Sunday, November 19, 2017

சின்ன காங்ஸ்டேர்ஸ் வித் ஆனைக்கோட்டை அப்பம்.

(பட உதவி- இணையம்)

கனநாளைக்கு பிறகு அந்த சின்னவயசு நினைவுகளை திருப்பியும் நினச்சுப்பாக்கிறன். காரணம் என்னெண்டா இந்த ஆனைக்கோட்டை பால் அப்பம் தான். இப்ப தேங்காய் விலை சீனி விலை மற்றும் இன்னபிற காரணங்களால அப்பத்திலயும் மாற்றம் தெரியுது. அப்பம் மாறினமாதிரி எங்கட வாழ்க்கையும் மாறிப்போச்சுது. ஆனா அந்த பழைய நினைவுகள்மட்டும் இப்பவும் பசுமைநினைவுகளாக இனிச்சுக்கொண்டுதான் இருக்குது. 

முந்தி எங்கட ஊரில யாராவது மோசம்போனா செத்தவீட்டுக்கு சாப்பாடு குடுக்கிறதெண்டா அப்பா இந்த ஆனைக்கோட்டை அப்பத்தைத்தான் வாங்கிக்கொண்டுவருவார். அதில எங்களுக்கும் பங்கு கிடைக்கும். அதெல்லாம் சுவாரசியமான கதை. இங்க “முந்தி” எண்டு நான் சொன்னது எங்கட பதின்ம வயதுகளைத்தான். மற்றது இஞ்ச சொன்ன “எங்களுக்கு” எண்ட வார்த்தையில நானும், பபா அண்ணாவும், சிந்துவும், கோபியும் இன்னபிற ஜீவராசிகளும், குஞ்சுகுருமனுகளும் அடக்கம். 

எப்பவுமே சாப்பிடாம எப்பவாவது சாப்பிடுறதால இந்த அப்பம் மேல அப்பிடியொரு காதல் எங்களுக்கு. இப்பவும் அப்பிடித்தான். இந்த ஆனைக்கோட்டை அப்பம் அதிகப்படியான ருசியா இருக்கும். நிறைய பால் விட்டு சீனி போட்டு பெரிய அப்பச்சோடி சின்னச்சின்ன லஞ்சீட் இல்லாட்டி வாழையிலை துண்டுகளில வச்சு ஒண்டுக்குமேல ஒண்டா அடுக்கி ஒரு பெரிய பார்சலா கட்டி அப்பா அதை அவரிண்ட சிவத்த கூடை பாக்குக்குள்ள வெச்சு மோட்டசைக்கிள் கரியரில வச்சுக்கொண்டு எப்ப வீட்டவருவார் எண்டபடி முதல்நாள் இரவு தூக்கம் கடந்துபோயிருக்கும். அப்பா காலமை வெள்ளனவா எழும்பி 6 மணிக்கு அப்பத்தோட வருவார். நாங்கள் நித்திரயால பிந்தி எழும்பி கண்ணக்கசக்கொக்கொண்டு அப்பத்தை தேடின நாளுகளும் இருக்கு. அம்மா ஒளிச்சுவச்சிட்டு வாங்கேல்லஎண்டு ஏமாத்த கண்ணுக்குள்ள தண்ணி முட்டி அழுகிற நிலமைக்குக்கூட வந்திருக்கிறம். அதயெல்லாம் நினச்சுப்பாக்க இப்ப எனவொரு சந்தோசம். 

சரி இந்த நாலுபேரப்பற்றியும் சொல்லவேணும். (நாங்கள் தான் அந்த நாலுபேரும்) பபா அண்ணாவும் சிந்துவும் சகோதரம். நானும் கோபியும் நேசரில இருந்தே பிரண்ட்ஸ். இந்த் நாலு வாலும் கலட்டி ஒழுங்கைக்கே  ஒரு சின்ன குட்டி காங்ஸ்டர்ஸ் காங். மதிலேறிப்பாயுறது, மரமேறுறது, கிரிக்கெட் விளையாடி சொந்த வீட்டு பல்பை உடச்சு அடிவாங்கிறது எண்டு நிறய நல்லவிசயங்கள் செய்திருக்கிறம். எங்கட தலைமைத்துவத்துக்கி கீழ சுதனி, ராகவன், பெரிய மயூரி, சின்ன மயூரி, மயூரன் எண்டு நாலு குழந்தைப்பிள்ளையள் வேற. இதுக்குமேல சொல்லவா வேணும். இப்பிடி பெருமைப்படக்கூடிய எங்கள் எல்லார்ட வீடும் அக்கம்பக்கம் தான். 

சரி இப்ப அப்பத்துக்கு வருவம். அப்பம் கையில கிடச்சவுடன தனிய சாப்பிடாம எல்லாரையும் கூட்டுசேர்த்து எங்களுக்கு எண்டு இருக்கிற இடம் ஒண்டில ஒன்றுசேர்ந்து பங்குபோட்டு சாப்பிடுற சுகம் தனி சுகம். இதில அடிபாடு பங்குபிரிப்பு எல்லாம் இருக்கு. இந்த அப்பத்தோட மறக்கமுடியாத நினைவுகளில ஒண்டு வீட்டுக்கு வெட்டின அத்திவாரத்துக்குள்ள இருந்து அப்பம் சாப்பிட்டதுதான். அதவிட இன்னுமொரு நபரையும் இந்த அப்பம் நினைவுபடுத்தும். 2004 காலப்பகுதியில அறிமுகமானவன் அந்த அண்ணன். அப்பாவோட தூரத்து சொந்தமாம். அப்பத்துக்கும் அவன் பேருக்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம். இந்த கார்த்திகை மாசத்தில அவனை நினைக்கிறதும் பொருத்தமா இருக்கும். ( அவன் பற்றி முன்னைய ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.) ஒருக்கா அய்யாவின்ர (அப்பப்பா) ஆண்டுத்திவசத்துக்கு கீரிமலைக்கு ஹயஸ் பிடிச்சுபோனாங்கள் ல். அப்பவும் இந்த ஆனைக்கோட்டை அப்பக்கூடை முன் சீற்றை இடம்பிடிச்சிருந்தது. கோபி வரேல்ல எண்டு நினக்கிறன். நான், சிந்து பின் சீற்றில. அந்த அண்ணனும் பபா அண்ணாவும் வேறயொரு அண்ணாவும் முன் சீற்றில. எங்களுக்கு தராம அப்பத்த சாப்பிட்டிமுடிச்ச பெருமை அந்த நலு அண்ணன்களுக்கும் தான் போய்ச்சேரும். என்ர முகத்தையும் சிந்துவின்ர முகத்தையும் பாக்க சகிக்க முடியாம இருந்திருக்கும். அவ்வளவு கோபம் அவயளில. 

சரி இப்பிடி ஆனைக்கோட்டை அப்பத்துக்கும் எங்கட அந்த காங்க்ஸ்டர் வாழ்க்கைக்கும் நிறயவே சம்பந்தமிருக்கு. இண்டைக்கும் அப்பா பக்கத்தில ஒரு செத்தவீட்டுக்கு சாப்பாடுகுடுக்கவேணுமெண்டு கனக்க வரியம் கழிச்சு அந்த அப்பம் வாங்கிக்கொண்டு வந்தவர். இரவு படுக்கமுதல் அம்மாட்ட சொன்னன் கோபிக்கு சிந்துவுக்கும் எடுத்துவச்சிட்டு குடுங்கோ எண்டு. விடிய 8மணிக்கு ( இன்னும் திருந்தல) சிந்து போணடிச்சு எழுப்பி சொன்னாள் “அடியேய் அப்பம் வந்திட்டுதடி வீட்ட” எண்டு. சொல்லிமுடிச்சு அவள் சிரிக்கேக்க எனக்கு கண்ணுக்குள்ள எங்கட பழைய ஒழுங்கை ரோட்டும் அதில முன்னுக்கு பந்தோடயும் பட்டோடயும் பபா அண்ணாவும் அவனுக்கு பின்னுக்கு சிந்துவும் அவளுக்கு பின்னுக்கு நானும் எனக்கு பின்னுக்கு எலிக்குஞ்சு மாதிரி கோபி ஆளவிட பெரிய பாரமான கதிரை ஒண்டையும் (கதிரைக்கு பிறம்பா ஒரு கதை இருக்கு. பேந்து சொல்லுறன்)  தூக்கொக்கொண்டு விளாத்திக்காணிக்கு போறதும், பேணிப்பந்தும் நிசாப்புயலுக்கு விழுந்த பெரிய விளாத்திமரமும்தான் ஞாபகம் வந்தது. (பேணிப்பந்து பெரிய கதை இன்னொரு பதிவில அதயும் சொல்லுறன்). 

இதை எழுதிமுடிக்கும்போது என்னையறியாமலே கண்கலங்குவதையும் தவிர்க்கமுடியேல்ல. ஆனைக்கோட்டை அப்பத்தோட வாழ்ந்த அந்தக்காலம் அழகானதுதான். ஆனா இப்பவரைக்கும் அப்பா அந்த கடை எங்க இருக்கெண்டு சொல்லுறாரில்ல எண்டது எங்களுக்கும் லைட்டா கடுப்புத்தான் 😄

-பிறைநிலா-

No comments:

Post a Comment