங்கையும் நேரத்தை கடத்துவதற்காய் யாழ்நகரை வட்டமிட்டு பண்ணைக் கடற்கரையை வந்தடைந்தோம். என் தங்கை கொழும்பில் வாழ்பவள். அவளுக்கு இந்த சூழல் அருவருப்பையே தந்திருந்தது போலும். 
’இதுதான் நீங்கள் சொன்ன பீச்சா?’
’இதெல்லாம் ஏன் இப்பிடி குப்பையாகிடக்கு?’

என்றபடி ஆரம்பித்தாள் தன்னுடைய கேள்விக்கொத்துக்களை. எனக்கோ என் நகரை விட்டுக்கொடுக்கமனமில்லை. அவளும் சிறுபிள்ளை ஆகவே,

’உங்கட அரசாங்கம்தான் இதெல்லாத்தையும் கவனிக்கவேணும்’ என்றபடி அவளின் அடுத்தடுத்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளிவைத்தேன். அவள் சுற்றிலும் நோட்டமிட்டாள். காகம், மாடு, அதோடு மனிதர்களும் பண்ணையின் சாலைகளில் விரைந்துகொண்டிருந்தார்கள். 

‘எவ்வளவு காகம் நிக்குது இங்க?’ என்றபடி என்னோடு நடக்க ஆரம்பித்திருந்தாள். நானோ கமராவில் புகைப்படமெடுத்துப்பழகுவதில் ஆர்வமாயிருந்தேன்.

’பிறையக்கா...
அக்கா...
அடி பிறை..’

இதற்குமேல் அவளால் என்னோடு சண்டையிடமுடியவில்லை. நான் அங்கிருந்த கல்லாசனம் ஒன்றில் அமர்ந்தேன். என்னருகில் கோபத்தோடு வந்து அமர்ந்தவள், 

‘தம்பி இஞ்ச வந்திருந்தா கத்திக்கொண்டுதான் வீட்டபோயிருப்பான்’
‘கோல்பேஸ் எல்லாம் எவ்வளவு வடிவா இருக்கும் தெரியுமே?’
‘இறங்கி விளையாட நல்ல ஆசையா இருக்கும்’

என்றாபடியாக பண்ணை தொடர்பான தன்னுடைய ஆதங்கங்களை வெளிப்படுத்திக்கொண்டிருந்தாள். நானோ

‘ம்..
ம்ம்..
ம்ம்ம்’ என்றபடி அங்கு நடப்பவற்றை வேடிக்கைபார்ப்பதில் கண்ணாயிருந்தேன். மனிதர்கள் வாழ்க்கையின் கோபத்தை நடையில் கொட்டியபடி நகர்ந்துகொண்டிருந்தார்கள். எங்கள் நகர இளசுகள் மோட்டார் வண்டிகளில் மிடுக்காக பெண்களை கவர்வதற்கான ‘சீன்களை’ ஆரம்பித்திருந்தார்கள். காதல்ஜோடிகள், கணவன் மனைவி குடும்பமென ஆசுவாசப்படுத்திக்கொள்ள பலர் பண்ணைச்சூழலை நாடிக்கொண்டிருந்தார்கள். 

எங்களுக்கு பக்கத்து முன் இருக்கை ஒன்றில் ஒருத்தி தனியாக அமர்ந்திருந்தாள். கறுப்பு நிற ஜீன்ஸும் மெல்லிய நீலநிற டீசேட்டும் அணிந்திருந்தாள். தலையை போணிடெயில் போட்டிருந்தாள்.  அவள் முகத்தில் சிறிது கலவரமிருந்தது. கண்களில் யாரையோ எதிர்பார்த்திருப்பது தெரிந்தது. நிமிடத்திற்கு ஒருமுறை அலறாத தன் கைபேசியை எடுத்து பார்த்துக்கொண்டாள். தன்னை கடந்துபோவோர்-வருவோரை விடாமல் பார்த்தபடியிருந்தாள். 

‘பிறையக்கா ஐஸ்கிறீம் வாங்குவம். எலிபண்ட் ஹவுஸ் போகுது’

என்றபடி என்பார்வையை திருப்பிய என் தங்கை எனிடமிருந்து பேஸை பறித்து ஐஸ்கிறீமை நோக்கி ஓடினாள். வரும்போது எனக்கும் சேர்த்து ஐஸ்கிறீம் வாங்கியபடி புன்னகையோடு வந்தமர்ந்தாள்.  ஐஸ்கிரீமை குடித்து முடித்து காலி கப்புகளை போடுவதற்கு டஸ்பின் தேடினாள். கிடைக்கவில்லை. யாழ் நகரை திட்டியபடி குப்பைக்கான குழி ஒன்றில் வீசிவிட்டு வந்தமர்ந்தாள். 

லேசாக இருட்டத்தொடங்கியது. வீட்டிற்கு கிளம்பலாமென அந்த இடத்தை விட்டு எழுந்தோம். அப்போதுதான் அந்த பெண்ணின் கைபேசி அலறிய சத்தம் காதில் விழுந்த்து. 

‘அவளை மறந்துவிட்டேனே’ என்றபடி அவளை திரும்பிபார்த்தேன். அலறிய கைபேசியில் ஓரிரண்டுவார்த்தைகள் கதைத்திருப்பாள். மீண்டும் கைபேசி ஊமையானது. அவள் கடலை வெறித்தபடி அமர்ந்திருந்தாள். கண்கள் கலங்கியிருந்தன. அவள் எதிர்பார்த்ததுபோல் அவளது தோழியோ தோழனோ காதலனோ உறவினர் யாருமோ வரமுடியாமலிருந்திருக்கவேண்டும் என்று எண்ணியபடிமோட்டார்வண்டியை திருப்பி அதில் ஏறி அமர்ந்தோம். 
என் தங்கையும் அவளை கவனித்திருக்கவேண்டும். 

’பிறையக்கா அதில ஒரு அக்கா இருந்தவாவெல்லோ?’
‘ஏன் அவா தனிய இருந்தா?’
‘அவா வீட்ட போகேல்லையோ?’
என்றபடி அவளது வழக்கமான பாணியை ஆரம்பிக்க, நானும் வழமைபோல

‘ஹும்
ம்ம்
ம்ஹும்’ களுடன் வீட்டைநோக்கி விரைந்தோம்.

-பிறைநிலா-