Saturday, October 26, 2013

பூனைகள் உலகம்..


எங்கோ 
நீண்டுபோகின்ற
இரவு..
அதற்குள் 
தொலைந்துபோகின்ற 
நிலவு..

மௌனங்கள்
உடைபட்டு
மோகங்கள்
தடைப்பட்டு
சலங்கள்
விதைக்கப்படுகின்றன..

சுவர்களை சுற்றியும்
‘மியாவ் மியாவ்’ 
சத்தம்..

பச்சை நிற விளக்கு
அதில்
பளிச்சிட்டு எரியும்
நெருப்பு..

இரைகளைத்தேடியதாய்
இரைச்சலைக்கிளப்புகிறது
இயற்கை..

கறுப்பு பூனைகளின்
மரத்துப்போன நாவிற்கு
மலர்ந்து மணம்பூத்த
மலர்களே இரையாக..

வெள்ளை நிற
பூனைகளின்
வண்ணநிறம்கூட
விஷமாகும் காலமிது..

எந்த நிறமென்றாலும்
இவை யாவும் ஒரே
தரம் அன்றோ..
எங்கும் 
மலர்களை சிதைத்துப்போக
மானிடராய் பிறந்ததன்றோ..

எங்கெங்கிலும்
பச்சை நெருப்பு..
அதில் கருகிச்சரியும்
மங்கை விருப்பு..

மீண்டும்
எங்கோ 
நீண்டுபோகின்ற
இரவு..
அதற்குள் 
தொலைந்துபோகின்ற 
நிலவு..


-கவியன்புடன்
பிறைநிலா-

Tuesday, October 22, 2013

அண்ணனுக்காக..


அண்ணன் தங்கை உறவில் எப்போதும் ஒரு காமம் இல்லா காதல் இருக்கத்தான் செய்கிறது... 

காதலனாலோ அல்லது காதலியாலோ அந்தக்காதலை தந்துவிட முடியாது... 
தாய்மையுடன் கலந்த கண்டிப்புக்களும் 
நட்புடன்கூடிய அன்பான காதலும் என்றும் அண்ணன்களுக்குமட்டுமே சொந்தமானவை... 

அண்ணன்களுக்காய் தங்கைகள் கொடுக்கும் முத்தத்திலும் - 
தங்கைகளுக்காய் அண்ணன் கொடுக்கும் முத்தத்திலும் அணைப்பினிலும் 
காமம் கலப்பதில்லை...

அது தாய்மை கடந்த தூய்மையாய் வெளிப்படுகின்றது.. 


ஆனந்தத்தின் நடுவினிலே அழுகை வரவைக்கவும் 
அழும் பொழுதுகளில் புன்னகைக்க வைக்கவும் இவர்களால் முடிகிறது... 

செல்லமான குட்டுக்களும் 
இன்பமான திருகல்களும் இவர்களுக்கேயுரிய அன்பின் வெளிப்பாடு... 

தங்கை அழுதால் தானும் அழுவதும் தங்கைக்காயே தான் வாழ்வதும் அண்ணன்களுக்கேயுரிய சிறப்பு... 

தங்கைக்கு ஒன்று என்றால் தன் உயிரை வருத்துவதிலே தெரிகிறது இவர்களது பிஞ்சு நெஞ்சம்... 


ஒரு நண்பனாய் ஒரு குழந்தையாய் ஒரு தாயாய் சில பொழுதுகளில் தந்தையாய் மாறிவிட இவர்களால்மட்டுமே முடிகிறது. 

தன் தங்கையை ஒரு தோழியாய் ஒரு குழந்தையாய் ஒரு தாயாய் மாற்றிவிடவும் முடிகிறது 
இவர்களது தூய்மையான அன்பின் வலிமையினால்... 

அண்ணன் ஒருவன் இருந்தாலே போதும் 
தங்கைகளின் உலகம் மலர்ந்துவிட... 

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
அண்ணனுக்காக
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
~கவியன்புடன் 
பிறைநிலா~ 
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


Thursday, September 5, 2013

ஓர் ஊமை தா(வே)சியின் உளறல்..


உங்கள் கால் இடுக்குகளுக்கும்
காற் சாராய்களுக்கும்
அழிந்துதான் போகின்றன
எங்கள் பெண்மை..

சுயத்தையும்-சுதந்திரத்தையும்
இருள்களில் மட்டுமல்ல
வெளிச்சங்களிலும் 
இழந்துகொண்டுதானிருக்கிறோம்..

கண்ணகி தான்
நாங்களும்- எம்
மனத்தினால்..

உங்கள்
எச்சிலோடுசேர்த்து
நகக்கீறல்களையும்
சுமக்கும்
இந்த ”உடலங்களும்” 
புனிதமானவைதான்
அழுக்கற்ற எம் மனங்களை
இவை சுமப்பதால்..

நள்ளிரவுகளில் மட்டும்
எம் முனகல்களை கேட்கும்
நீங்கள்
எம் விம்மல்களையும்
சிறிது
கேட்கலாம் இன்று..

மொழிகடந்த அவற்றை
புரிந்துகொள்ள
முடியாதுதான்..
 உங்களால்
எங்களை 
புணர்ந்துகொள்ளமட்டுமே
முடியும்..


கறைபடிந்த எங்கள்
சேலைகளும்:
தலையணை போர்வைகளும்
சொல்லும் இன்னும்
நாங்கள் கறையற்றவர்களென..

எங்கள் காலிடுக்குகளில்
இல்லை கற்பு..
என்றும் உங்களால்
தொடமுடியாத மனதினுள்
வைத்து பூட்டியிருக்கிறோம்..
உடைத்துப்பாருங்கள்-
உறைந்துபோவீர்கள்..

சதைத்தின்னிகளே,
உங்களால் சதைகளை மட்டும்தான்
சிதைக்கமுடியும்..
எம் சரித்திரத்தையல்ல..

Friday, July 12, 2013

என் வருங்கால கணவனுக்காக..


கனவுகளை நான் சுமந்து 
கண்மூடி காத்திருக்கிறேன். 
காலத்தால் நிச்சயிக்கப்பட்ட 
அந்த வரமாகும் திருமண நாள் எண்ணி.. 
என் கை பிடிக்க நீ துடிக்கும் 
அந்த நேரம் 
என் வானமெங்கும் 
வசந்தங்களை தூவும் அந்தி நேரம்.. 
ஸ்வாசங்கள் கூட 
சுகிக்கமறக்கும் 
உன்னை கண்டால்.. 
உன் ஓரவிழி பார்வையில் 
உயிர் உறையவைக்கும் 
மாயம் செய்து...

கோடி ஜென்மம் 
வாழ்ப்போகும் நீ 
எனக்காக என் கனவுகளில் 
இப்படி வாழ்கின்றாய்..

உன் பேரும் தெரியாது. 
உன் ஊரும் தெரியாது. 
ஆனால் எனக்கான ராஜகுமாரனாக 
உன் ஒற்றைக்குதிரை பிடித்து 
எனை என்றோ தேடி வருவாய்.. 
அந்த தேடலின் முடிவில் தான் 
நமக்கான வாழ்க்கை ஆரம்பமாகும்..


என் கனவுகளில் நீ கவிஞனாய் வாழ்கின்றாய் 
என்னை பாடுவதற்காக.
என் கனவுகளில் நீ காதலனாய் வாழ்கின்றாய் 
என்னை காதலின் அன்பினால் கொல்லுவதற்காக.
என் கனவுகளில் நீ ஓவியனாய் வாழ்கின்றாய் 
உன் விழிக்குள் என்னை சிறையெடுப்பதற்காக.
என் கனவுகளி நீ தந்தையாகின்றாய் 
உன் பிள்ளையாய் என்னை தாலாட்டிட. 
என் கனவுகளில் மட்டுமல்ல கண்ணே 
எந்தன் ஜீவனிலும் நிறைந்துபோகின்றாய் 
நீயாக நான் ஆகிட.


ஸ்வாசமே நீயாகிட 
ரசிக்கவேண்டும் உன் நினைவுகளை.. 
கனவுகளில் மாலை கோர்த்து 
சுகிக்கவேண்டும் உன் பொழுதுகளை.. 
உன்னை இமைகளில் சிறையெடுத்து 
இதயத்தில் பூட்டிக்கொள்ளவேண்டும்.. 
நான் மட்டும் உருகி என்றும் 
உன்னழகை பருகிட வேண்டும்.. 
எனக்கானவனாய் மட்டும்
என்றும் நீ மலர்ந்திட வேண்டும்.. 
என்றென்றும் நாம் இணைந்து 
ஏழு ஜென்மம் வாழவேண்டும்.. 

நீ நீயாக வாழ்கிறாய் என்னுள்ளே 
என் பல ஏக்கங்களை சுமந்து.. 
உன்னைப்பற்றிய என் எதிர்பார்ப்பு 
இப்படியாக விரிகிறது மொழிவழியே.. 


பரந்து விரிந்த பூமியிலே 
பலகலையும் கற்றவனாய், 
என் விழிகள் மட்டும் 
பார்ப்பதற்கு மன்மதனாய், 
நட்சத்திர கூட்டத்துக்கே இளவரசாய், 
என் விழி பார்த்து மொழி பேசுபவனாய், 
என் இதயத்தை 
ஒரு பார்வையில் உணர்பவனாய், 
என் மனதின் காயத்திற்கு 
ஒரு காதல் வைத்தியனாய், 
காலமெல்லாம் குறையாமல் 
தினம் என்னை காதலிப்பவனாய், 
உன் தோளோடு சாய்த்து 
என்னை அன்பால் உறங்கவைப்பவனாய், 
உன் தாய்போல என்னை 
தினமும் நோகாமல் நேசிப்பவனாய், 
எந்தன் பிள்ளையாகி என்னை 
இம்சிக்கவைத்து ரசிப்பவனாய்.. 
இன்னும் இன்னும் 
எத்தனை எத்தனையோ 
கனவுகள் என் மனதில்.. 
அதில் நீ மட்டும் தானே வாழ்கிறாய்.. 

சின்னச்சின்ன சண்டைகள், 
மென்மையான கோபங்கள், 
அடுத்த நொடியே புன்னைகைகளுடன் 
இணைந்த அன்பு சொட்டும் பேச்சுக்கள் வேண்டும்.. 
உன் நினைவில் நானும் 
என் நினைவில் நீயும் 
உயிர் உருகும் அந்த நிமிடங்கள் வேண்டும்... 
கோபங்களின் முடிவில் 
பேசாமல் மட்டும் விட்டுவிடாதே.. 
இறந்தே போவேன் நான் 
என் உணர்வில்.. 
என் பிளைகளுக்கு அன்பாய் 
மன்னிப்பாய் நீ ஆயிரம் தடவை.. 
அந்த அன்பே போதும் 
உன் காலடியில் நான் வாழ..

ஆனால் 
நிஜமாக சொல்கிறேன் 
நீ யாரென்றே தெரியாது.. 
உன் ஊரென்ன? பேரென்ன? 
எப்படியிருப்பாய் எதுவும் அறியாது 
நான் மட்டும் காத்திருக்கிறேன் 
என் வருங்காலமாக வரப்போகும் 
உனக்காக 
என் அன்புக் கணவனுக்காக...