Sunday, June 16, 2013

தந்தைக்கு ஒரு மாலை...




தன்னந்தனியே 
தாய்வயிறு கிழித்து 
மண்தொட்ட அந்தநேரம் 
என்னைத்தொட்ட 
முதல் உறவு 
நீயே அப்பா...

என் 
ஒற்றை விரல் கோர்த்து 
வாழ்க்கைபயணத்தை 
தொடக்கிவைத்தாய்...

பெண்ணாய் 
நான் பிறந்தேனென 
பெருமையோடு 
நீ மகிழ்ந்தாய்... 

காற்று வெளியினில் 
கைகோர்த்து 
கதைகள் 
பல சொன்னாய்... 

என் 
பாதம் பிடித்து 
நடை பழக்கி 
நீ மகிழ்ந்தாய்... 

மனதிற்கு மட்டுமல்ல 
அறிவிற்கும் 
கற்றுத்தந்தாய் 
பல கலை... 

நான் 
சிந்திடும் கண்ணீரில் 
உன் இதயத்தில் 
வலி கண்டாய்... 

என் 
புன்சிரிப்பில் 
துள்ளிக்குதித்தாய்
உலகை வென்றதாய்... 

இன்று 
என் பாதையின் 
ஒவ்வொரு அடியும் 
வருகின்றதே
உன் சுவட்டை தொடர்ந்து... 

ஆண்களில் 
தாய் நீ... 
அன்னையின் 
மறு உரு நீ... 

திறமைக்கு திறமையும் - 
துணிவுக்கு தனித்தன்மையும் 
நீ கற்றுத்தந்தவைதானே 
அப்பா... 

மீண்டும் 
ஒருமுறை 
மழலையாவேனா? 
உந்தன் மடியினில் நான் தூங்க...?

 கவியன்புடன்
பிறைநிலா- - 

Thursday, June 6, 2013

காய்ந்த கனவு..


நீண்டுபோன இரவுகளில்
நிழலைத்தேடி
தொடர்கிறது 
என் பயணம்..

நிசப்தமான
இடுகாடுகளிடையே
விடையின்றி
தேடுகின்றேன் என்
வினாக்களை..

மாண்டுபோனது
என் கனவு..
மரித்தலில் சுருண்டு
தீய்ந்து போனது..

கோடுபோட்ட 
வேலிதாண்டி
காலியான
வானைநோக்கி
கருகிப்பறந்தது
காய்ந்த கனவு..

காற்றோடு
அலைமோதி
காகிதத்தில் கரியாகி
தொடமுடியாமல்
தடுமாறிவிழுந்த கனவு
தலைதெரியாமலே போயிற்று
தணலோடு இன்று
வேகிற்று..!

Thursday, April 11, 2013

16 நாட்களின் வனவாசக்குறிப்பு.. (Future Leaders Friendship-2)


16 நாட்கள் வனவாசம் முடித்து
வீடுதிரும்பக் காத்திருப்போம்..
கனவுகள் பலகொண்டு
நினைவுகளை சுமந்திருப்போம்..

புதுவித அனுபவம்..
அதில்
தினம் தினம்
ஒரு யுகம்..

சில பொழுதுகளில்
இன்பங்கள்..
சில பொழுதுகளில்
துன்பங்கள்..

ஏச்சுக்களும் 
பேச்சுக்களும்
சகஜமாயின
எமக்கு..

தண்ணீருக்கு சண்டை..
குளியலுக்கோ
மிகப்பெரும் சண்டை..

முன்பு
தபாற்காரன் 
தெய்வமாய் தெரிந்தான்..
இன்று
தண்ணி பவுசர்காரன்
தெய்வமானான்..

வீட்டு நினைப்பு
மனதை அழுந்த
விழிகள் கலங்கியபடி
காத்திருந்தோம்..

எதுவாயிருந்தாலும்
நட்பினில் மட்டுமே
இன்பம் கண்டோம்..
மனம் மலர்ந்தோம்..

பலவற்றில் பிரிவினைகள்..
பரிதவிப்பில் சிலநொடிகள்..
நினைக்கமறக்கும் நினைவுகளை
மீட்டுவதில் இன்பம் கண்டோம்..

சில பொழுதில்
புரிந்துணர்வு விட்டுப்போனது..
ஆனால்
நட்பு கைகொடுத்தது..

பற்பல அதிகாரங்கள்..
அதனால்
அடக்குமுறையில்
கழிந்தன நாட்கள்..

எனினும்,
கண்ணீர் துடைத்தது
நம் நட்பு..

காலமெல்லாம்
கைகோர்ப்போம்..
நட்பின் மடியில்
தினம் மகிழ்வோம்..

நாளைய விடியலெண்ணி
இன்றே 
தூக்கம் தொலைத்தோம்..
விடைகொடு நட்பே,
பிரிந்துபோகின்றோம்
நாளைய பொழுதில்..

இது நம்
16 நாட்களின் 
வனவாசக்குறிப்பு...!