Saturday, July 14, 2012

சொல்லப்படாத சோகம்...


கரும்பாறை
நடுவிலே
விரியலாய்
தெரியும் பூமி..

விரிந்த பூமிதனிலே
சலசலத்து ஓடும்
ஓடை நீர்..

ஓடைக்கரை தனிலே
ஒற்றையாய் நிற்கும்
அத்தை மகள்..

அஞ்ஞனம் பூசி
அழகுற்ற கண்ணிற்குள்
அரைகுறையாய் விழிநீர்
வழிபார்த்து வழிந்தது..

கண்ணிட்ட மை கரைந்து
கவிதையாய் கைகோர்த்து
விண்முட்ட இடியோடு
பண்ணிட்டு இசையாகியது..

தொட்டுச்சென்ற காற்று
விட்டுச் சென்ற காதலை
கட்டிச் செல்ல நினைத்தவள்
மெட்டுக்கட்டி விக்கினாள்..

அலையாக அலைந்த
கருநாக கூந்தலோ
கனவான சோகத்தால்
காரிருளாய் படர்ந்தது..

மலர்கோதி மணமுடிக்க
மங்கையிவள் காத்திருக்க
களுவேறி கரம் விட்டு
காதலன் போன ஞாயமென்ன..?

விண்ணின் நிலவிடமும்
எண்ணின் பலவிடமும்
ஏவியவள் சரிகின்றாள்
தன் துணைவன் எங்கேயென..?

துஞ்சியவன் அஞ்சியவன்
வெஞ்சி வசை பாடியவன்
அத்தனைக்கும் புள்ளிவைக்க
அத்தான் போன மாயமென்ன..?

நெஞ்சை நெடிதுயர்த்தி
நீதிக்கு வலி சுமந்து
நீடித்த சோகத்தை
நிழலாக்கி தணலானான்..

நாளைவரும் நாளெண்ணி
நங்கையிவள் காத்திருந்தாள்
நறுமலர் சூட்டிவிட
நட்டுவைத்தாள் 
நந்தவனம்..

நாட்களாச்சு
நாட்கள் பலகடந்து
நரைகூட முளைச்சாச்சு
நம்பிக்கை மட்டும்
நெட்டுயர்ந்து
வேர்விட்டு கிளையாச்சு..
ஆனால்
கைப்பிடிக்க காத்திருக்கும்
கரத்திலொன்று வரவேயில்லை...! 

No comments:

Post a Comment