Monday, December 12, 2011

பார்த்து மகிழ யாரும் இல்லாத பாழடைந்த என் - கிராமத்து வீடு!


பச்சை வயல்களும்:
பட்டு தெறிக்கும்
வானமும்:
சிட்டுகளின்
சிணுங்கலும்:
மெட்டிசைக்கும்
தென்றலும்
எங்களூரில்
கவிபாடும்...

பொட்டல் வெளிகளும்
தென்னங் காணிகளும்
தெவிட்டாத இன்பமாகும்
எமக்கு தெம்மாங்கு பாடலாக...


புளுதிக்காட்டிலும்
வெய்யிலின் சூட்டிலும்
சிறகடித்து திரிந்தோம்
சுதந்திர பறவைகளாக...


ஏழைகள் தான்
ஆனாலும்
அன்பிலும்- மகிழ்விலும்
குறைந்துவிடவில்லை நாம்...

  
ஆனால்
விதியின் சதியோ
இல்லை அதுதான்
எம் விதியோ...

பிறந்த மண்விட்டு
தவழ்ந்த நிலம் விட்டு
தாயின் உறவிழந்து
தறிகெட்டு தள்ளாடினோம்..

வயல் நடுவில்
சுவாசித்த
சுதந்திர காற்றெங்கே..?


சிரித்து மகிழ்ந்து
சுற்றிவந்த
தென்னந்தோப்பெங்கே..?


புளுதிகாட்டில்
துள்ளிக்குதித்த
பொட்டல் வெளிகள் எங்கே..?


இத்தனையும்
எண்ணிய என்னுள்ளே
பெருமூச்சொன்றே
பதிலானது...

மனதினில்
பழைய நினைவுகள்:
விழியில்
சில நீர்துளிகள்...

நீண்டகால
இடைவெளியின் பின்
சொந்தமண்ணின் வாசனை...

சிலிர்க்கிறது
நெஞ்சம்..

முன்னைய நினைவுகளுடன்
தவழ்ந்த இடம் தேடி
ஓடுகிறேன்..

அங்கே
எனக்காய்
காத்திருக்கிறது
பார்த்து மகிழ யாரும் இல்லாத
பாழடைந்த என் -
கிராமத்து வீடு மாத்திரமே...!



No comments:

Post a Comment