Saturday, September 12, 2015

கண்ணீர்ப்பாத’ரசம்’



விரிந்த கண்களுக்குள் எதையோ தொலைத்த சோகத்தோடு தனியாக சிரித்துக்கொண்டிருந்தாள் அவள். மெல்லமெல்ல இருட்டத்தொடங்கிய அடிவானை பார்த்தபடி அன்றைய சம்பவங்களை அசைபோட்டுக்கொண்டிருந்தாள். இல்லை இல்லை மனதினுள் பதிந்தவற்றை அழிப்பதற்காய் முயன்றுகொண்டிருந்தாள்.

இது நல்லூரான் கொடியேற்ற காலம்.
யாழ்ப்பாணமே களைகட்டி விழாக்கோலமாய் பூரித்து நிற்கும். யாழ்ப்பாணத்தின் திமிரே நல்லைக் கந்தனின் கோபுரம்தான் என்று சொல்லுமளவுக்கு இது ஒரு பெருவிழாக்காலம்.

’’எல்லாரும் நல்லூருக்கு போயினம். நானும் போகவேணும். ஆரோட போறது. ஆருமே இல்லாத நான் ஆரோட போறது. அவரத்தான் கேக்கவேணும். ஆனா அவருக்கும் நேரமிருக்கோ தெரியா’’

தனக்குள்ளாக நேற்று இரவு புலம்பிக்கொண்டாள் அவள்.

‘’இஞ்ச நாங்கள் நாளைக்கொருக்கா நல்லூருக்கு போவமே?’’ என்று அவன் கேட்க பட்டாம்பூச்சியாகி பறந்ததென்னவோ அவள்தான். 

’’நான் அங்க போய் முருகனை கும்பிடுவன். அங்க இருக்கிற மணிக்கடையில இவர்ர கைய பிடிச்சபடியே நிறைய சாமான் வாங்குவன்.’’

‘’எங்க எங்கயோ இருந்தெல்லாம் நிறைய சனம் வருமாம் குடும்பத்தோட. நானும் நாளைக்கு  போவன்’’
என்றபடி தூங்கத்தொடங்கியது அவள் கனவு.

மறுநாள் நல்லூர் வீதியில் அவனது கைகளை பிடித்தபடியே அழகனின் தரிசனத்தோடு ஆரம்பித்தது மணிக்கடை உலாத்தல்.

என்றும் அவள் குழந்தை மனதிற்கும் கேலிபேச்சிற்கும் கபடமற்ற புன்னகைக்கும் அடிமையான அவன் அவள் கண்களுள் தொலைவதையே வழக்கமாககொண்டிருந்தான். அவள் பேசும் கேலிகளை ரசிக்கத்தெரிந்த அவனுக்கு என்னவோ இன்றையநாள் ரசனையில்லாமல்போனது.

‘இஞ்ச உந்த பழய கதை கதைக்கவே இஞ்ச வந்தனி. முடிஞ்சுபோனதையெல்லாம் திருப்ப கேக்கவேணுமெண்டுதானெ இப்ப சொன்னனி?’’ 
என சம்பந்தமற்ற வார்த்தைகளைக்கொண்டு கோபத்தை கொட்டித்தீர்த்தது அவன் வார்த்தைகள்.

‘’நாந்தான் விசரிபோல. எனக்கு உந்த வாய் சும்மா கிடவாது. நாந்தான் பிழையா என்னத்தையோ கதச்சுப்போட்டன்’’ என்று மனதிற்குள்கூட அவனை விட்டுக்குடுக்கமுடியாதபடி கண்ணீரை மனதிற்குள் மறைத்தவளாய் அவன்பின்னே வீடுவந்துசேர்ந்தாள்.

இருவரும் பேசிக்கொள்ளாத இந்த தனித்திருக்கும் பொழுதுகளில் இதையெல்லாம் மறக்க நினைத்தபடி நல்லூருக்கு போவதற்குமுன்னான ஒரு கணத்தை எண்ணிப்பார்த்தாள்.

’’அடியேய் உனக்கொண்டு தெரியுமே. நான் இண்டைக்கு அவரோட நல்லூருக்கு போகப்போறன்டி. அங்க போறது பெரிசில்லையடி. அவர்தாற அந்த அன்புதான் பெரிய புதையல் எனக்கு’’ 
என்றபடி குழந்தையாகி தோழியோடு பேசிக்கொண்ட ஒரு சில வார்த்தைகள்.

எவ்வளவு பெரிய முட்டாள் அவள்.

அவள் கண்களிலிருந்து மையோடு கரைந்தபடி உருண்டு விழுந்த கண்ணீர்த்துளியொன்று சற்றுமுன்னர்தான் நல்லூரின் மண்மேடுகளில் ஒன்றில் காய்ந்து புதைந்துபோயிருந்தது.


-பிறைநிலா-

No comments:

Post a Comment