Sunday, November 19, 2017

சின்ன காங்ஸ்டேர்ஸ் வித் ஆனைக்கோட்டை அப்பம்.

(பட உதவி- இணையம்)

கனநாளைக்கு பிறகு அந்த சின்னவயசு நினைவுகளை திருப்பியும் நினச்சுப்பாக்கிறன். காரணம் என்னெண்டா இந்த ஆனைக்கோட்டை பால் அப்பம் தான். இப்ப தேங்காய் விலை சீனி விலை மற்றும் இன்னபிற காரணங்களால அப்பத்திலயும் மாற்றம் தெரியுது. அப்பம் மாறினமாதிரி எங்கட வாழ்க்கையும் மாறிப்போச்சுது. ஆனா அந்த பழைய நினைவுகள்மட்டும் இப்பவும் பசுமைநினைவுகளாக இனிச்சுக்கொண்டுதான் இருக்குது. 

முந்தி எங்கட ஊரில யாராவது மோசம்போனா செத்தவீட்டுக்கு சாப்பாடு குடுக்கிறதெண்டா அப்பா இந்த ஆனைக்கோட்டை அப்பத்தைத்தான் வாங்கிக்கொண்டுவருவார். அதில எங்களுக்கும் பங்கு கிடைக்கும். அதெல்லாம் சுவாரசியமான கதை. இங்க “முந்தி” எண்டு நான் சொன்னது எங்கட பதின்ம வயதுகளைத்தான். மற்றது இஞ்ச சொன்ன “எங்களுக்கு” எண்ட வார்த்தையில நானும், பபா அண்ணாவும், சிந்துவும், கோபியும் இன்னபிற ஜீவராசிகளும், குஞ்சுகுருமனுகளும் அடக்கம். 

எப்பவுமே சாப்பிடாம எப்பவாவது சாப்பிடுறதால இந்த அப்பம் மேல அப்பிடியொரு காதல் எங்களுக்கு. இப்பவும் அப்பிடித்தான். இந்த ஆனைக்கோட்டை அப்பம் அதிகப்படியான ருசியா இருக்கும். நிறைய பால் விட்டு சீனி போட்டு பெரிய அப்பச்சோடி சின்னச்சின்ன லஞ்சீட் இல்லாட்டி வாழையிலை துண்டுகளில வச்சு ஒண்டுக்குமேல ஒண்டா அடுக்கி ஒரு பெரிய பார்சலா கட்டி அப்பா அதை அவரிண்ட சிவத்த கூடை பாக்குக்குள்ள வெச்சு மோட்டசைக்கிள் கரியரில வச்சுக்கொண்டு எப்ப வீட்டவருவார் எண்டபடி முதல்நாள் இரவு தூக்கம் கடந்துபோயிருக்கும். அப்பா காலமை வெள்ளனவா எழும்பி 6 மணிக்கு அப்பத்தோட வருவார். நாங்கள் நித்திரயால பிந்தி எழும்பி கண்ணக்கசக்கொக்கொண்டு அப்பத்தை தேடின நாளுகளும் இருக்கு. அம்மா ஒளிச்சுவச்சிட்டு வாங்கேல்லஎண்டு ஏமாத்த கண்ணுக்குள்ள தண்ணி முட்டி அழுகிற நிலமைக்குக்கூட வந்திருக்கிறம். அதயெல்லாம் நினச்சுப்பாக்க இப்ப எனவொரு சந்தோசம். 

சரி இந்த நாலுபேரப்பற்றியும் சொல்லவேணும். (நாங்கள் தான் அந்த நாலுபேரும்) பபா அண்ணாவும் சிந்துவும் சகோதரம். நானும் கோபியும் நேசரில இருந்தே பிரண்ட்ஸ். இந்த் நாலு வாலும் கலட்டி ஒழுங்கைக்கே  ஒரு சின்ன குட்டி காங்ஸ்டர்ஸ் காங். மதிலேறிப்பாயுறது, மரமேறுறது, கிரிக்கெட் விளையாடி சொந்த வீட்டு பல்பை உடச்சு அடிவாங்கிறது எண்டு நிறய நல்லவிசயங்கள் செய்திருக்கிறம். எங்கட தலைமைத்துவத்துக்கி கீழ சுதனி, ராகவன், பெரிய மயூரி, சின்ன மயூரி, மயூரன் எண்டு நாலு குழந்தைப்பிள்ளையள் வேற. இதுக்குமேல சொல்லவா வேணும். இப்பிடி பெருமைப்படக்கூடிய எங்கள் எல்லார்ட வீடும் அக்கம்பக்கம் தான். 

சரி இப்ப அப்பத்துக்கு வருவம். அப்பம் கையில கிடச்சவுடன தனிய சாப்பிடாம எல்லாரையும் கூட்டுசேர்த்து எங்களுக்கு எண்டு இருக்கிற இடம் ஒண்டில ஒன்றுசேர்ந்து பங்குபோட்டு சாப்பிடுற சுகம் தனி சுகம். இதில அடிபாடு பங்குபிரிப்பு எல்லாம் இருக்கு. இந்த அப்பத்தோட மறக்கமுடியாத நினைவுகளில ஒண்டு வீட்டுக்கு வெட்டின அத்திவாரத்துக்குள்ள இருந்து அப்பம் சாப்பிட்டதுதான். அதவிட இன்னுமொரு நபரையும் இந்த அப்பம் நினைவுபடுத்தும். 2004 காலப்பகுதியில அறிமுகமானவன் அந்த அண்ணன். அப்பாவோட தூரத்து சொந்தமாம். அப்பத்துக்கும் அவன் பேருக்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம். இந்த கார்த்திகை மாசத்தில அவனை நினைக்கிறதும் பொருத்தமா இருக்கும். ( அவன் பற்றி முன்னைய ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.) ஒருக்கா அய்யாவின்ர (அப்பப்பா) ஆண்டுத்திவசத்துக்கு கீரிமலைக்கு ஹயஸ் பிடிச்சுபோனாங்கள் ல். அப்பவும் இந்த ஆனைக்கோட்டை அப்பக்கூடை முன் சீற்றை இடம்பிடிச்சிருந்தது. கோபி வரேல்ல எண்டு நினக்கிறன். நான், சிந்து பின் சீற்றில. அந்த அண்ணனும் பபா அண்ணாவும் வேறயொரு அண்ணாவும் முன் சீற்றில. எங்களுக்கு தராம அப்பத்த சாப்பிட்டிமுடிச்ச பெருமை அந்த நலு அண்ணன்களுக்கும் தான் போய்ச்சேரும். என்ர முகத்தையும் சிந்துவின்ர முகத்தையும் பாக்க சகிக்க முடியாம இருந்திருக்கும். அவ்வளவு கோபம் அவயளில. 

சரி இப்பிடி ஆனைக்கோட்டை அப்பத்துக்கும் எங்கட அந்த காங்க்ஸ்டர் வாழ்க்கைக்கும் நிறயவே சம்பந்தமிருக்கு. இண்டைக்கும் அப்பா பக்கத்தில ஒரு செத்தவீட்டுக்கு சாப்பாடுகுடுக்கவேணுமெண்டு கனக்க வரியம் கழிச்சு அந்த அப்பம் வாங்கிக்கொண்டு வந்தவர். இரவு படுக்கமுதல் அம்மாட்ட சொன்னன் கோபிக்கு சிந்துவுக்கும் எடுத்துவச்சிட்டு குடுங்கோ எண்டு. விடிய 8மணிக்கு ( இன்னும் திருந்தல) சிந்து போணடிச்சு எழுப்பி சொன்னாள் “அடியேய் அப்பம் வந்திட்டுதடி வீட்ட” எண்டு. சொல்லிமுடிச்சு அவள் சிரிக்கேக்க எனக்கு கண்ணுக்குள்ள எங்கட பழைய ஒழுங்கை ரோட்டும் அதில முன்னுக்கு பந்தோடயும் பட்டோடயும் பபா அண்ணாவும் அவனுக்கு பின்னுக்கு சிந்துவும் அவளுக்கு பின்னுக்கு நானும் எனக்கு பின்னுக்கு எலிக்குஞ்சு மாதிரி கோபி ஆளவிட பெரிய பாரமான கதிரை ஒண்டையும் (கதிரைக்கு பிறம்பா ஒரு கதை இருக்கு. பேந்து சொல்லுறன்)  தூக்கொக்கொண்டு விளாத்திக்காணிக்கு போறதும், பேணிப்பந்தும் நிசாப்புயலுக்கு விழுந்த பெரிய விளாத்திமரமும்தான் ஞாபகம் வந்தது. (பேணிப்பந்து பெரிய கதை இன்னொரு பதிவில அதயும் சொல்லுறன்). 

இதை எழுதிமுடிக்கும்போது என்னையறியாமலே கண்கலங்குவதையும் தவிர்க்கமுடியேல்ல. ஆனைக்கோட்டை அப்பத்தோட வாழ்ந்த அந்தக்காலம் அழகானதுதான். ஆனா இப்பவரைக்கும் அப்பா அந்த கடை எங்க இருக்கெண்டு சொல்லுறாரில்ல எண்டது எங்களுக்கும் லைட்டா கடுப்புத்தான் 😄

-பிறைநிலா-

Wednesday, August 16, 2017

‘அவனை’ப்பற்றியும் சிந்திக்கலாமே!




 ஆண்களுக்கும் அழுகை வரும்.

சில நேரங்களில் மாற்றத்திற்கான குரலோலை எம் செவிகளைத்தேடி தானாகவே வந்துசேரும். அது நம் காதுகளை யதார்த்தத்தின் விம்பமாய் அறையும் தருணங்களில்தான் ’அடடா… இப்படியும் சிந்திக்கலாமே’ என்று நம் தலைகளில் நாமே குட்டிக்கொள்ளவேண்டி ஏற்படும்.
அப்படி நடந்த ஒரு மாற்றத்திற்கான குட்டல்தான் இந்த வருடல்.

‘பெண்கள், பெண்ணியம், பெண்ணடிமை என்றவாறாக பலவாறு பெண்களைப்பற்றியே மீண்டும் மீண்டும் அதிகமாக பேசும் சமூகம் ஏன் ஆண்கள்ஆணியம், ஆண்கள் உளவியல் பற்றி அதிகமாக பேச நினைப்பதில்லை?’ என்றவாறாக தன்னுடைய கேள்வியை ஆசிரியரைப்பார்த்துக்கேட்டது ஒரு பெண்குரல். அவள் கேட்டது ஆசிரியருக்கு புரிந்ததோ இல்லையோ அந்த கல்விநிலையத்தின் பக்கத்துவகுப்பறையில் அமர்ந்திருந்த எனது காதுகளில் நன்றாகவே விழுந்தது. எனக்கு என்னவோ அந்த கேள்வியை கேட்ட பெண் யாரென்று பார்த்துவிடவேண்டும்போலிருக்க, அந்த வகுப்பு நிறைவடைந்ததும் அங்கு சென்றேன்.

பிள்ளையள் கேளுங்கோ ஒருக்கா. யார் பெண்கள் பெண்ணியம் ஆண்களெண்டு கேள்வி கேட்டது?’ என்றவாறு என் பேச்சை ஆரம்பித்தேன். தயக்கத்துடன்நான்தான் அக்காஎன்றவாறு என்னைப்பார்த்தாள் அவள். அவள் ஸ்வாதி. வயதுக்கு மீறிய அவள் சிந்தனை என் ஆர்வத்தைதூண்டிவிட,உனக்கு எப்பிடியம்மா இதெல்லாம் தெரியும்?என்றவாறு அவளருகில்போய் அமர்ந்தேன்.
 ‘எனக்கு அம்மா இல்ல. அப்பாதான் எல்லாம். அவர்தான் இப்பிடி நெடுக எதாவது சொல்லுவார். அவர்தான் இதயும் அண்டைக்கு முணுமுணுத்துக்கொண்டிருந்தார்என்றவாறு தட்டுத்தடுமாறி சொல்லிமுடித்தாள்.
என்மனதில் என்னவோ பொறிதட்டியதுபோல் தோன்றியது.

 ஏன் இந்தசமூகம் பெண்களைப்பற்றி அதிகமாக பேசுவதுபோல் ஆண்களைப்பற்றிய விடயங்களை ஓரளவுக்கேனும் வெளிப்படுத்திக்கொள்வதில்லை.

இன்றுவரை ஆணென்பவன் ஒருகுடும்பத்தின் முதன்மையாளனாயும், வலிமையுடைய ஒருவனாயும் மட்டுமே குறிப்பிட்டோ அல்லது முதன்மைப்படுத்தியோ வந்த சமூகம் அவனுக்குள் இருக்கும் மென்மைத்தன்மையையும் உணர்வுகளின் பரிணமிப்பையும் வலிகளையும் கண்ணீரையும் வெளிப்படுத்துவதில்லை. ‘ஆணென்றால் அழக்கூடாதுஎன்றவாறான ஒரு கருத்தை இச்சமூகமானது விதைத்துவைத்துள்ளது என்றும் சொல்லிக்கொள்ளலாம்.

ஒரு ஆண் என்பவன் யார்?
பெண்களைவிட ஆண்களே விரைவாக - அதிகமாக உணர்ச்சிவயப்படுதல் என்பதில் முன்னணியிலுள்ளவர்கள். ஆனால் ஏற்படுகின்ற உணர்வை வெளிக்காட்டிக்கொள்ளாமல் உடனடியாகவே தம்முள் மறைத்துக்கொள்ளக்கூடியவர்கள். இதனால்தான் பெண்களைவிட ஆண்கள் வலியவர்களாக கூறப்படுகின்றார்கள்.
உண்மையிலே ஒரு ஆண் என்பவன் ஆழமான உணர்ச்சிகளுக்கு சொந்தக்காரன். விட்டுக்கொடுத்தல், பொறுப்பை பூரணமாக நிறைவேற்றுதல், கண்டித்தல், கடிந்துகொள்ளல் என அத்தனை எண்ணங்களையும் தனக்குள்ளே அடக்கிய, பெண்ணைப்போன்ற ஒரு அற்புதப்படைப்பு. ஆனாலும் வன்மையான உணர்வுகளை வெளிக்காட்டினாலும் மென்மையான உணர்ச்சிகளை இவன் வெளிக்காட்டுவதில்லை.
ஆண்களுக்கும் அழுகை வரும் ஆனால் மனதிற்குள்ளேயோ யாருமற்றதொரு தனியிடத்தில் நின்றோ அழுதுமுடித்துவிடுவார்களேயொழிய அழுகையை வெளிப்படையாக உணர்த்துகின்ற ஆண்கள் குறைவான சதவிகிதமே. இது உளவியல் சொல்லும் உண்மை.
ஆண்கள்தான் பெண்களை அடிமைப்படுத்தவேண்டும் என்பதில்லை. எங்கள் சமூகத்திலேயே வெளித்தெரியாத வகையில் எத்தனையோ ஆண்கள், பெண்களால் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். பல குடும்பங்களில் ஆண்களது பேச்சு, எண்ணம் என்பன கருத்தில் எடுக்கப்படுவதே இல்லை. ஆனால் இவையெல்லாம் சமூகத்தில் பிரச்சனைகளாக பெருமளவில் உருவெடுப்பதில்லை என்றே கூறலாம். ஆசியநாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளில் இப்பொழுது பெண்களுக்கான அமைப்புக்களைப்போல ஆண்களுக்கான அமைப்புக்களும் தோன்றி, வளரத்தொடங்கிவிட்டன. அங்கு ஆணடிமைத்தனம் எதிர்க்கப்படுகிறது. அவர்களுக்கான உரிமைகள் பெற்றுக்கொடுக்கப்படுகின்றன. அவர்களது பாதுகாப்புக்கள் உறுதிசெய்யப்படுகின்றன. ஆனால் இங்கு இவ்வளவு ஆழமாக இவ்விடயம் தாக்கம் செலுத்தவில்லை. காரணம் ஆண்களுக்கான உரிமைகள் அவ்வளவுதூரம் இங்கு மறுக்கப்படுவதோ விலக்கப்படுவதோ இல்லை.
அன்றும்கூட ஒரு முதியவரை சந்திக்க நேர்ந்தது. வீதியோரத்தில் அநாதரவாக நின்றிருந்தார். மெதுவாய் அவரிடம் பேச்சுக்கொடுத்தேன்.

என்ன அய்யா தனிய நிக்கிறியள்? எங்க போகவேணும்?’

.. தனியத்தான் பிள்ள.. வாழ்க்கை எங்க போகுதோ அங்க போறன்
என்றபடி விரக்தியோடு கலந்துவந்தது அந்த பதில்.

என்ன அய்யா வீடெங்க உங்களுக்கு?’

வீடு வாசலிருந்தா நான் ஏன்பிள்ள இங்க நிக்கபோறன்.....’
என்று ஆரம்பித்தவர் தன் சோகத்தையெல்லாம் கண்ணீரினிடையே சொல்லிமுடித்தார்.

‘..எனக்கும் வீடுவாசல் எல்லாம் இருந்திச்சு. கலியாணம் கட்டின நாளில இருந்து எல்லாம் துலைஞ்சுபோச்சு கண்டியோ. என்ர மனிசி என்னை கதைக்கவே விடாள். என்ர ஆசை பாசம் கவலை எல்லாம் சொல்ல ஆளில்லாம மனசுக்கயே கிடக்குது. இப்ப மனிசியும் செத்துபோச்சு. பிள்ளயளும் என்ன விட்டிட்டுதுகள். இப்ப என்ர வீட்ட வித்துப்போட்டு கோயில் கோயிலா திரியுறன். அங்கயாவது என்ர நிம்மதி கிடைக்குதோ பாப்பம். உதில சன்னிதி பஸ் வந்தா என்னையொருக்கா ஏத்திவிடு
என்றபடி கண்கலங்கியவாறு சொல்லிமுடித்தார்.
இவ்வாறான அடக்குமுறை ஒருபக்கமிருக்க, பொறுப்பை நிறைவேற்றுவதற்காக தன்னைப்பற்றி சிந்திக்காத ஆண்கள் ஒரு வகை.
ஒரு சனிக்கிழமையளவில்சாந்திநிலையம்சென்றிருந்தேன். அங்கே ஒருவர் தனியாக அமர்ந்திருக்க அவரிடம் பேச்சுக்கொடுத்தேன். அவரும் தன்னைபற்றிய ஒருசில விடயங்களை என்னோடு பகிர்ந்துகொண்டார்.

‘...எனக்கு ஏழு பெண்சகோதரம். நான்தான் குடும்பத்தில மூத்த பிள்ள. எங்களுக்கு குடிசைவீடுதான் கதி. இப்பிடியிருக்கேக்க என்ர 25 வயசில ஐயாவும் அம்மாவும் செத்துபோச்சினம். அவளவய கரசேக்கிற பொறுப்புமுழுக்க எனக்குத்தான். ஒவ்வொருத்தரா கரசேத்துமுடிய எனக்கு தலை நரைச்சுபோச்சு. இதுக்குமேல எனக்கு என்ன வாழ்க்கையில..’
என்றவாறாக தனது பொறுப்பை சரியாக நிறைவேற்றிய திருப்தியை மட்டும் சுமந்துகொண்டு அமர்ந்திருந்தார்.
இது இப்படியிருக்க நண்பன் ஒருவன் தொலைபேசியில் நீண்டநாளின் பின் அழைத்திருந்தான்.

எப்பிடியிருக்கிறாய். எனக்கு அவசரமா உதவியொண்டு வேணும். என்ர நண்பன் ஒருத்தனுக்கு கலியாணம் முடிஞ்சு ஒரு வருசத்துக்குமேலயாகுது. என்ன பிரச்சினயெண்டே தெரியல. அவன்ர முந்தின சந்தோசம் இப்ப இல்ல. மனிசியோட ஏதும் பிரச்சினையோ எண்டு கேட்டாலும் சொல்லுறானில்ல. ஆனா அடிக்கடி சொல்லுறான் தன்ர மனசை  யாருமே புரிஞ்சுக்கல எண்டு.
நான் நேரடியாவே கேட்டுப்போட்டன் மனிசியோட என்ன பிரச்சின எண்டு?

அவன்பிரச்சின எதுவுமில்ல. ஆனா ரெண்டுபேருக்குள்ளயும் அடிக்கடி சண்டை வருகுது. அவளுக்கு எல்லாம் நான் பாத்துபாத்து செய்யுறன் மச்சான். ஆனால் அவள் என்னைப்பற்றி கொஞ்சமும் யோசிக்கிறாளில்லஎண்டுசொன்னான். எனக்கென்னவோ ரெண்டுபேரையும் ஒருக்கா கவுண்சிலிங் அனுப்பினால்  நல்லதுபோல கிடக்கு.’
என்றபடியாக என் கருத்தையும் கேட்டு, உளவள நிலைய  முகவரியையும் பெற்றுக்கொண்டு விடைபெற்றான். அப்பொழுதுதான் சிந்தித்தேன், ஒரு ஆண் திருமணத்தின்பின் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையாயின் இறுதியில் அது மணமுறிவுவரை கொண்டுசென்றுவிடுகிறது.
எப்படி ஒருபெண்ணானவள் தன் தந்தையிடமிருந்து, சகோதரனிடமிருந்து, காதலனிடமிருந்து, கணவனிடமிருந்து சிறிய விடயங்களில்கூட அன்பை நட்பை காதலை நேசத்தை நெருக்கத்தை எதிர்பார்ப்பாளோ அதனைப்போல ஒரு ஆணும் தன் தாயிடமிருந்து, மனைவியிடமிருந்து, சகோதரியிடமிருந்து, மகளிடமிருந்து அன்பை நெருக்கத்தை காதலை நட்பை எதிர்பார்ப்பான். ஆனால் வித்தியாசம் என்னவென்றால் இந்த எதிர்பார்ப்புக்களை பெண்கள் வெளிப்படுத்துவார்கள்.ஆண்கள் அவ்வளவு சுலபமாக வெளிப்படுத்த மாட்டார்கள்.
இதற்கு எமது சமூக-பண்பாட்டு அமைப்புக்கூட ஒரு காரணமாயிருக்கலாமென உளவியலாளர்கள் கருதுகின்றனர்.
இவற்றினிடையே இணையத்தில் படித்த பதிவொன்றும் நினைவிற்கு வந்தது.

சர்வதேச ஆண்கள்தினம் நவம்பர் - 19 

 Ø    
ஆண் என்பவன் கடவுளின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.
அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான்,
அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.
பின் தன் காதலை தன் பெற்றோர்களின் முகத்தில் ஏற்படும் ஒரு புன்னகைக்காக தியாகம் செய்கிறான்.
தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.
அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான்.
ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான்.
எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான்.
அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.
இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.
உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான்  என்பதை  நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.
அவனுக்காய் உங்கள் கரங்களை நீட்டுங்கள். அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.
ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள்.
ஆணும் அழகியதொரு கவிதை
இந்தப்பதிவு சிரிப்பை வரவைத்தாலும் அதன் பின்னாலுள்ள உணர்வுகள், கருத்துக்கள் என்பன சிரிப்பிற்குமட்டுமானதல்ல. எல்லோருக்கும் மகளிர்தினம்பற்றி தெரிந்திருக்கும். எத்தனை பேருக்குசர்வதேச ஆண்கள் தினம்’ (நவம்பர் 19)பற்றி தெரிந்திருக்கிறது?

சர்வதேச ஆண்கள்தினம் சட்ட பூர்வமாக, Dr Teelucksingh என்பவரால் 1999ம்ஆண்டு, TrindadTobagoவில்  கொண்டாடப்பட்டது. இந்தியாவில், முதன் முதலில் 2007ம்ஆண்டில்  ‘ஆண்கள் உரிமைகள் கழகம்என்ற அமைப்பு இந்த தினத்தைக் கொண்டாடியது.

இந்த நாள் பிரகடனப்படுத்தப்பட்டதன் முக்கிய நோக்கம் :-
Ø    சமுதாய முன்னேற்றத்துக்குப் பாடுபட்ட சிறந்த ஆண்களின் பங்களிப்பையும் தியாகத்தையும் கௌரவப்படுத்துதல்.

Ø    சமூகத்தில் அதிகரித்து வரும் ஆண்களின் தற்கொலை விகிதம், ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை, தந்தைமகன் உறவு சிக்கல்கள், சமூகத்தில் ஆண்கள்  எதிர்கொள்ளும் பாலினரீயிலான பிரச்னைகள் மற்றும் சவால்கள் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி, விவாதித்து, தகுந்த உதவிகள் மூலம் இவற்றை தீர்க்க  முயற்சியெடுத்தல்.

 பெண்ணை எப்படி அழகியதொருகவிதை  என்பார்களோ அதேபோலத்தான் ஆணும் அழகியதொருகவிதை - அதனை சரியாக படிக்கத்தெரிந்தவர்களுக்கு!

(மைத்தூறல் - Nov 5, 2015 இல் வெளியானது)