Sunday, June 1, 2014

யுகம் பல தாண்டியதாய்..!


இன்றைய முதன்நாளில் 
சிறகடித்து பறந்திருந்தோம்...
சில கர்வங்களையும் 
பல சிரிப்புக்களையும் 
உனக்காகவே உதிர்த்திருந்தேன் நான்...

உன் நெருக்கம் 
உனதான என் கிறக்கம் 
நம் அணைப்பு அணைப்பினூடே 
ஜனித்துப்போன 
நேசத்தின் துளிர்ப்பு 
இதையும் தாண்டியதாய் 
உன் ஆண்மையில் உறைந்துபோன 
தாய்மையின் தனி ஸ்பரிசம்... 

நமக்கான தேசமதில் 
என்னை மட்டும் ரட்சிப்பதற்காய் 
நீ ஒரு ஆண் தேவதைபோல் தெரிந்திருந்தாய் 
இந்த விழிகளுக்கு...

ஸ்வாசத்தில் நிறைந்தாய் 
என் நேசத்தில் மலர்ந்தாய்.. 
எனக்குள் மலர்ந்து 
என்னையே இழுத்துக்கொண்டாய்...

வற்றிவிடாத ஜீவநதி நீ...
உன் அலையடிப்பில் 
ஜனித்து சிதறும் நீர்க்குமிழி நான்...
நீ மீட்டுகின்ற இசைவீணையாய் 
நாதமெழுப்பும் என் ஜீவன்...

உன் பேச்சுக்களின் அணைப்பிலும் 
கண்பார்வைகளின் இமைப்பிலும் 
இணைந்துபோனேன் உன்னிடத்தில் 
ஸ்பரிசமற்ற அணைப்புக்களாலே...

அஹிம்சையாய் இம்சிக்கும் 
உன் காதல் போதும் 
உன்னவளாய் நான் உருக்கொண்டு 
யுகம்பல தாண்டிட.. 

காமத்தில் 
காதலை சிதறவிடாது கோர்க்கவும் 
காதலில்
தாய்மையை அழகாக்கிச் சூடவும் 
உன்னால் மட்டுமே முடிகின்றது...

கணவனாய் காதலனாய் 
அண்ணனாய் அன்னையாய் 
சமயத்தில் தோழனாயென்று 
பன்முகம் கொண்ட பாசாங்கற்ற திறமை நடிகன் நீ...
உன் நடிப்பின் உறைதலில் 
சிறகடித்துபறக்கும் சிட்டாய் 
உன் பின்னே நான்...

வா செல்வோம் 
யுகம் பல தாண்டியதாய்
நீயும் நானும் சிறகடித்து பறப்போம்...
அந்த ஆதித்தாயின் பிள்ளைகளாய் 
நாம் மட்டும் மீண்டும் மீண்டும் ஜனிப்போம்...


(காதலர்களுக்காய் ஓர் கற்பனையுலகு)

-பிறைநிலா- 

Tuesday, February 11, 2014

அத்தான் உனை ..



உந்தன் விழிசொல்லும் 
ஒற்றை வார்த்தையில் 
பற்றிப்பிடிக்கின்றது 
நாணம்... 

உந்தன் 
மீசைநுனி சொல்லும் 
ரகசியவார்த்தையில் 
வற்றியே போகின்றது 
வெட்கம்... 

கைகள் கோர்க்கத்தான் 
தொட்டு விலகத்தான் 
அத்தான் உனை 
அன்பால் அணைக்கத்தான்... 

மௌனித்த பல 
நொடிகளில் 
இதழ்களால் 
கோடிமுறை பேசிவிடுகிறாய்... 

புன்னகையை 
மட்டும் விதைக்கிறது 
பெண்மை...
அதையேனும் விட்டுச்செல் 
களவாடிப்போகாமல்.. 

(யாவும் கற்பனையே.) 

-பிறைநிலா-

Friday, January 31, 2014

வந்துவிடு..!



வா..
வந்து பூட்டிக்கொள்..
வாட்டமில்லாத
உன் இமைகளோடு
வருடிக்கொள்..

தேய்கின்ற காலங்களை
தேயாமல்
பார்த்துக்கொள்வோம்..

ஓயாத கடல்
பெருக்கி
ஆடையாக
உடுத்துக்கொள்வோம்..

வானவில்லை வட்டமிட்டு
தெம்மாங்கு
நாம் படிப்போம்..

தென்றலைத் தேராக்கி
தேவலோகம்
போய்வருவோம்..

என்மேல்
உனை உடுத்து..
உன்மேல்
எனை அணைத்து..

உந்தன் நெஞ்சில்
ஒட்டிக்கொள்
எந்தன் உயிரை..

இரு விரலிடையில்
தைத்துக்கொள்
எந்தன் இதழ்களை..

உனைநோக்கி 
எனையிழுத்து
உயிரோடு
கவியெழுது..

வா..
வசந்தங்கள் 
பல சொல்லி
வருத்தங்களை
களைந்துவிடு..
வந்துவிடு..!

கவியன்புடன்
-பிறைநிலா-

Thursday, January 30, 2014

புரியவில்லை..



உனக்குத்தான் புரியவில்லை 
எந்தன் நேசத்தின் 
ஆழம் என்னவென்று...

உனக்குத்தான் புரியவில்லை 
நான் வாடும் தனிமையில் 
நீ வேண்டும் என்பது...

உனக்குத்தான் புரியவில்லை 
உலகமெல்லாம் நீயாகி 
என்னை 
உருக்குலைக்கிறாய் என்பது... 

தூங்கும்போதும் 
உன் ஞாபகம்...
விழிகளுள்ளும் 
உன் பார்வைகள்...

இதயத்தில் என்றும் 
உன் வார்த்தைகள்...
தனியாய்த்தான் தவிக்கிறேன் 
என்றாலும் 
நீ வாழ்கிறாய் என்னுள்ளே...

தோற்றுத்தான் போய்விட்டேன் 
உன்னிடத்தில் மட்டுமல்ல.. 
இந்த உலகத்தின் 
பார்வையிலும்தான்...

-பிறைநிலா