Tuesday, January 17, 2012

கசியும் சோகம்...


நிழல்களின் மறைவிலே
நிஜங்கள் உறங்கிவிடும்..
என்றோ தொலைந்த சுகம்
சோகத்தில் நிறைந்துவிடும்..!

விழிகளின் வலிகளை
கவிகளில் விதைத்துவிட்டேன்..
கவிகளின் மொழிகளை
உள்ளத்துள் புதைத்துவிட்டேன்..!

காலங்களின் மறைவினில்
கனவுகளின் இழப்புக்கள்..
உதிர்வதும் மறைவதும்
புன்னகையின் மாயங்கள்...!

ஏதோ ஒன்று நிர்க்கதியாய்:
எங்கோ ஒன்று நிதர்சனமாய்..
அந்திவானில் சோகங்கள்:
ஆழ்கடலில் நீர்த்துளிகள்..!

தொலைந்துவிட்ட சுகங்களுக்குள்
மறைக்கப்பட்ட புன்னகைகள்..
மயங்கிவிட்ட இதயத்தில்
இன்று வடுவாகிய ரணங்கள்..!

தொலைதூரத்தில் ஒரு நட்சத்திரம்
தொலைத்துவிட்ட மௌனங்களை
ஒன்றுசேர்த்து ஒளியாக்கி
கசிகிறது இருளினிடையில்..!

ஓராயிரம் மௌனங்களில்
இசைக்கப்பட்ட நாதமாய்
இங்கே ஓர் புல்லாங்குழல்
இசைக்கிறது ஊமையாகி..!

வாழ்ந்துவிட்ட வாழ்க்கையின்
வலிநிறைந்த பாதைகள்
வடுக்களாய் மாறி நிற்க
வஞ்சிமகள் வாடுகின்றாள் ..!

உதிர்ந்து தொலைந்த மலரின்
உள்ளத்து உணர்வுதனை
வாசனையாய் கலைத்துவிட்டு
சோர்ந்து நின்றாள் மேகமங்கை...!

உலகின் மாயங்களை
சோகங்களில் பதியவைத்து
உள்ளே புலம்பியபடி-இங்கு
உழல்கிறது என் பேனா..!!


No comments:

Post a Comment