Monday, October 12, 2015

‘வாட்ஸப்’ வெயிட்டிங்.



மழைபிடித்த வானத்தை பார்த்தபடி அவனது நேரங்கள் நகர்ந்துகொண்டிருந்தன. இன்றையநாளின் நிகழ்ச்சிகளை கடக்க அவனால் முடியவில்லை. ஒரு ஆணின் மனதும் உணர்ச்சிகளின் அலைவீச்சுக்கு தாக்குப்பிடிக்கமுடியாது என்பதை அவனது கண்களே காட்டிக்கொடுத்துவிடும்போல் இருந்தது.

அதிகலையின் விடியலில் அவளது குரலை கேட்டிருந்தான். அதன்பின் அவளைப்பற்றிய எந்த தகவலும் அவனுக்கு கிடைத்திருக்கவில்லை. வாட்ஸப்பில் புன்னகைகளை பரிமாறியவளின் மௌனத்தை ஏற்றுக்கொள்ளமுடியாதவனாய் நிமிடங்களை எண்ணிக்கொண்டிருந்தான். நீண்டநாட்களாய் நீளும் அவள் மௌனத்தை உடைப்பதற்கென்றே புதிது புதிதாய் முயற்சிகள்செய்து தினம் தினம் தோற்றுப்போனது என்னவோ அவன்தான். 

எல்லாமே வெறுமையாய் தெரிந்திருக்கவேண்டும் அவன் கண்களுக்கு. நீண்ட வயல்வெளி தாண்டி போய்க்கொண்டிருந்தான். மழைத்துளி நனைத்த வயல்வெளியெல்லாம் அவள்முகமாய் சிரித்தது. அவளை நினைத்தபடி ஐந்தாறு விபத்துக்களையும் தொட்டிருப்பான். மூன்றுநாட்கள் கடந்திருந்தது. மூச்சற்றுப்போன அவன் தொலைபேசியில் வாட்ஸப் சிணுங்கல். அவள்தான்.

‘ஹேய்..’

‘ஓம் சொல்லு’

‘எப்பிடிடா இருக்காய்?’

’ம்..ம் எனக்கென்ன. நல்லா இருக்கன். நீ?’

‘ஓஹ் சரி நல்லா இருக்கியா அப்போ சரி தூங்கு குட்ணைட்’

‘....’

‘போய்ட்டியா?’
‘ஹ்ம்ம்ம்ம்’

ஓய்ந்துபோனது கைபேசி மீண்டும் ஒரு வாரத்திற்கு. 

ஹேய்..
செல்லம்..
அம்மு...
பேசுடி...

என்றபடி அவனது வார்த்தைகள் மட்டும் வெளியேறின. இப்போதும்கூட கைபேசியை பார்த்துக்கொண்டான். கைபேசி இறந்திருந்தது பல மணித்தியாலங்களின் முன்பே.

No comments:

Post a Comment